சைவ, வைணவ மகான்களின் வாழ்வில் இப்படி இறைவனின் ஆணையை ஏற்று நடந்து கொண்ட ஏராளமான சம்பவங்களைப் பார்க்கலாம்.
கூரத்தாழ்வான் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது.
ராமானுஜரின் சிஷ்யர் கூரத்தாழ்வான். அவருக்கு இக உலகு வாழ்க்கை பிடிக்கவில்லை. அவ்வுலகில் வாழும் வைகுந்த வாழ்வு அல்லவோ வாழ்வு, நாராயணனுடன் இருக்கும் பேறு அல்லவோ பேறு என்று எப்போதும் நினைத்த வண்ணம் இருந்த அவர் கடைசியில் தன் பொறுமையை இழந்தார்.
ஒரு நாள் அரங்கநாதன் முன்னால் சென்று வேண்டினார்; பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து தனது உள்ளார்ந்த எண்ணத்தைத் தெரிவித்தார்.
அரங்கநாதன் அவரது பிரார்த்தனைக்குச் செவி மடுத்தார். “உமது பிரார்த்தனை நிறைவேறுக! இன்னும் மூன்று நாட்களில் நீர் இந்த இகவுலகு வாழ்வை விட்டு விடுவீர்.” என்றார் அரங்கநாதன்.
கர்பக்ருஹத்தில் கிடைத்த இந்த சொல்லமிர்தத்தைச் செவியுற்ற கூராத்தாழ்வானுக்கு எல்லையற்ற சந்தோஷம்! வெளியிலே மகிழ்ச்சியுடன் சென்று தனது மரணத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவாறு இருந்தார்.
இந்தச் செய்தியை குருநாதரான ராமானுஜர் கேட்டுத் திகைப்புற்றார்.
ஓடோடி வந்தார் சிஷ்யனிடம்.
“ஐயகோ! கூரத்தாழ்வானே! இப்படிச் செய்யலாமா? நான் இங்கு இன்னும் இருக்கும் போது இப்படி பரமபதத்தை நாடலாமா? இது சரியா?” என்று கேட்டார் ராமானுஜர்.
ஆழ்வான் கூறினார்: “ குருநாதரே! என்னை மன்னிக்க வேண்டும். இந்த உலகியல் வாழ்க்கையில் இது பற்றி எல்லாம் நான் எண்ணவே இல்லை” என்றார்.
உடனே ராமானுஜர், “ சரி. அப்படியானால் அரங்கனிடம் எனது பிரார்த்தனையை நான் இப்போது செய்யப் போகிறேன். அவனது திருவுள்ளத்தை மாற்றுமாறு கோரப் போகிறேன்.” என்றார்.
கூரத்தாழ்வானை மூன்று நாட்களுக்குள் அழைத்துச் செல்லும் அரங்கநாதரின் திருவுள்ளத்தை மாற்றக் கோர நினைத்த அவர் வேகமாக கர்பக்ரஹத்தின் வெளிவாயில் வரை சென்றார். அது வரை வந்தவர் உள்ளே செல்லவில்லை. திடீரென்று அப்படியே நின்றார். தனக்குத் தானே இப்படிச் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்.
“ஊஹூம், மாட்டேன்! இறைவனின் திருவுள்ளத்திற்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன். அது தான் ஏற்கனவே அவனால் முடிவு செய்யப்பட்டு விட்டதே! அவனது திருவுள்ளப்படியே நடக்கட்டும். அதற்கு இடைஞ்சலாக எதையும் நான் கோர மாட்டேன்; செய்ய மாட்டேன்” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவர் கர்பக்ருஹத்திற்கு உள்ளே செல்லாமல் திரும்பினார். ஆழ்வான் மேல் கொண்ட எல்லையற்ற பாசத்தினால் உள்ளே செல்ல நினைத்தவர், இறைவனின் திருவுள்ளம் அல்லவோ பெரிது என்று எண்ணி வெளியே வந்தார்.
கூரத்தாழ்வான் அரங்கநாதனின் அருளுக்கு இணங்க இவ்வுலக வாழ்வை மூன்று நாட்களுக்குள் நீத்தார்; அரங்கனுடன் ஒன்றினார்.
அருளாளர்கள் முழு மனதுடன் இறைவனிடம் தங்களை ஒப்படைத்தவர்கள். அவர்களுக்கு இறைவன் எது செய்தாலும் அது சரியே. அது தான் சரி!
இராமானுஜரின் வாழ்க்கையில் நடந்த இந்த அற்புத சம்பவம் அவரது திருவுள்ளத்தை விளக்கும் ஒன்றாக அமைகிறது!
இதை பகவத் விஷயம் நூலில் ஐந்தாம் பாகத்தில் (பக்கம் 2527இல்) விளக்கமாகக் காணலாம்.