பஞ்ச-சம்ஸ்காரம் என்பதை நல்வினை சடங்குகள் என்று தமிழில் சொல்லுவர். அதாவது,
• தாபசம்ஸ்காரம் : (தாபம்=சூடு) பெருமாளின் திருஅடையாளங்களாகிய சங்கு, சக்கரத்தில், வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கையும் நிரந்தரமாகத் தரிப்பது.
• புண்ட்ரசம்ஸ்காரம் – (திருமண் காப்புத் தரித்தல்) இறைவனின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
கேசவாய நம-நெற்றி; நாராயணாய நம-நாபி; மாதவாய நம-மார்பு; கோவிந்தாய நம-நெஞ்சு; விஷ்ணுவே நம-வலது மார்பு; மதுசூதணாய நம-வலது புஜம்; த்ரிவிக்ரமாய நம-வலது தோள்; வாமனாய நம- இடது நாபி; ஸ்ரீதராய நம- இடது புஜம்; ரிஷிகேசாய நம- இடது தோள்; பத்மநாபாய நம- அடிமுதுகு; தாமோதராய நம; பிடாரி.
• நாமசம்ஸ்காரம் – (பெயர்) அதாவது, பெருமாளின் பெயர் அல்லது அவரது அடியவர்களான ஆசார்யர்களின் பெயர்கள் ஏதாவது ஒன்றை வைத்து, அப்பெயரின் முடிவில் தாசன், அடியவன் என்று வருமாறு குருவால் பெயர் வைக்கப் பெறுதல்.
• மந்த்ரசம்ஸ்காரம் – (மந்திரம்) எட்டெழுத்துகளுடைய திருமந்திரத்தையும், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை அதன் மறைபொருளோடு குருவின் மூலம், காதில் உபதேசமாகப் பெறுதல்.
• யாகசம்ஸ்காரம் – (பூசை, ஆராதணை) திருவாராதணை மற்றும் பூசை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்.
இவை ஐந்தனையும் குருவிடமிருந்து (ஆசார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும். பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட ஒருவர் வேத முறைப்படி வைணவராகிறார். இதன் மூலம் அவரது உடல், மனம், சொல், சிந்தனை அனைத்திலும் வைணவநெறிக்கான நல்வினைகளும், சிந்தனைகளும் அவர் மனத்தில் பதிய ஆரம்பிக்கும்.