என் திருவடிகளைச் சரணடைந்த உன் பாவங்களை நீக்கி, மோக்ஷகதி அடைய நான் அருள்புரிகிறேன்!” – பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் இப்படிக் கூறினார். அந்தத் திருவடிகளுக்குத்தான் எத்தகைய மகிமை! கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் நிகழ்த்திய அற்புதங்களிலிருந்து அதை விரிவாகத் தெரிந்துகொள்வோமா?
தன் சகோதரி தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அசரீரி வாக்கால் தெரிந்துகொண்ட கம்ஸன், தேவகியையும் அவள் கணவர் வசுதேவரையும் மதுராநகர் சிறையில் அடைத்தான். பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் சங்கல்பத்தால்தான் கிருஷ்ணாவதாரம் நிகழ்கிறது என்பதை அவன் அறியவில்லை. விஷ்ணுவே தேவகி- வசுதேவர் தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறக்கிறார்.
பொதுவாக, உலகில் பெற்றோர்தான் பிறந்த குழந்தை எதைச் சாப்பிட வேண்டும், எப்படி வளர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். ஸ்ரீகிருஷ்ணன் ஓர் அதிசயக் குழந்தை! பிறந்த உடனேயே, பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்று கட்டளை இடுகிறார்.
தன்னைச் சிறையிலிருந்து எடுத்துச்சென்று கோகுலத்தில் விட்டுவிட்டு, அங்கு யசோதை- நந்தகோபருக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வருமாறு கட்டளையிடுகிறார். அவரது மாயா சக்தியால் சிறைக்காவலர்கள் மயங்கி விழுந்தனர். பூட்டுகள் திறந்துகொண்டன. சிறைக் கதவுகள் தாமே திறந்து, வசுதேவர் கிருஷ்ணனுடன் வெளியேறியதும் தாமாகவே மூடிக்கொண்டன.
ஸ்ரீகிருஷ்ணன் கூறியபடி, அவரை துணியில் சுற்றி, கூடை ஒன்றில் வைத்து, தலையில் சுமந்து கோகுலம் நோக்கிச் சென்றார் வசுதேவர். திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. வசுதேவர் யமுனை நதியைக் கடந்துதான் அக்கரையிலுள்ள கோகுலம் அடைய முடியும். அடைமழையால் யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.
எந்தத் தடையையும் கண்டு அஞ்சாமல் வசுதேவர் யமுனையில் காலெடுத்து வைத்தார். அப்போது ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து, கூடைக்கு மேல் குடையாகி வசுதேவரைப் பின்தொடர்ந்தது. யமுனையாற்றில் வசுதேவர் நடக்க ஆரம்பித்ததும், ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர ஆரம்பித்தது. ‘கட்டளையிட்ட கடவுள் காப்பாற்றுவான்’ என்ற நம்பிக்கையில் வசுதேவர் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார்.
திடீரென நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மழையின் வேகமும் குறைந்தது. யமுனை இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் நடந்துசெல்ல வழிவிட்டது.
அனைவருக்கும் தெரிந்த புராண வரலாறுதான் இது. இதில் பலருக்குத் தெரியாத கதை எது என்று இனி பார்ப்போம்…
ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக இந்த மாதத்தில், பாரதத்தின் வடக்குப் பகுதியில் பெருமழை பெய்யும் பருவநிலை கிடையாது. வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைச் சுமந்து சென்ற
போது, ஏன் இந்த மழை பெய்ய வேண் டும்? யமுனையில் ஏன் வெள்ளம் வர வேண்டும்? வசுதேவருக்கு ஏன் இந்தச் சோதனை ஏற்பட வேண்டும்?
இதற்கெல்லாம் ஓர் அற்புதமான காரணம் இருந்தது. ரூபகோஸ்வாமி எழுதிய ‘பிருந்தாவன கீதை’ எனும் நூலில் இதற்கான விளக்கங்களை அறிய முடிகிறது.
ஒருமுறை, கந்தர்வன் ஒருவன், ஒரு முனிவரின் சாபத்தால் காளிங்கன் என்ற பெயருடைய ஐந்துதலை நாகமாக மாறினான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் புனிதப் பாதங்கள் அவன் சிரசில் படும்போது அவன் சாபம் நீங்கும் என்று முனிவர் கூறியிருந்தார். பகவான் விஷ்ணுவின் அவதாரத்துக்காகக் காத்திருந்தான் காளிங்கன்.
பகவான் விஷ்ணுவின் மற்றொரு பக்தை யமுனை. இவள் சூரியபகவானின் புத்திரி.
