ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர், ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு போன்று சத்தம் கேட்டது. ஆச்சாரியார் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார். அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.

மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து என்ன விஷயம்? என்று வினவினார்.

அவர் இன்னொரு இளம் இளைஞனை காட்டிச் சொன்னார். இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர். இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.

ஆச்சாரியார் திரும்பி அவரைப் பார்த்தார்.

"ஸ்வாமி, அவர் சொல்றது உண்மதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிடுச்சு. கோவில் வேலைக்கே நேரம் சரியாப் போயிடுது. அதனால, நான் வேற வேலைக்கும் போகமுடியறதில்ல. ஒரு பட்டை ப்ரசாதம் என் குடும்பத்துக்குப் போதல. அதனால் கூட ஒரு பட்டை ப்ரசாதம் கிடைச்சா கொஞ்சம் கஷ்டப்படாம ஜீவனம் போகும் ஸ்வாமி. ஆனா, இவர் தரமுடியாதுன்னு சொல்றார்."

கோவிலின் பொது விதிகளை ஒருவருக்காக மீறுவது சரியில்லை. ராமானுஜர் சற்று யோசித்தார்.

சரி, உனக்கு உள்ளே இருக்கும் பெருமாள் மேல நம்பிக்கை இருக்கா?

"இல்ல ஸ்வாமி,"

தூக்கிவாரிப் போட்டது அனைவருக்கும்.

"என்னப்பா, கோவில்ல கைங்கர்யம் பண்ற. பெருமாள்மேல் நம்பிக்கை இல்லைங்கற. எப்படிப்பா?"

"ஆமா ஸ்வாமி, எனக்குப் பெருமாள் மேல நம்பிக்கை இல்லதான். ஆனா, உங்களைத்தான் நம்பறேன். நீங்கதான் என் பெருமாள்."

"அப்பாடா, சரி. என்னை நம்பறயோ? உனக்கு யார் மேலயாவது நம்பிக்கை இருந்தா சரிதான்." 

"கோவில்ல, பாசுரம், பூஜை சப்தம், பாடல்கள், வேதம், உபன்யாசங்கள் இதெல்லாம்தான் கேக்கணும். சண்டை சச்சரவுச் சத்தமெல்லாம் கோவில்ல கேக்கக்கூடாது." 

"நீ சண்டை போடாம கிளம்பிப் போ. என்னை நீ நம்புகிறாய் அல்லவா.? 
இனிமேல் நான் உன்னை பாத்துக்கறேன்"

"சரி ஸ்வாமி,"

மீண்டும் விழுந்து வணங்கி விட்டுப் போய் விட்டான்.

அவனிடம் சொன்னாரே தவிர, ஆச்சாரியாரும் கோவில் பணிகளில் மூழ்கி விட்டார். அந்தப் பையனிடம் சொன்னது சுத்தமாக மறந்து விட்டது.

இது நடந்து ஒரு வருஷம் இருக்கும்.

ஒருநாள் அம்மா மண்டபத்தில் ஸ்நானம் செய்து விட்டு வந்து கொண்டிருந்தார் ஆச்சாரியார்.

அப்போது எதிரில் அந்தப் பையன் வந்தான். ஆச்சாரியாரைக் கண்டதும், மகிழ்ச்சியோடு விழுந்து வணங்கினான்.

அவனைப் பார்த்ததும் சட்டென்று முன்பு தான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அடடா, மறந்துவிட்டோமே. என்று மிகவும் வருந்தினார்.

அவனைப் பார்த்து,

"என்னப்பா, காலக்ஷேபங்கள் எல்லாம் எப்படிப் போகிறது?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸ்வாமி. ஒரு குறையும் இல்லை."
"தினமும் நீங்க அனுப்பற பையன் வந்து எங்களுக்குத் தேவைக்குமேல ப்ரசாதத்தை வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான். தேவரீரோட கருணையே கருணை.."

தூக்கி வாரிப் போட்டது ஆச்சாரியாருக்கு. "தினமும் ஒருத்தர் வராரா? நான் யாரையும் அனுப்பலையேப்பா."

"நீங்க அனுப்பினதா சொல்லி ஒருத்தர் தினமும் ப்ரசாதம் கொண்டுவராரே ஸ்வாமி. அவர் பேர் ரங்கராஜன் என்று சொன்னர். ப்ரசாதம் கொடுத்துட்டு, நின்னு கோவில் தூக்கையெல்லாம் திருப்பி வாங்கிண்டு போயிடுவார்."

ஆச்சாரியாருக்கு காலுக்குக் கீழ் பூமி நழுவியது. அப்படியே உட்கார்ந்து விட்டார் . "சொன்ன எனக்கே மறந்து விட்டது. ரங்கநாதா, உனக்கேன் இவ்ளோ கருணை" என்று நெகிழ்ந்து போய் அரற்ற ஆரம்பித்தார்.

அரங்கன் சன்னதியில் ஒருவருக்கு கொடுக்கும் வாக்கை, ஆச்சாரியார்கள் மறந்தாலும் கூட இறைவன் வரிந்து கட்டிக் கொண்டு மறக்காமல் அதை ஏழைகளுக்காக நிறைவேற்றுகிறான்.

ரங்கா.. ரங்கா.. ஸ்ரீரங்கா..!
கோவிந்தா..!

ஓம் நமோ நாராயணா..!