இதுதான் நிஜமான பக்தி

பாகவதர் ஒருவர் கஜேந்திர மோட்சம் பற்றி சுவாரஸ்யமாக விவரித்துக் கொண்டிருந்தார். கஜேந்திரன் என்னும் யானை தாமரைத் தடாகத்தில் மலர் பறிக்க வந்தது. குளத்தில் இருந்த கூகு என்ற முதலை, யானையின் காலினை இழுத்தது. முதலையின் வாயில் சிக்கிக் கொண்ட யானை செய்வதறியாது திகைத்தது. தான் வழிபடும் பெருமாளே கதி என்று நினைத்து ஆதிமூலமே என்று அபயக்குரல் எழுப்பியது. குரலைக் கேட்ட பெருமாள் வைகுண்டத்திலிருந்து கருடன் மீது பறந்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினார், என்று சொல்லிக்கொண்டிருந்த போது, உபன்யாசத்துக்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் இடைமறித்தார். 

பாகவதரே! யானையின் கூக்குரல் வைகுண்டம் வரை எப்படி கேட்கும்? அதைக்கேட்டாலும் கூட பெருமாள் உடனே எப்படி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்? என்றார். நிகழ்ச்சியை விவரித்துக் கொண்டிருந்த பாகவதருக்கு இதற்கு பதில் தெரியவில்லை. ஏதோ படித்ததையும், கேட்டதையும் கொண்டு கதை சொன்னவர் விழிக்க ஆரம்பித்து விட்டார். உடனே பாகவதரின் மகன் எழுந்தான். ஐயா! உங்கள் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன், என்றான். சிறுவனின் பதிலைக் கேட்க அனைவரும் ஆர்வமாயினர். 

 மக்களே! வைகுண்டம் என்பது எங்கோ வானத்தில் இல்லை. அவரவர் இருக்குமிடமே வைகுண்டம் தான்! அதாவது கூப்பிடு தூரத்தில் வைகுண்டம் இருக்கிறது. பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறான். நம்பிக்கையோடு அழைத்தால் அவன் உடனே ஓடி வருவான், '' என்றான். அனைவரும் இந்த பதில் கேட்டு கைதட்டினர். நம்பிக்கையே பக்தி என்ற உண்மையை உணர்ந்தனர்.   

கடவுளை அதிகம் சிந்திப்பது யார்? அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர், ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். 

 அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது, அவனது இதயநாயகி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில், அபிமன்யுவின் தாய்மாமன் கண்ணன் அங்கு வந்தார். 

கண்ணாடியைப் பார்த்து கணவனும், மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! என்ன விஷயம்? என்று கேட்டார். மாமா! இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா, பாமாவா, மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன், என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன்! அவன் கண்ணாடியைப் பார்த்தான். 

 அதில் சகுனி தெரிந்தான். இதென்ன விந்தை, என அபிமன்யு கேட்டான். அபிமன்யு! என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால், சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு, என்றார். பார்த்தீர்களா! நோக்கம் எதுவானாலும், பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை! நமக்கு உணர்த்துகிறது..

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!