திருப்பல்லாண்டு - எளிய விளக்கவுரை

பெரியாழ்வார் மதுரை ராஜ ஸபையில் ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தை நிலை நாட்டிய பின், அந்நாட்டு மன்னன், ஆழ்வாரை யானை மீது ஏற்றி நகர்வலம் வரச் செய்ய, அந்த ஸமயத்தில் எம்பெருமான் ஆழ்வாரின் இந்த வைபவத்தைக் காண, தன் திவ்ய மஹிஷிகளுடன் கருடவாஹனத்தில் வந்து ஆகாசத்தில் தோன்ற, பரமபதத்தில் இருக்கும் எம்பெருமான் இப்படி இந்த ஸம்ஸாரத்தில் வந்துள்ளானே என்று கலங்கி, ஆழ்வார் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்யும் பாசுரங்களே திருப்பால்லாண்டு என்று கொண்டாடப்படுகிறது. தான் மங்களாசாஸனம் செய்வது மட்டும் அல்லாமல் எல்லோரையும் மங்களாசாஸனம் செய்ய வைப்பது பெரியாழ்வாருக்கு இருக்கும் தனிப் பெருமை.

பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) பாடிய இந்தப் பிரபந்தம் தனிச் சிறப்பு வாய்ந்தது.

வேதங்களை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும்போதும் “ஓம்” என்று சொல்வது போல் இந்தத் திருப்பல்லாண்டும் பிரபந்தம் வாசிக்கும்போது ஆரம்பத்திலும் முடிவிலும் சொல்வது வழக்கம்.

பெரியாழ்வார் பாண்டிய மன்னனுக்கு (ஸ்ரீவல்லபன்) மகா விஷ்ணுவே பரம்பொருள் என்று நிறுவிய பின் அவருக்குக் கிடைத்த பொற்கிழியுடன் யானை மேல் ஏற்றி ஊர்வலம் செல்லும் போது அந்த அழகைக் கண்டு களிக்க ஸ்ரீமன் நாராயணனே வர, அவருக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று கவலைப் பட்டு ஆழ்வார் அவருக்கு நீடூழி வாழ்க என்று மங்களாசாசனம் செய்கிறார்.

இந்தத் திருப்பல்லாண்டை பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம்:

1,2 – ஆழ்வார் தாமே மங்களாசாசனம் செய்வது.

3,4,5 – மூவகையானவர்களை பெருமானுக்கு மங்களாசாசனம் செய்ய அழைக்கிறார். யார் இந்த மூவகையானவர்கள்? பகவல்லாபாரதி என்பவர்கள் பெருமானையே அடைய முயல்பவர்கள்; கைவல்யார்த்திகள் என்ற ஆத்மாவையே அனுபவிக்கும் நபர்கள். இவர்களுக்கு பூலோகமும் வேண்டாம், வைகுந்தமும் வேண்டாம். மூன்றாமவர் நம்மைப் போன்ற ஐஸ்வர்யார்த்திகள். இவர்களுக்கு ஐம்பொறிகளினால் கிடைக்கும் இன்பமே போதும்.

6,7,8 – மேற்சொன்ன மூவரும் வந்து விட்டார்கள்.
9,10,11 – மூவரும் ஆழ்வாருடன் சேர்ந்து மங்களாசாசனம் செய்கின்றனர்.
12- இந்த பிரபந்தத்தைச் சொல்லுவதால் என்ன கிடைக்கும் என்று சொல்லும் “பலச்ருதி” பாடல்.

ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்
திருப்பல்லாண்டு ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக |

ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
குறள்வெண்செந்துறை
காப்பு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
செவ்வடி(சேவடி) செவ்வி திருக்காப்பு (1)


மாபெரும் மல்லர்களைத் தோற்கடித்த வலிமையான தோள்களையும் சிவந்த திருவடிகளையும் உடைய மணிவண்ணா!

பல்லாண்டென்ன, பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் உனக்கு பாதுகாப்பு உண்டாகட்டும்.

இந்தச் செய்யுளுக்கு வியாக்கியானம் எழுதிய பெரியவர்கள் இந்த ஆயிரக் கணக்குகளுக்கு சிறப்பான பொருள் கூறுகிறார்கள்.

முதலில் வரும் ஆயிரம் மனித ஆண்டுகளாகும்.

