14  பங்கயக் கண்ணான்

கிராமங்கள் என்றால் பொழுதே போகாது என்பார்கள். ரொம்ப தவறு. பொழுது போய் விடுகிறதே என்று ஏங்கும் அளவுக்கு இயற்கை கொழிக்கிறதே அங்கே. இப்பவே இப்படியென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆயர்பாடி கிராமம் எவ்வளவு தெய்வலோகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தெய்வமே அங்கே வாழ்ந்தபோது!

இத்தகைய கிராமியச் சூழ்நிலையிலே மார்கழி 13வது நாள் நகர்ந்து மார்கழி 14வதுக்கு வழி விட்டது. .

ஆண்டாள் எப்போதுமே ஒரு இயந்திரம் மாதிரி.
சொல்லி வைத்தாற்போல் அதிகாலையில் எழுந்து மற்றவர்களையும் எழுப்ப வந்துவிட்டாள்.
அவள் தோழியர்கள் அனைவரும் ஏறக்குறைய வந்தாகி விட்டதே. வழக்கம்போலே ஒரு சிலரைத்தவிர.
ஆண்டாள் தேடுகிறாள் யார் இன்னும் வரவில்லை என்று.

''ஆண்டாள் இதைப் பார்த்தாயா, இந்த கோமளா வீட்டு புழக்கடையில் இதோ தெரிகிறது பார் இந்த அல்லிக்குளத்தில் நேற்று ராத்திரி பூத்த ஆம்பல் தூக்கம் வந்து மெதுவாக கூம்பிவிட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே ஜோராக மொட்டவிழ்ந்து மெதுவாக மலர்கிறதே. "

ஆண்டாள் சிரித்துக்கொண்டே தலை அசைத்தபடியே கோமளா வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டி எழுப்புகிறாள்.

''அடியே, கோமளா, உன் வீட்டு பின்புறம் குளத்துக்கு அப்பால் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சில துறவிகள் செல்வதை வெளியே வந்து பாரேண்டி? வெள்ளையாக தாடி மீசை, பல், உடலில் செங்கல் நிற காவி உடை, கையில் வெள்ளை சங்கு. அதன் மூலம் தான் பெருமாள் முன் நின்று பரவசத்தோடு அவர்கள் சங்கத்தை ஊதி சுப்ரபாத சேவை பண்ணப்போகிறார்கள். ''வா, அவர்களை பார்த்துக் கொண்டே நாம் நதிக்கு சென்று நீராடி, வழக்கமாக செய்யும் நோன்பு பிரார்த்தனைகள் முடித்து பிறகு பெருமாள் கோவிலுக்கும் செல்வோம்''

ஆண்டாள் குரல் கோமளாவுக்கு உள்ளே கேட்டதோ இல்லையோ, வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தருக்கு ஸ்பஷ்டமாக கணீரென்று கேட்டது. வில்லிப்புத்தூரிலும் முதல் நாள் பெய்த மழை இன்னும் முழுதும் நிற்கவில்லை. எனினும் அதிகாலையில் அன்றும் எழுந்த விஷ்ணுசித்தர் ஸ்நானம் முடிந்து பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கோதை அன்றைய பாசுரத்தை எழுதி தயாராக வைத்திருந்ததால் அதை ரசித்து படித்தாகி விட்டது. அந்த ரசானுபவத்தில் தான் ஆயர்பாடி ஆண்டாள் நினைவில் நின்றாள்.

மார்கழி முப்பது நாளுக்கு பதிலாக முன்னூறு நாளாக இருக்கக்கூடாதா என்றே அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எதற்காக? தினமும் ஆண்டாளின் பாசுரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்குமே என்ற ஒரு ஆர்வம்!

மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து அந்த வார்த்தைக் கோவையின் அழகைப் படித்தார்.

'' உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

மேலெழுந்தவாரியாக இதில் வர்ணனை என்று தென்பட்டாலும் அதன் உள்ளர்த்தம் அவரைக் கவர்ந்தது.

ஞானத்திலும் கண்ணன் மீதுள்ள பற்றிலும் கோதை சிறு பெண்ணல்ல. பழுத்த கிழவி. அவளது திருப்பாவை ஒரு உபநிஷதம் என்றால் அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. என்ன ஞானம் அந்த சிறு வயதிலேயே அவளுக்கு!

நாக்கு உணவை ருசிக்க மட்டுமல்ல. சாக்ஷாத் கிருஷ்ணனின் பெருமையைப் பாடுவதற்காகவே .'வா வந்து கிருஷ்ணனைத் துதி செய்' என்று அந்த தூங்கும் பெண்ணையா எழுப்புகிறாள்.? அல்ல! அஞ்ஞானத்தில் உழலும் மாந்தர்களே உய்வீர்களாக என்று உலகத்துக்கே ஒரு வரியில் வழிகாட்டுகிறாளே !

''அப்பா'' என்று கோதை அழைக்கும் குல் கேட்டு சிந்தனை தடைப்பட்டு விஷ்ணு சித்தர் மனம் வில்லிபுத்தூர் ஆஸ்ரமம் திரும்பவே அவர் தானாகவே கோதையை நோக்கி உள்ளே சென்றார்.