1004 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூவுலகில், அவதரித்து, பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தை (ஆலயத்தை) நிர்வகித்து, இன்றும் கூட, ஆத்திகரும், நாத்திகரும், பகுத்தறிவு வாதிகளும், மறவாமல் உச்சரிக்கும் ஒரே ஆச்சார்யன், ஸ்வாமி ராமானுஜர்.... ஸ்வாமி ராமானுஜர் பிறந்த நாளில், அவரின் புகழையும், அரங்கனுக்கு அவர் செய்த அழிவில்லா கைங்கர்யங்களையும், அவரின் சிஷ்யர்கள் சிலரின் கைங்கர்யங்கள் பற்றி, சற்று விரிவாக பார்ப்போம் ...
ராமானுஜர் அன்று நடைமுறைப் படுத்திய நிர்வாக முறை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாய் இன்றும் , நடைபெற்றுக் கொண்டே உள்ளது ....
1.எம்பெருமானார் ராமானுஜர் கிபி 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார்
2. காரேய் கருணை இராமானுசன்! குணம் திகழ் கொண்டல் இராமானுசன்! நல்லார் பரவும் இராமானுசன்! திக்குற்ற கீர்த்தி இராமானுசன்! என்று திருவரங்கத்து அமுதனார் பரவிப்போற்றிய இராமானுசரைப் புகழாதார் யார்?
3. தத்துவ தரிசிகள்; வேத வேதாந்த வித்தகர்கள், வடமொழி விற்பன்னர்கள். தண்டமிழ்ச் சான்றோர்கள்; இலக்கிய மேதைகள்; பொதுவுடைமை வாதிகள்; சமநீதிப் புரட்சியாளர்கள்; தமிழ்ப் பற்றாளர்கள், புதுக்கவிஞர்கள் மனிதநேய மாண்பினர்கள்- என்று இராமானுசரின் வாழ்க்கையை அலசி ஆராயாதவர்களே இல்லை எனலாம்.
4.உலகத்தின் விளிம்புகள் வரை விரிந்த, உடையவரின் உயர்ந்த வாழ்க்கையை, எழுத்துக்களில் வடித்தவர்களில், காலத்தினால் முற்பட்டவர், வடுகநம்பி என்ற ஆந்திரபூர்ணர். இவர் ‘யதிராஜ வைபவம்’ என்ற வடமொழி நூலில் 114 சுலோகங்களில் ஸ்ரீராமாநுஜரின் சரித்திரத்தை எடுத்துரைத்தார். இவர் இராமானுசருக்கு அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர்.
5. உடையவர் காலத்திலே வாழ்ந்து அவருடைய குணங்களையும் ஞானத்தின் உயர்வையும் உலகறியச் செய்தவர் திருவரங்கத்தமுதனார். இவர் இயற்றிய இராமானுச நூற்றந்தாதியை இராமானுசரே கேட்டு மகிழ்ந்து அடியார் பெருமக்களை அனுதினமும் அதை அநுஸந்திக்கும்படி ஆணையும் இட்டருளினார்.
6. இராமானுச நூற்றந்தாதி, கட்டளைக் கலித்துறை யாப்பில் 108 பாடல்களைக் கொண்டது. ‘ப்ரபந்ந காயத்ரி’ என்று புகழப்படும் பெருமை வாய்ந்தது.
7. அமுதனாரையும் வடுகநம்பியையும் போல் இராமானுசர் காலத்திலேயே வாழ்ந்த ‘கருடவாஹன பண்டிதர்’ என்ற வித்வானால் விளம்பப்பெற்றது ‘திவ்யஸூரிசரிதம்’ என்ற வடமொழி நூலாகும். இது ஆழ்வார்களின் வரலாற்றையும் சேர்த்துச் சொல்கிறது. காவியரீதியில் இந்நூல் அமைந்து கற்போரைக் களிப்புறச் செய்கிறது.
