குருவியானது, தான் கூடுகட்டிய மரம் வெட்டப்படும் போது, கூட்டின் மீது பற்று நீங்கி பறந்து போகும்...

..அதுபோல் பக்தனும் இந்த உடலை விட்டு உயிர் நீங்கும் போது, 
உடல் மீதுள்ள பற்று நீங்கி, உயிரைத் துறக்க வேண்டும்...

ஸ்ரீரங்கத்தில் தன்னுடைய சிஷ்யகோடிகளுடன் உடையவர் வாழ்ந்தருளுகின்ற சமயம் அது...

..உடையவருக்கு அப்போது ஏறத்தாழ 116 வயது..

அவ்சமயம், அவருடைய சிஷ்யரான கூரத்தாழ்வான் நம்பெருமாளிடத்து ஒருநாள் ஸ்தோத்திரம் செய்து, தயங்கியவாறு அவன் திருமுன்னே நிற்கிறார்...

உடன், அரங்கன்,

"..உமக்கு வேண்டினதெல்லாம் தருகிறோம்.. வேண்டிக்கொள்ளும்..."
என்று திருவாய் மலர்ந்தருளுகிறான்..

ஆனால், ஆழ்வானுக்கோ இப்போதும் ஏதும் வேண்டிப் பெறத் தெரியவில்லை!. 

"நாயன்தே! 
அடியேனுக்குப் பண்டே எல்லாந் தந்தருளிற்றே!’ (நீதான் எனக்கு வேண்டியவற்றையெல்லாம் ஏற்கனவே அருளிச் செய்தாயிற்றே!”) என்கிறார்...

(..வாஸ்தவத்தில், கூரத்தாழ்வானுக்குத்தான் எவ்வளவு கொடுமைகள் அரங்கேறின!... 
எவ்வளவு துன்பத்திற்கு அவர் ஆளானார்!... 

...ஆயினும் இவற்றால் எந்த விதமான பாதிப்புமின்றி, எவ்வளவு பரிவாக, நிறைவாகப் பேசுகின்றார் என்பதை நாமெல்லோரும் இங்கே உணர வேண்டும்!..)

ஆனால், அரங்கன் விடவில்லை!. 

"..அப்படியன்று! 
இப்போதும் வேண்டிக்கொள்ளும்! 
நம் பெண்டுகளாணை! 
நம் இராமனுசன் மீது ஆணை! தருகிறோம்!..” 

("அரங்கனே ஆணையிட்டு அருளியது இவர் ஒருவருக்குதான்!.." என்பர் பெரியோர்..)

அப்போது, கூரத்தாழ்வாருக்கு உடையவர் நன்றாகயிருக்கும் போதே, 
தாம் தமது இப்பூதவுடலை நீக்கிப் பரமபதம் செல்லச் சித்தம் உண்டாயிற்று.. 

"த்வதநுபவ விரோதியான இந்த சரீரத்தை விடுவித்து, த்வதநுபவத்தை தந்தருள வேணும்.." என்று அரங்கனிடம் ப்ரார்த்தனை செய்தார் ஆழ்வான்..
(அதாவது, "அரங்கன்" அனுபவத்தினை பூரணமாகப் பெறவிடாமல் செய்கின்ற இச்சரீரம் மறைந்து, பரமபதத்தைத் தந்தருள வேண்டும் என்று ப்ரார்த்திக்கின்றார் ஆழ்வான்.. )

அதற்கு அரங்கன்,
 
"அத்தையொழியச் சொல்லும்.."
(இதைத்தவிர வேறு ஏதேனும் கேளேன்!” ) என்கிறார்..

...இப்போது கூரத்தாழ்வான் விடவில்லை.. 

"அடியேன் அபேக்ஷித்ததையே ப்ரஸாதிக்க வேணும்” என்கிறார்.
(நான் கேட்டதையே தாரும் என்கிறார்..)

அரங்கன், 

"ஆகில், உமக்கும் உம்முடைய
 ஸம்பந்தமுடையோர்க்கும் பரமபதந் தந்தோம்..” என்றருளிக் 
கடைசியாகத் திருப்பரிவட்டம், தீர்த்தம், பிரஸாதமும், பூந்தண்மாலையும், திருத்துழாயும் கொடுத்து சிறப்பித்து விடைக் கொடுக்கின்றார்...

நடந்ததையறிந்த உடையவர், ஆழ்வான் திருமாளிகை விரைகின்றார்.. 

”ஆழ்வான்! நீர் இப்படிச் செய்தருளலாமோ!’ என்கிறார் சோகமாக!. 

"நீர் பரமபதம் ஏகும்போது, உம்மையங்கு எதிர் கொள்ளவே இங்ஙனம் ஆயிற்று!..’ என்று பதில் சொல்கிறார் ஆழ்வான்!. 

உடையவரோ வருந்துகின்றார்!. 

"ஆழ்வான்! என்னுயிர் இணையான உம்மை இழந்து எங்ஙனே தரிப்பேன்..? 

என்னையும் உடன் கொண்டுபோகத் திருவுள்ளம் பெற்றிலீர்! 
...நம்மை விட்டுப்போக உமக்கு ருசிப்பதேன்? 

பரமபதநாதனும் அங்குள்ள நித்யசூரிகளும்,
...என்ன பாக்யம் பண்ணினார்களோ உம்மை அங்கு அடைய!..

...இங்கு உறங்கும் பெரியபெருமாளும், நாங்களும் என்ன பாபம் பண்ணினோமோ?.." என்றெல்லாம் அரற்றுகின்றார்... 

ஆழ்வானின் திருமுதுகினைப் பரிவாகத் தடவி, 
த்வய மந்திரத்தை அநுஸந்திக்காது போனால், நா வறண்டு போகும் கூரத்தாழ்வானுக்கு மீண்டும் த்வயத்தினை அருளிச்செய்கிறார் உடையவர்... 

பிறகு, அஞ்சலித்து விடை கொடுக்கின்றார்... 

அக்கணமே, ஆழ்வான் தம் ஆச்சார்யனான உடையவரின் திருப்பாதங்களில் வேரறுந்த மரம் போன்று விழுகின்றார்!..

உடையவர் அவரை அப்படியே வாரி எடுக்கின்றார்!.. 

கண்ணீர் கொப்புளிக்க,
தாமும் அவரோடு சேர்ந்து பரமபதம் செல்லமாட்டோமா? என்கிற தாபத்தோடு அவரை இறுக்கி அணைக்கிறார் உடையவர்!..

...இப்படி அனந்தாழ்வானும் திருவேங்கடத்தானும் போல்,

இலக்ஷ்மணனும் ஸ்ரீராமசந்திரனும் போல்,

...இப்புவியில் கூரேசரும் உடையவரும் இருந்தனர்...

...இறுதியில் தனது ஆச்சார்யனின் திருவடிகளிலேயே, தனது இன்னுயிரையும் த்யாகம் செய்து, பரமபதம் ஏகினார் ஆழ்வான்.