கங்காதேவியைப் போல விஷ்ணு பாதத்தைத் தொட்டுச் சரணடைய வேண்டுமெனக் கடும் தவம் புரிந்தாள். விஷ்ணு அவள் முன் தோன்றி, தனது கிருஷ்ணாவதார காலத்தில் அவள் விருப்பம் நிறைவேறுமென வாக்களித்தார். அன்றுமுதல், யமுனையாக ஓடிக்கொண்டிருக்கும் சூரிய புத்திரியும், கிருஷ்ணாவதாரம் எப்போது நிகழுமென எதிர்பார்த்துக் காத்திருந்தாள். யமுனையின் தவத்துக்குப் பலன் தரவே, ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததும் அதிசயமாக மழை பெய்து, யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கூடையில் குழந்தை கிருஷ்ணனைச் சுமந்துகொண்டு வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததுமே, இரண்டு பக்தர்கள் அவர் திருவடி தங்கள் மீது படாதா என ஏங்கினர். ஒருவன் காளிங்கன் எனும் நாகம்; மற்றவள் யமுனை. ஆனால், காளிங்கன் சாபம் பெறுவதற்கு முன்பே தவத்தைத் தொடங்கிய யமுனைக்கே முதலில் அருள்தர நினைத்தார் பகவான். ஆற்றில் வசுதேவர் இறங்கி நடந்து செல்கையில், கூடையிலுள்ள கிருஷ்ணனின் பாதங்கள் மேல் நோக்கி உயர்ந்திருந்தால் காளிங்கன் சாப விமோசனம் பெற்றிருப்பான். ஆனால், கிருஷ்ணன் வேறுவிதமாக லீலை புரிந்தார்.
யமுனையில் இறங்கி நடந்த வசுதேவரின் வைராக்கியத்தை முதலில் தெரிந்துகொள்ள விரும்பினார். கடும் மழையாலும், வெள்ளத்தாலும் யமுனையில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. இடுப்புவரை இருந்த வெள்ளநீர் கழுத்துவரை வந்தபோதும்கூட, கவலைப்படாமல் தன் கடமையைச் செய்துகொண்டிருந்த வசுதேவரின் சிரத்தா பக்தியை எண்ணி வியந்தார் ஸ்ரீகிருஷ்ணன். நீர்மட்டம் வசுதேவரின் மூக்கைத் தொடும் நிலை வந்த போது, கண்ணன் கருணை பொழிந்தார். தன் கால்களைக் கூடைக்கு வெளியே போட்டார். அவர் பாதங்கள் யமுனையைத் தொட்டன.
இதன்மூலம் யமுனையின் தவம் நிறைவேறியது. தனக்குக் கருணை புரிந்த கிருஷ்ணனின் சங்கல்பம் நிறைவேற யமுனை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டாள். அதனாலேயே நீர்மட்டம் குறைந்தது. அவள் இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் செல்ல வழியமைத்துத் தந்தாள்.
காளிங்கன் ஏமாற்றம் அடைந்தாலும், நம்பிக்கையைக் கைவிடவில்லை.
பிருந்தாவனத்தில் இருந்த பொய்கையில் வாழ ஆரம்பித்தான். அவன் விடும் மூச்சுக் காற்றாலும், கக்கும் விஷத்தாலும் மாசடைந்தது பொய்கை. அதனால், ‘காளிங்கன் பொய்கை’ என அதை அழைத்து, அதன் அருகில் செல்லாமல் ஒதுங்கி இருந்தனர் மக்கள். ஆனால், ஸ்ரீகிருஷ்ணன் காளிங்கனை மறக்கவில்லை. ஒருநாள் கோபாலர்களுடன் மாடுமேய்க்கச் சென்ற அவர், யார் தடுத்தும் கேளாமல் அந்தப் பொய்கையில் குதித்தார்.
காளிங்கன் தன் படத்தைத் தூக்கி, கிருஷ்ணனை தாங்கிக் கொண்டான். ஸ்ரீகிருஷ்ணன் அதன்மீது நர்த்தனம் செய்தார். காளிங்கன் சாபம் நீங்கியது.
‘எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்று சொல்வார்கள். இது மனிதர்களுக்கு! ஆனால், இறைவன் மனித வடிவில் அவதாரம் செய்யும்போது, அவர் பாதங்களே பிரதானம். ராமாவதாரத்தில் கங்கைக்கரை வேடன் குஹன் ராமனின் திருவடிகளுக்குப் பூஜை செய்கின்றான். தனக்குத் தன் தாய் கைகேயி வாங்கித் தந்த நாட்டை வேண்டாமெனக் கூறி ராமன் திருவடிகளின் அம்சமான அவனது பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான் பரதன்.
அதுபோல, கிருஷ்ணாவதாரத்திலும் கிருஷ்ணனின் பாதங்களின் பெருமை பல இடங்களில் புகழப்படுகிறது. கிருஷ்ண ஜயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ணனின் பாதத்தை மாக்கோலமாகப் போட்டு, கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்துவருகிறது. இதுவும் பகவானின் பாத மகிமையைப் போற்றுவதற்காக அமைந்த ஒரு வழிபாட்டு முறைதான்.
இப்படி, இறைவன் திருவடியின் மகிமை எத்தனையோ புராண இதிகாசங்களில் கூறப்பட்டிருந்தாலும், திருவள்ளுவப் பெருமானின் கீழ்க்காணும் திருக்குறளில் உள்ள ஆழமான கருத்தை வேறெங்கும் காணமுடியாது.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
‘பற்றை- அதாவது, ஆசாபாசங்களை உதறுவதற்கு, பற்றேதும் இல்லாத பரம்பொருளான இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அந்தப் பிடியை விட்டுவிடாதீர்கள்’ என்பது இதன் பொருள்.
நாமெல்லாம் துன்பம் வரும்போது இறைவனை வேண்டுவது வழக்கம். அந்தத் துன்பம் நீங்கிய பின், அதனை மறந்து விடுவதும் இயல்பு. இந்த முறையை மாற்றி, எப்போதும் இறைவனின் திருவடியையே பற்றி நம்பிக்கையோடு வாழுங்கள்