8. இராமானுசரின் வாழ்க்கையைத் தெரிவிக்கும், பழமையான குருபரம்பரை நூல், ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம். இந்த நூலை, மணிப்ரவாள நடையில் எழுதியவர், நம்பிள்ளையின் சீடரும் ,துறவியுமான,"" பின்பழகிய பெருமாள் ஜீயர்"".
9. ஆசிரியராகிய நம்பிள்ளையினும் மிக மூத்தவரான இவர், ஆசிரியர்க்கு அணுக்கராய்த் தொண்டுகள் செய்தவர்.
10. இத்தகைய பேரறிவாளர் ஆழ்வார்களின் வரலாற்றையும், ஆசார்யர்களின் வரலாற்றையும், சிறப்பாக இராமானுசரின் வரலாற்றையும், உரைநடையில் நூலாக்கி உதவினார்.
13. ஸ்ரீமணவாள மாமுனிகளால் இயற்றப்பெற்றதாய் வட மொழியில் அமைந்து புகழ் பெற்ற ஓரு நூல் ‘யதிராஜ விம்†தி’ ஆகும். இது 20 ச்லோகங்களில் செவிக்கினிதாகத் தொகுக்கப் பெற்றது. இவரது காலம் (கி.பி.1370 – 1443).
14. ஸம்ஸ்க்ருதத்தில் காவியரீதியில் அமைந்துள்ள மற்றொரு அருமையான நூல் ‘ஸ்ரீராமாநுஜ சம்பு’ ஆகும். இதனை இயற்றியவர் கி.பி.1600இல் வாழ்ந்த கர்க்க கோத்ரத்தில் உதித்தவரான ஸ்ரீராமாநுஜாசார்யர் என்பவர்.
(1) கீழையூர் சடகோப தாசர் இயற்றிய அரிசமய தீபம்,
(2) வடிவழகிய நம்பிதாசர் இயற்றிய குருபரம்பரை
(3) பரமயோகி விலாஸம்
(4) பாகை சீதாராமதாசர் இயற்றிய ‘இராமானுச சரிதை’
(5) குருபரம்பரைப் புராணம்
(6) கோழியாலம் சப்தம் வங்கீபுரம் ஸ்ரீநிவாஸாசார்யர் இயற்றிய திவ்யசூரி சரிதம்.
19.பிள்ளைலோகம் ஜீயர் வரலாற்றுணர்வு மிக்கவர்; காலக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விருந்தாகப் படைத்தவர்; இந்தியத் துணைக் கண்டத்தின் நிலவியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், அரசியல் மற்றும் மாற்றுச்சமயத்தினரின் எதிர்ப்புகள், ஏழை எளிய மக்கள் முதல், மேட்டுக்குடி மக்கள்வரை பரவியிருந்த, சமுதாயச் சூழ்நிலை ஆகிய கூறுகளை உட்படுத்தி, விரிந்து பரந்த இராமானுச திவ்ய சரித்திரத்தை வழங்கியிருக்கிறார் பிள்ளைலோகம் ஜீயர்.
20. அக்கால ஆட்சியியல், கலையியல், தொழில்முறை, ஆலய நிர்வாஹம் என்று பல்வகைத்துறைகளில் பழகியிருந்த தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார் இவர் தம் நூலில்.
21. இராமானுசப் பேராறு தென்னரங்கம் தொடங்கி இமயத்தின் கொடுமுடியிலேறியது; விசிஷ்டாத்வைதக் கொடியை ஆங்கே ஏற்றியது, அங்கிருந்து பெருகிஓடி, பல்வேறு மாநிலங்களில், வளம் கொழிக்க வைத்து ,மடங்கள் பலவற்றை நிறுவித், தென்னன் தமிழான புல்லாணியில் கடலோடு கலந்தது. அப்பேராற்றில் குள்ளக் குளிரக் குடைந்தாடிய பெருமக்களே, பிள்ளையுறங்கா வில்லிதாசர், கோயில் வண்ணாத்தான், வயலாலி ஞானப்பெண் (இவள் திருக்குலத்தோர் என்று அழைக்கப்படும் தலித் வகுப்பைச் சார்ந்தவள்) ஆகியோரும் மற்றும் மாந்தர் பலரும் ஆவர்.