இரண்டாவதாக வரும் ஆயிரம் தேவர்களின் வருஷக் கணக்கைக் குறிக்கிறதாம். நம் மனித வருடம் தேவர்களுக்கு ஒரு நாள்.

மூன்றாவதாக வரும் ஆண்டு பிரம்மாவின் ஆண்டைக் குறிக்கிறதாம். நான்கு யுகங்கள் சேர்ந்து 4,32,000 ஆண்டுகள். 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவின் ஒரு பகல் பொழுது! அப்படியே கணக்குப் போட்டால் தலை சுற்றிவிடும்.

நான்காவதாக வரும் பலகோடி நூறாயிரம் பல்லாயிர பிரம்மாக்களின் காலத்தைக் குறிக்கிறது. ஈரேழு பதினான்கு உலகங்களுக்கு ஒரு பிரம்மா. இப்படி அண்ட சராசரங்களில் பல பிரம்மாக்கள்.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே (2)


என்னைப் போன்ற அடியார்களுடன் நீ எப்போதும் பிரிவின்றி இருக்க வேண்டும்.

உன்னுடைய வலது மார்பிலே வாழ்கின்ற திருமகளுக்கும், உன் வலது கரத்திலே இருக்கும் சுடர் விடும் சுதர்சனச் சக்கிரத்துக்கும், நீ போருக்குச் செல்லும் போது முழங்கும் பாஞ்ச சன்னியத்துக்கும் மங்களாசாசனம் செய்கிறேன்.

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (3)


சாப்பாட்டுப் பிரியர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் எங்கள் மண் சுமக்கும் கைங்கரியத்தில் பங்கு கொள்ளுங்கள்; பெருமை அடையுங்கள். நாங்கள் ஏழு தலைமுறைகளாக இந்தச் சேவையைச் செய்து வருகின்றோம். வானரர் சேனை கொண்டு இலங்கை அரக்கர்களுடன் போர் செய்து வென்ற ராம பிரானுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே (4)


ஏடு நிலம் என்பது கைவல்யம் ஆகும். இதில் வசிக்கும் கைவல்யார்த்திகள் தங்கள் ஆத்மாவை தாங்களே அனுபவிக்க விரும்புபவர்கள்.

கைவல்யம் என்றால் என்ன?
கைவல்யம்: ஒரு மாதிரியான மொக்‌ஷ நிலை. perfect isolation state. இந்த நிலையில் ஆத்மா மறு பிறப்பிலிருந்து விடு பட்டாகி விட்டது. ஆனால் விரஜா நதியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. வைகுண்டத்தை இன்னும் அடைய வில்லை, அல்லது அடைய விரும்பவில்லை.

கைவல்யவாசிகள் அச்ரார்தி வழியில் செல்லுபவர் இல்லை. இவர்கள் விரஜா நதியிலிருந்து தொலை தூரத்தில் வசிப்பவர்கள். இவர்கள் பகவான் நாராயணனுக்கு பணி புரிபவர்களும் இல்லை, திரும்பப் பிறப்பு எடுப்பவர்களும் இல்லை.

இப்படிப் பட்ட ஏடு நிலத்தில் தள்ளப் படுவதற்கு முன்னால் எங்கள் குழுவில் வந்து சேர்ந்து விட ஆசைப் பட்டால் உடனே வாருங்கள். நாடு நகரம் அறியும் வண்ணம் ‘நமோ நாராயணா’ என்று பல்லாண்டு பாடுங்கள்.

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்மினே (5)


பிரதிவாதி சுவாமி இந்தப் பாடலுக்கு விளக்கம் அளிக்கும் போது, இந்தப் பாடல் ஐஸ்வரார்த்திகளை பல்லாயிரம் பாடும் படி அழைக்கிறது என்கிறார். யார் இந்த ஐஸ்வரார்த்திகள்? இவர்கள் இரு வகைப் படுவர்: ஒருவகையினர் கை தப்பிப் போன செல்வத்தை மறுபடியும் அடைய முற்சி செய்பவர்கள்; இன்னொரு வகையினர் எளியோராய் இருந்து இப்பொது செல்வம் அடைய முயற்சி செய்பவர்கள்.

