தினமும் நாம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் ‘சாந்தாகாரம் புஜக சயனம்...’ பாடலைச் சொல்லி வழிபட்டு வருகிறோம் எனினும் அதற்கான பொருள் தெரியாது. அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்?

‘சாந்தாகாரம் புஜக சயனம் 
பத்மநாபம் சுரேசம் 
விஸ்வாகாரம் ககன சத்ருசம் 
மேக வர்ணம் சுபாங்கம் 
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம் 
யோகிஹ்ருத்யான கம்யம் 
வந்தே விஷ்ணும் பவபயஹரம் 
சர்வ லோகைக நாதம்’ 

இதுதான் நீங்கள் குறிப்பிடும் வரிகள். பகவான் விஷ்ணுவினது சாந்தமான உருவம். அவர் புஜகம் அதாவது பாம்பின் மேல் சயனம் செய்வதால், புஜக சயனம். தொப்புளில் இருந்து தாமரை வந்திருக்கிறது, பத்மநாபம். தேவர்களுக் கெல்லாம் தலைவர் என்பதால் சுரேசம். 

அவர் வடிவமே இந்த பூமிதான் என்பதால் விஸ்வாகாரம். அவர் ஆகாயமாக இருப்பதால், வடிவம் இல்லாத ககன சத்ருசம். அவர் உருவம், மேகத்தின் வர்ணமான சாம்பல் நிறத்தில் இருக்கும். சுபத்தைக் கொடுக்கும் உடல் உறுப்புகளைக் கொண்டதால், சுபாங்கம். மகா லட்சுமிக்கு, காந்தன். தாமரைக் கண்கள் கொண்டவர் என்பதால் கமல நயனம். 

அவரை அடைவது எப்படி? யோகிகளின் இதயம் இருக்கிறதே, அதுபோல யோகாப்பியாசம் செய்ய வேண்டும். அவர்களின் தியானத்தில்தான் அவர் இருப்பார் என்பதால் யோகிஹ்ருத்யான கம்யம். இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் எத்தனையோ விதமான பயங்களை அழிப்பதால் பவபய ஹரம்.. அது யார் அவ்வளவு பெரிய ஆசாமி? அவர்தான் சர்வ லோகங்களுக்கும் நாதனான பகவான். அவரை வணங்கு. இதுவே அதன் கருத்து. திருப்பதி திருவேங்கடவனுக்கு கெளஸ்துப மாலை அணிவிப்பதை விசேஷமாகச் சொல்கிறார்களே... கௌஸ்துப மாலை என்பது என்ன? அதன் மகிமைகள் என்னென்ன? பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று கௌஸ்துபம் எனும் ரத்தினம். திருமாலை அலங்காரப் பிரியன் என்று போற்றுவர். அணிகலன்கள் அணிவதில் மகிழ்பவரான திருமால், கௌஸ்துபத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு, நாம் அணிவிக்க விரும்பும் மாலைகள் பல இருந்தாலும் அவர் விரும்பும் மாலைக்கு தனிச் சிறப்பு உண்டு. கௌஸ்துப மாலையும் அப்படியே! பாற்கடலில்... நாம் விரும்பும் பொக்கிஷங்களும் உண்டு, ஒட்டுமொத்த உலகை அழிக்கும் விஷமும் இருந்தது. ஆனால், திருமால் கௌஸ்துபம் எனும் ரத்தினத்தை தேர்ந்தெடுத்தார். நாம் வாழும் உலகமும் பாற்கடல் போன்றதே. அதிலிருந்து,  நம்மை உயர்த்தும் நன்னடத்தை களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். திருமாலுக்கு கௌஸ்துப மாலை அணிவிக்கப் படும்போது, இந்தக் கருத்தே நம் மனதில் பளிச்சிட வேண்டும்!