22. பிள்ளைலோகம் ஜீயர், இராமானுசரின் திக்விஜய வரலாற்றில், நெஞ்சை நெகிழ்விக்கும் நிகழ்ச்சிகள், பலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். இராமானுசர் பயணித்த பெருவழிகளைத், திசை சொல்லித் தொலைவு சொல்லி, ஒரு பயணவழிகாட்டும் படத்தையே ஜீயர் வரைந்து முன் வைத்திருக்கிறார். அவ்வழிப் புலம்பற்றி ஐநூறு ஆண்டு களுக்குப் பிறகு, ஜீயர் தாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு வழிச் செலவில், செவிவழிச் செய்திகளைச் சேகரித்துத் தாம் எழுதிய, இராமானுச திவ்ய சரிதைக்குக் கருத்துக் கருவூலங்களைத் தொகுத்து வைத்துள்ளார்.
23. விக்ரமசோழன் திருவீதி கிழக்குப் பகுதியில், (கீழை உத்தர வீதி) இராமானுசர், திருவாய்மொழி விண்ணப்பம் செய்யும், இசைகாரர்களான அரையர்களைக் குடியமர்த்தி, அவ்வீதிக்குச் ‘செந்தமிழ்பாடுவார் வீதி’ என்று பெயர் சூட்டினார். ‘செந்தமிழ் பாடுவார்’ என்ற தொடரைத் திருமங்கை மன்னன் திருவாக்கிலிருந்து தேர்ந்தெடுத்தார். (பெரிய திருமொழி 2-8-2)
24. திருவரங்கம் பெரியகோயிலில் பணிபுரிந்த, அனைத்துக் கொத்திலுள்ளாரையும், அவர்கள் முன்பு வாழ்ந்துவந்த, வெளிச் சுற்றுக்களிலிருந்து குடிபெயரச் செய்து, நம்பெருமாள் கைங்கரியங்களுக்கு உதவும்படி, திருக்கோயிலுக்கு அண்மையில், உள் திருச்சுற்றுக்களில், வாழ்ந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
25.ஆளவந்தார் வாழ்ந்திருந்த மடத்தினைப் பெரியநம்பிக்கும், அதன் எதிர்மனையை மாடத்திருவீதியில், (தற்போதைய கீழைச்சித்திரை வீதியில்) ஆழ்வானுக்கும், அந்த மனைக்குத் தெற்குப் பகுதியில் முதலியாண்டானுக்கு, ஒரு திருமாளிகையையும் அளித்தார்.
26. பூர்வகாலந்தொட்டு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி, திருவரங்கம் பெரியகோயிலில் வழிபாடுகள் நடந்து வந்தன. இடையில் (அவாந்தரத்தில்) வைகாநஸர்களின் ப்ரவேசம் ஏற்பட்டிருந்ததை, இராமானுசர் மாற்றி, மீண்டும்"" ஸ்ரீபாரமேச்வர ஸம்ஹிதை"" ப்ரகாரம், ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம வல்லுநர்களைக் கொண்டு, திருவாராதனங்களையும், திருவிழாக்களையும், நடத்தி வரும்படியான ஏற்பாடுகளைச் செய்தார்.
27. எம்பெருமானார் 25 ஆண்டுகள், திக் விஜயம் செய்து, திருவரங்கம் திரும்பினார். திக்விஜயயாத்ரையைத் திருமாலிருஞ்சோலையில் தொடங்கினார். அப்போதுதான் நூறு தடா நிறைய, அக்கார அடிசிலும் வெண்ணெயும், ஏறுதிருவுடையானுக்கு ஸமர்ப்பித்தருளினார். அழகர் திருமலையில் ராமாநுஜகூடம் எழுப்பி, பரமஸ்வாமி கைங்கர்யத்தை மேற்பார்வையிடுவதற்கு, ஒரு ஜீயரையும் நியமித்தருளினார்.
