ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு (அப்போது தில்லி சுல்தான்) எடுத்துப்போன அரங்கன் சிலையை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு அரங்கனை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன.
ஆனால் யாருமே காணமல் போன அரங்கனை அறிந்தவர்கள் உயிருடன் அப்போது இல்லாமல் போக, மீட்கப்பட்ட விக்கிரகத்தை சந்தேகத்தின் பேரில் கோவிலுக்குள் அனுமதிக்காமல் ஆரியபடாள் வாசலிலேயே (மூன்றாம் பிரகாரம்) வைத்துவிடுகிறார்கள். அப்பொழுதுதான் வில்வமரத்தினடியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த தாயார் கனவில் வந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். [இதனால ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் இரண்டு மூலவர்கள்.]
இதைக் கேள்விப்பட்ட மக்களுக்கு ஒருவேளை மீட்கப்பட்டது ஒரிஜினல் அரங்கன்தானோ, அதனால் தான் காணாமல் போனதும் மறைந்த தாயார், திரும்ப பெருமாள் வந்ததும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டாளோ என்று சந்தேகம் வந்து அதை அப்போதைய மன்னனிடம் தெரிவிக்கிறார்கள்.
நடந்த அனைத்தையும் கேட்ட மன்னன் அந்தக் காலத்தவர் யாரேனும் இருக்கிறார்களா என தேடச்சொல்ல, அரங்கனின் ஆடைகளை சலவைசெய்து கோவில் கைங்கர்யம் செய்துவந்த ஒரு 93 வயது வண்ணான், கண்பார்வை இழந்தவராக இருப்பது தெரிகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய அங்க அடையாளங்கள் ஒத்துப் போகிறது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, இரண்டு தெய்வங்களுக்குமான அபிஷேக தீர்த்தம் அவருக்கு அளிக்கப் படுகிறது. மீட்கப்பட்ட அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய சலவை செய்பவர், ‘ இவரே நம் பெருமாள்!’, இவரே நம் பெருமாள்’ என மகிழ்ச்சியில் கத்த, அவரே அசல் அரங்கன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் அதனாலேயே இன்று அவர் பெயரை ‘நம்பெருமாள்’ என்று சொல்கிறோம்.
நம்பெருமாளுக்கு “பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்..” என்று அரையர் பாடுவதைப் போல் நாயகியர் பன்னிருவர். எனக்குத் தெரிந்தவரை…
1. மஹாலஷ்மி:
கோயில் மூலவரின் திருமார்பில் இருக்கும் மஹாலஷ்மி. இவர் அரங்கனுக்கு கழுத்தில் சங்கிலியுடன் கூடிய ஒரு தங்க டாலர் மாதிரி தரிசிப்பவர்களுக்குத் தெரியலாம். ஆனால் உண்மையிலேயே உள்ளே அரங்கனின் திருமார்பில் இருக்கும் மஹாலஷ்மிக்குத் தான் அந்தக் கவசம். இவருக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பட்டரால் ஏகாந்த திருமஞ்சனம் செய்யப் படுகிறது. அப்போது கோயில் ஜீயர், பட்டருக்கு சாமரம் வீசுவது இன்றும் நடந்து வருகிறது.
2, 3 உபயநாச்சிமார்-
. ஸ்ரீ தேவி, பூ தேவி
இவர்கள் உற்சவ மூர்த்திகள். தை மாதப் புறப்பாடுகளில் வீதி பெருமாளுடன் வீதி உலாவும் வருவார்கள். ஸ்ரீரங்கத்தில் மட்டுமே உபயநாச்சிமாரிலிருந்து ஆண்டாள் வரை பன்னிரெண்டு தாயாரும் அமர்ந்த திருக்கோலம்.
4. கருவூல நாச்சியார்
பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சன்னதி. கருவூலம், நகைகள் பண்ட பாத்திரங்கள் மற்றும் கணக்கு வழக்குகளைக் காவல் காக்கும் நாயகி. திருக்கார்த்திகை அன்று இங்கு எல்லோரும் விளக்கு ஏற்றுவார்கள் !
5. சேரகுலவல்லித் தாயார்:
அர்ச்சுன மண்டபத்தில் (பகல் பத்து உற்சவ மண்டபம்) துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சன்னதி. இவர் குலசேகரத்தாழ்வாரின் பெண். ஸ்ரீராமநவமி அன்று இவருடன் பெருமாளுக்குத் திருமண உற்சவம் நடக்கும்.
6. துலுக்கநாச்சியார்:
ஆட்சி பல கைகளுக்கு மாறி முகலாயர்களுக்குப் போனபின், டில்லிப் பேரரசரின் மகள் சுரதாணியிடம் அரங்கன் சிலை இருக்கிறது. அரங்கன்மேல் காதலால் அவள் தன் அறையில் தன்னுடனேயே வைத்திருக்கிறாள்.
அதை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அழகிய மணவாளன் என்பதை அறிந்த மன்னர் அனுமதி தருகிறார்.
ஆனால் இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை, பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து, அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து, தன் அறையில் அரங்கனைக் காணாமல், தொலைந்ததறிந்து, பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையுடன் அவளை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார்.
தலைமை பட்டரோடு சிலர், தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர். (பார்க்க, இந்தக் கட்டுரையின் முதல் பத்தி)
ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல், கோவில் மூடியிருப்பதைக் கண்டு அங்கேயே மயக்கமடைந்து இறந்தும் போகிறாள் இளவரசி. அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள்.
முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபடுகிறார்கள்(கிறோம்.) அதன்பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.
மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். (மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும். இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள். சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.) வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள். மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாள்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க?) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார். அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும். அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது. ‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு. எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது. ‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.
7. செங்கமலவல்லித் தாயார்
(தான்யலஷ்மி):
ஆர்யபடாள் வாயில் வழியாக வெளிவந்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சன்னதி. இந்தத் தாயார் தான்யங்கள், கோயில் மாடு, யானை, கால்நடைகளுக்குக் காவல் நாயகி. கோயிலின் தான்யக் கிடங்கு இங்குதான் இருக்கிறது.
8. ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீரங்கநாதரின் அதிகாரபூர்வ பட்டமகிஷி. கோயில் வாயில் தாண்டாதவர். பங்குனி உத்திரம் அன்று திருமண உற்சவமும் சேர்த்தி சேவையும். எதிரில் இருக்கும் கம்ப மண்டபத்தில் தான் கம்பராமாயணம் அரங்கேறியது.
9. ஆண்டாள்:
நம்பெருமாள் சம்மதம் சொல்ல பெரியாழ்வார் ஆண்டாளை அழைத்துக் கொண்டு வந்து தங்கியிருந்த இடம் தான் இன்றைய வெளி ஆண்டாள் சன்னதி. அதன் வாயிலே அப்போதெல்லாம் காவிரிக் கரையாக இருந்திருக்கிறது. பின்னர் திருட்டு பயம் காரணமாக உற்சவர் மட்டும் ரெங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் ராமர் சன்னதிக்கு மாற்றப்பட அது இப்போது உள்ஆண்டாள் சன்னதி என்றழைக்கப்படுகிறது.
10. உறையூர் கமலவல்லி
அரங்கநாயகி தவிர்த்தும், உறையூரில் கமலவல்லி என்பவரையும் அரங்கன் மணக்கிறார். உறையூர் செங்கமலவல்லி அல்லது வாசவல்லித் தாயார் என்பவர் உறையூரை ஆண்ட சோழனின் மகள். குழந்தையில்லாத நந்த சோழனுக்கு ஒரு தாமரைத் தடாகத்தில் கிடைத்த குழந்தையை எடுத்து ‘கமலவல்லி’ என்று பெயரிட்டு வளர்த்துவந்தான். விளையாடும் போது குதிரையில் சென்ற அரங்கனைக் கண்டு கமலவல்லி காதல்கொள்கிறாள். அவளிடம் காணப்படும் வருந்தத்தக்க(?!) மாற்றங்களை அறிந்த மன்னன், விசாரித்து அறிந்து, பிறகு விமரிசையாகத் திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் பின்னர் அவள் அரங்கனின் சன்னதியில் கலந்து மறைந்துவிட, மனம் மாறிய மன்னன் தன் செல்வம் அனைத்தையும் கொண்டு அவ்விருவருக்கும் உறையூரில் ஒரு கோவிலைக் கட்டினான்.
ஆனால் அரங்கன் சிலை அங்கு கிடையாது. பங்குனி உத்திரத்திற்கு முன்னால் ஆறாம் திருநாள் ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கன் உறையூர் சென்று அங்கு திருமணம் நடக்கும். அங்கு மோதிரத்தைக் கமலவல்லிக்குக் கொடுத்துவிட்டு வந்து, இங்கு தொலைந்துவிட்டதாக ரெங்கநாயகியிடம் பொய்சொல்லி, காவிரிக்கரையில் தீவட்டிகளைக் கொண்டு (அன்று ஒருநாள் மட்டும் தீவட்டிகள்(தீவர்த்திகள்) தலைகீழாக பூமியை நோக்கிக் காண்பித்தவாறு எடுத்துச் செல்லப்படும்.) தேடுவதுபோல் பாசாங்கு செய்வது வருடா வருடம் இன்னமும் நடக்கிறது.
உறையூரிலிருந்து திரும்பி வரும் வழியில் வெளிஆண்டாள் சன்னதியில் ஆண்டாளுடன் மாலை மாற்றும் வைபவம் மட்டும் நடைபெறும். திருமண உற்சவம் இவருக்குக் கிடையாது.
11. காவிரித் தாயார்
ஆடிப் பெருக்கு(இது சில வருடங்களில் ஆடி 18ம் தேதியும் சில வருடங்களில் ஆடி 28ம் தேதியும் வரும்.) அன்று அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவது விசேஷம்.
12. பராங்குச நாயகி (நம்மாழ்வார்):
தன்னை பராங்குச நாயகியாக பாவித்து பெருமாளை நாயகனாகப் பாவித்து,
‘கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்..” [ரொம்பத்தான்!..:)]
என்று தாய்ப் பாசுரமாக அரங்கனைப் பாடிய நம்மாழ்வார்; மார்கழி 7ம் திருநாள் பராங்குச நாயகியாக பெண்வேடத்தில் வரும் நம்மாழ்வாரை கைத்தல சேவையில் ஆட்கொள்ளும் ஆழ்வார் மோட்சம் காரணமாக இவரும் நாயகியாகிறார்.
உலகில் அனைத்து உயிருமே ஜீவாத்மா (நாயகி), இறைவன் மட்டுமே பரமாத்மா (நாயகன்) என்பதன் குறியீடு பராங்குச நாயகி.
ஓம் நமோ நாராயணாய நமஹ