108 வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்

இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும். 

இது  திவ்ய தேசம் அல்ல. ஆனால் அதனினும் பெருமை மிக்கது. நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது. எனவே முதலில் இந்த தலத்தை தரிசித்துவிடுவது சாலச் சிறந்தது.

ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம். சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பன்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினார். இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆச்சார்யர்களின்  பரம்பரை துவங்குகிறது.

இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கலம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். 

இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி இருக்கிறது.

‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.

காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். 

மூலவரின் சந்நிதிக்கு இடப்புறம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன.

பெருமாள் பெயர் : வீரநாராயணப் பெருமாள்

உற்சவர் : ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.

தாயார் : மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.

தீர்த்தம் : வேதபுஷ்கரணி, காவேரி நதி

தலவிருட்சம் : நந்தியாவட்டை

இந்தத் திருக்கோவிலில் ஸ்ரீ யோக நரசிம்மரையும் ஸ்ரீ வராகரையும் நாம் தரிசிக்கலாம். 

பிராகாரத்தில் ஆளவந்தார் சந்நிதியை வணங்கி விட்டு தாயார் சந்நிதிக்குச் செல்வோம். இங்கு தாயார் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் என்னும் திருப்பெயரோடு அருள்கிறாள். உற்சவ தாயார் ஸ்ரீ செங்கமல வல்லித் தாயார் என்று அழைக்கப் படுகிறாள். அடுத்து ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் ஆகியோரையும் வணங்குகிறோம்.

பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். தவிர அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி உண்டு.

கோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர். இதன் எதிரில் ராமர் சன்னதி உள்ளது.

இந்த ஆலயத்தின் தலவிருட்சம் நந்தியாவட்டைப் பூஞ்செடி. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடுகளும்; திருவரங்கம் பஞ்சாங்கத்தையொட்டி திருநட்சத்திரங்கள், திருவிழாக்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங் களுக்கு ஒத்த பெருமையுடைய இந்தத் திருத்தலத்தில் வைணவ ஆலயங்களுக்குரிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. 

இக்கோவிலில் நாதமுனிகள் மண்டபம் உள்ளது. இதில்தான் நாதமுனிகள் பெருமாளின் முன்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீண்டும் உலகுக்கு வெளியிட்டாராம்.

தென்னாற்காடு மாவட்டத்தின் தென்கோடியில், கொள்ளிடத்தின் வடக்கே கடலூர் மாவட்டத்தில் உள்ளது இத்திருத்தலம். இத்திருத்தலத்துக்கு வருவோர் “குப்பங்குழி’ என்ற இடத்திற்குச் சென்று நாதமுனிகளின் அவதாரத் திருமாளிகையையும் தரிசனம் செய்யலாம். 

நம்மாழ்வார் நேரில் தோன்றி நாதமுனிகளுக்கு திருவாய்மொழி, நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை  உபதேசித்ததாக உள்ள ஐதீகத்தின்படி, வைணவ ஆலயங்களில் வடமொழி வேதத்துக்குச் சமமாக இவ்விரு நூல்களும் படிக்கப்பட்டு போற்றப்படுகின்றன.

ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இங்கு ஆண்டுதோறும் அபிஷேக ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். திவ்யபிரபந்தம் பாடி முடிந்தவுடன் பூஜை செய்து தயிர்சாதம் பிரசாதமாய் கொடுப்பார்கள். அதை புசிப்பது மிகவும் நலம் தரும்.

கோவில் முகவரி :

வீரநாராயணப் பெருமாள் கோவில்,
காட்டுமன்னார்குடி – 608301.
கடலூர் மாவட்டம்.
Ph : 04144-261523

ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்