28. திருமகள் கேள்வனாய், அரவணைமேல் துயில்பவனாய், எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொண்டவனாய், தாழ்ந்த குணங்களுக்கு எதிரிடையான கல்யாணகுணங்களுக்கெல்லாம் ஒரிருப்பிடமானவனாய், பொருள்கள் அனைத்திலும் உள்ளுறைபவனாய் விளங்குபவன், ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணனிடம், நாம் சரணாகதி செய்யவேண்டும் என்ற, உன்னதத் தத்துவத்தைப் போதித்தார்.
29. ஒரு பங்குனி உத்தர நன்னாளிலே, அழகிய மணவாளனும், ஸ்ரீரங்கநாச்சியாரும் சேர்ந்து இருக்கின்ற, இருப்பிலே, நம்போல்வார் நற்கதி அடையும்படி, திவ்ய தம்பதிகளிடம் மூன்று கத்யங்களை (சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம்) விண்ணப்பம் செய்தார்.
30. நம்பெருமாளுக்கு, அனைத்துவித கைங்கர்யங்களையும், உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக ,அந்தணர்களைக் கொண்ட, பத்துக் கொத்துக்களையும், அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட, பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி, அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில், தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான, வழிமுறைகளை, ஏற்படுத்தி வைத்தார்.
31.எழுநூறு ஸந்யாசிகளாலும், எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த்தரான, மற்றைய ஆசார்ய புருஷர்களாலும், எண்ணில டங்கா சாத்தின, சாத்தாத முதலிகளாலும், முந்நூறு கொத்தியம்மை மார்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும் தொழப்படுபவ ராய் “ஸ்ரீரங்கநாததே ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீச்சவர்த்ததாம்” என்கிறபடியே, நம்பெருமாளை மங்ளாசாஸனம் பண்ணிக் கொண்டு, எழுந்தருளியிருந்தார் இராமானுசர்.
32. இவ்வாறாக எழுந்தருளியிருந்த, உடையவரை ஆச்ரயித்த, முதலியாண்டானுடைய திருக்குமாரரான, கந்தாடை யாண்டான், நடாதூராழ்வான், ஸ்ரீபராசரவேதவ்யாச பட்டர், கூரத்தாழ்வான் ஆகியோர், ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்கு உறுதுணையாகவும், கூரத்தாழ்வான் எம்பெருமானார் மடத்தில் உள்ள, நூலகத்திற்கு காப்பாளராகவும், பண்டகசாலைப் பொறுப்பான ராகவும் பணியாற்றி வந்தனர்.
33. அருளாளப் பெருமாள் எம்பெருமானார், தாம் மிகச் சிறந்த சாஸ்திரபண்டிதராய்த் திகழ்ந்து வந்தபோதிலும், அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை எல்லாம், தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற, ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற இரண்டு நூல்களை, அருளிச் செய்திட, அதனால் மகிழ்வுற்ற இராமானுசர், தம்முடைய திருவாராதனப் பெருமாளான, ‘பேரருளாளரை திருவாராதனம் பண்ணிக் கொண்டிரும்’ என்று நியமித்தருளினார்.
34. கிடாம்பியாச்சானும், கிடாம்பிப் பெருமாளும், திருமடைப் பள்ளி கைங்கர்யத்திற்கு, கடவராய் இருப்பர்கள். வடுகநம்பி, பசுக்களுக்குப் புல் இடுவதற்கும், உடையவருக்கு எண்ணெய்க் காப்பு சாற்றுகைக்கும், உரிய வேளைகளில், பாலமுது ஸமர்ப்பிப்பதற்கும் கடவர்.
35. முதலியாண்டான், எம்பெருமானார் திருமண்காப்புச் சாற்றிக் கொள்ளும்போது, அதற்கான பணிவிடைகளைச் செய்வார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் ஸமர்ப்பிக்கும்போது, அவருக்கு அந்த கைங்கர்யத்தில் உதவி செய்திடுவார். எம்பெருமானார், திருவீதிகளில் எழுந்தருளுவதற்கு முன்பாக, அவருக்குத் திருவடி நிலைகளை (பாதுகைகளை) ஸமர்ப்பித்திடுவார்.