அண்ட சராசரங்களுக்கு அதிபதி ஆனவனும், அசுரரையும் அரக்கர்களையும் (என்ன வேறுபாடு?) பூண்டோடு அழித்தவனும், தன் இந்திரியங்களை அடக்கி ஆள்பவனுமான இருடிகேசன் (ரிஷிகேசன் என்ற வட மொழிச் சொல்லுக்குத் தமிழ் வடிவம்) நாராயணனுக்கு ஆயிரம் நாமங்கள் என்ன, பல்லாயிரம் நாமங்கள் சொல்லிப் பாட வாரீர்!

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே (6)

பகவானே, இன்று நேற்றல்ல, ஏழேழ் பிறவிகளாக உன்னை வணங்கி உனக்கு அடியார்களாக இருக்கிறோம். திருவோணத் திருநாளில் அந்திப் பொழுதில் நரசிம்ம உருவம் கொண்டு இரண்யனை அழித்தவனுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (7)


ஆச்சாரியரிடம் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு (சமாஷ்ரயணம் செய்து கொண்டு, மந்திர உபதேசம் பெற்றுக் கொண்டு) உன்னுடைய புகழைப் பாடி வருகின்றோம். வாணாசுரனின் ஆயிரம் தோள்களை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தி வெற்றி கொண்ட பெருமானின் புகழுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

இந்த வாணாசுரனின் கதையை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே (8)


பகவான் எனக்கு என்னென்ன செய்தான் தெரியுமா? நிறைய நெய் கலந்த உணவையும், மணக்கும் தாம்பூலத்தையும், கழுத்து, காதுகளில் பூட்டிக் கொள்ளும் ஆபரணங்களையும், உடம்பில் பூசிக் கொள்ள சந்தனத்தையும் கொடுத்து, சம்சாரத்தில் ஈடுபட்டுக் கிடந்த என்னை சாத்வீகனாக, ஞானஸ்தனாக ஆக்கினான். கருடக் கொடி கொண்ட அந்த பகவானுக்கு மங்களாசாசனம் செய்யுங்கள்.

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கருமம் திருத்தித் திரு வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (9)


பகவானே! நாங்கள் எப்படிப்பட்ட தொண்டர்கள் தெரியுமா? நீ உடுத்துக் களைந்த ஆடைகளை உடுத்தி, நீ உண்ட மிச்சத்தை உண்டு, நீ சூடிக் களைந்த மாலைகளை நாங்கள் தரித்துக் கொண்டு நீ இட்ட கட்டளைகளைச் சிரமேற்கொண்டு ஆற்றி வருபவர்கள். படமெடுத்த பாம்புப் படுக்கையில் கிடப்பவனே, இந்தத் திருவோணத் திருநாளில் உனக்குப் பல்லாண்டு பாடுவோம்.

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே (10)


இந்தப் பாடல் கைவல்யார்த்திகள் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதுபோல் அமைக்கப் பட்டிருக்கிறது.

பெருமானே, உன் அருளினால் கைவல்யத்திலிருந்து மீட்சி அடைந்து விட்டோம். கம்சனுடைய ஆயுத சாலையில் புகுந்து வில்லை வளைத்தவனும், காளியன் என்ற பாம்பின் தலையில் நடனமாடிய பெருமானே, உனக்குப் பல்லாண்டு பாடுகிறோம்.

அல்வழக்கு ஒன்றுமில்லா அணி கோட்டியர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே (11)


குற்றமே இல்லாத திருக்கோஷ்டியூர் செல்வநம்பி உனக்கு எப்படி தாஸரோ அப்படியே நாங்களும் திருந்தி உனக்கு தாஸர்களாகி விட்டோம். நல்லதே நடக்க வைக்கும் திருமந்திரத்தை உச்சரித்து, உன்னுடைய பல நாமங்களைச் சொல்லி உனக்குப் பல்லாண்டு பாடுகிறோம்.

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே (12)


இது ‘பலச்ருதி’ப் பாடல். இந்த பிரபந்தத்தை சொல்லுவதால் என்ன பலன் கிடைக்கும்? இதைச் சொல்லுபவருக்கு இப்பிறப்பில் மட்டுமின்றி பரமபதத்திலும் பெருமானுக்குப் பல்லாண்டு பாடும் பெருவாய்ப்புக் கிடைக்கும்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!