36. இந்தக் காரணம் பற்றியே, உடையவரது திருவடி நிலைகளுக்கு, முதலியாண்டான் என்ற பெயர், நிலை கொண்டு ள்ளது. ஆகவே அடியார்கள் எம்பெருமானார் ஸந்நிதியில், ஸ்ரீசடாரி ஸாதித்திடவேண்டும் என்று கேட்காமல் “முதலியாண்டான் ஸாதித்திட வேண்டும்” என்று பணிவோடு ப்ரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.
37. எம்பார், இரவில் இராமாநுசர் திருப்படுக்கையிலே, சயனித்திருக்கும் போது ,அவருடைய திருக்கால்களைப் பிடித்து விடுவர். உடையவருடைய திருப்பரியட்டங்கள் திருத்தவும், திருக்கை ஸமர்ப்பிக்கவும், இரவில் எம்பெருமானார் படுக்கைக்கு எழுந்தருளும் முன்பு, அவருடைய திருப்படுக்கையைச் சோதிப்பதும், எம்பார் மேற்கொண்டு வந்த பணிகளாம்.
38. அன்றாடம் படுக்கை விரிப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு, வெயிலிலே உலர்த்தப் பெற்ற பிறகு, அவைகள் திருக் கட்டிலிலே சேர்த்திடப்படும். தினந்தோறும் எம்பார், உடையவர் படுக்கையறைக்கு எழுந்தருள்வதற்கு முன்பு, படுக்கையில் படுத்துப் புரள்வாராம். இதைக்கண்ட பலர் எம்பாரிடம் ‘இது தவறானதும், முறையற்ற செயலும் அல்லவா’ என்று வினவிட, அதற்கு எம்பார், தாம் இவ்வாறு செய்வது, படுக்கையில், ஏதேனும் முட்களோ ,அல்லது புழுக்களோ, இருந்தால், அவை இராமானுசர் திருமேனிக்குத் துன்பம் விளைத்திடும், அவ்வாறு நேர்ந்திடாவண்ணம், தாம் இவ்வாறு செய்வதாக, மறுமொழி அளித்தார்.
39. கோமடத்து சிறியாழ்வான், திருக்கை செம்பும், ஸ்ரீபாதரக்ஷையும் எடுப்பர். பிள்ளை உறங்காவில்லிதாஸர், வரவு, செலவு கணக்குகளை அன்றாடம் எழுதிக் கொண்டும், கருவூல காப்பாளராகவும் பணிபுரிவர்.
40. அம்மங்கியம்மாள், பால் அமுது காய்ச்சுவார். உக்கலாழ்வான், திருத்தளிகை மாற்றுவார். மாருதியாண்டான், திருவாராதனத்திற்கும், தளிகைக்குமான நீர் கொணர்ந்து சேர்ப்பார். மாறொன்றில்லா சிறியாண்டான், அமுதுபடி சுத்தம் செய்வது, கரியமுது திருத்துவது ஆகிய பணிகளைச் செய்துபோவார்.
41. வண்டரும், செண்டரும், தினந்தோறும் மடத்துக்கு 1,000 பொன் ஸமர்ப்பிப்பர். இவர்கள் உறையூர் சோழருடைய அரண் மனையில் படைத்தலைவர்களாக,பணி புரிந்து வந்தனர். இவர்கள் மல்யுத்த வீரர்கள்.
42. ராமாநுஜ வேளைக்காரர், எம்பெருமானார் எழுந்தருளும்போது, திருமேனிக்காவலராகப் பணி புரிந்து வந்தனர். அகளங்க நாட்டாழ்வான் எதிரிகளை அழித்து, திருவரங்கத்தைக் காத்திடும் பணியை செய்து வந்தார். இவ்வாறு உடையவரை ஆச்ரயித்திருந்தோர் பலரும், பல கைங்கர்யங்களை செய்து வந்தனர்.