இன்னொரு நாள் விடியற்காலை தோன்றியது. அரை இருட்டு. சில பெண்கள் ஆண்டாள் தொடர மற்ற தோழிகள் வீட்டுக்கு சென்று ஆள் சேர்க்கிறார்கள்.
''இன்னும் குளிர் விட்டபாடில்லை. இதுவரை மார்கழி ஆரம்பித்து நாலு நாள் எப்படி நகர்ந்தது என்றே தெரியவில்லை. இந்த மார்கழி மாதம் நிஜமாகவே எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுவும் உன்னோடு விடியற்காலை எழுந்து இந்த மாதிரி குளித்து, பஜனை பாட்டு பாடிக்கொண்டு விரதம் செய்வது மனதுக்கு என்னவோ போல் இருக்கிறது ஆண்டாள் "
''ஆமாம் ஆண்டாள், வைதேகி சொல்வது வாஸ்தவம் தான். இன்னிக்கு நீ புதுசாக என்ன சொல்லப் போகிறாய்?
''இன்னிக்கு எனக்கு ஒரு புது பாட்டு தோன்றியது. அதை கவனம் செய்து வைத்திருக்கிறேன். இதோ பாடுகிறேன் கேளுங்கள் தோழியரே''
ஆண்டாள் கணீரென்று பாடுகிறாள்
''மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.''
''ஆண்டாள் நீ எங்களைப் போல் அல்ல. பாடவும் நன்றாக வருகிறது உனக்கு. நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாய். நீ பாடினாயே அதற்கு என்ன அர்த்தம் சொல்லேன்?'' என்றாள் ஒரு இடைப்பெண் .
ஆயர்பாடியில் வழக்கம் போல் இடைச்சிறுமிகளின் கோஷ்டி இப்போதெல்லாம் குறித்த நேரத்தில் சேர்ந்து விடுகிறது.
''ஆண்டாள் நான் கேட்டேனே அர்த்தம் அது என்ன சொல்லு . கேட்கவே ரொம்ப ஆர்வமா இருக்கு ""
"இன்னிக்கி மார்கழி 5ம் நாள் உங்களுக்கு கிருஷ்ணனை பத்தி கொஞ்சம் கூடவே சொல்லப்போறேன்.
இதைக் கேளுங்கள், கிருஷ்ணனை நினைச்சு மனசார பாடி ஆடி வேண்டினால், நெருப்புலே போட்ட துரும்பு புல் மாதிரி நம் கஷ்டம் எல்லாம் காணாம போகும். கிருஷ்ணன் என்ன சாமான்யமானவனா. வட மதுரையிலே பிறந்த வீராதி வீரன் டீ. இந்த யமுனை நதியில் மீன் குஞ்சா நீந்தி அவன் விளையாடுவதை நாளெல்லாம் பார்க்கலாமே. ஆயர் பாடி கோபர்களுக்கு நடுவிலே அவன் ஒரு பளபளக்கும் விளக்கு டீ. ஏதோ, அம்மா மேலே இருந்த பாசத்தினாலே அந்த மகா பலசாலி அவள் கட்டிய கயிறை அவளே அவிழ்க்கும் வரை வயிற்றில் கயிறோடு இருந்தவனாச்சே. சிறந்த நடிகன். அந்த கிருஷ்ணனை வேண்டி நிறைய பூவெடுத்து கை நிறைய போடுவோம் . வேண்டிக்குவோம்''
''இந்த நோன்பு நமக்கு வேண்டிய நன்மைகளைத் தருவது மட்டும் அல்ல. தீமைகளையும் விரட்டி விடுமே.அப்படித்தானே ஆண்டாள் " என்றாள் ஒரு சிறுமி.
''ஆமாமடி''.
''ஏண்டி ஆண்டாள், பாவம் கிருஷ்ணனை அவன் அம்மா கட்டிப்போட்டாள்? அவ்வளவு விஷமமா பண்ணுவான்?
ஆண்டாள் அருகே இருந்த பெண்ணை பார்த்தாள் . அது ஏதோ யோசித்துக் கொண்டிருந்தது.
'' கோமளா என்னடி யோசனை?''
''பாவம்டீ ஆண்டாள், கிருஷ்ணன் சின்ன குழந்தை இல்லையா. வயிற்றிலே கயிற்றால் கட்டினால் அந்த மெல்லிய வயிற்றில் கயிறு அழுத்தி அவனுக்கு எவ்வளவு வலித்திருக்கும்?'' என்றாள் கோமளா.
''அதெல்லாம் ஒண்ணுமில்லை. எல்லாம் வேஷம். அந்த மாய கிருஷ்ணனை கட்டவா முடியும். அம்மா பேரில் இருந்த பாசம், அன்பு, அதற்க்கோசரம் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். அவனுக்கு யாராவது தூய மனத்தோடு ஒரு துளி ஜலம், ஒரு துளசி தளம், கொடுத்தாலே திருப்தி அடைவானே. மனம், வாக்கு காயம் மூன்றும் அவனையே, அவனைப்பற்றியே, அவனுக்காகவே ஈடுபட்டால் அதைவிட சிறந்த தவம் எதுவுமில்லை. அவன் அன்புக்காக எதற்கும் 'கட்டுப்படுவான்" என்றாள் ஆண்டாள் .
“பசிக்குது ஆண்டாள்” என்றாள் ஒரு சிறுமி. ''அப்பறம் என்ன சொல்லுடி?
“இதோ கொஞ்சநேரம் அந்த கிருஷ்ணனை வேண்டிக் கொண்டு நாம் எல்லோரும் வீடு போய் விடலாம்'''
இன்னிக்கி இது போதும் உங்களுக்கு. விட்டு விட்டு சொன்னாதான் உங்களுக்கு மேலே மேலே தெரிந்துகொள்ள தோணும். நாளைக்கு மீதியை சொல்றேன். ''
எல்லா சிறுமிகளும் ஆயர்பாடியில் வீடு திரும்புமுன் நாம் இங்கிருந்து நேராக வில்லிப்புத்தூர் போய்விடுவோம். வழக்கம்போல் இன்று காலையும் நாம் கோதையின் வீட்டுக்குப் போக வேண்டியிருக்கிறதே.
எனவே நாம் இப்போது வில்லிபுத்தூரில் இருக்கிறோம்.
ஆண்டாள் வாய் மூலம் கோதை உரைத்த மேற்சொன்ன இன்றைய பாவை பாசுரம் விஷ்ணுசித்தரை சிலையாக்கியது. அவர் மனத்தில் ஆயர்பாடி சிறுமிகள் சம்பாஷணை திரும்ப திரும்ப ஒலித்தது.
அமைதியான அந்த விடியற்காலையில் கோதையின் கணீர்க் குரல் இந்த பாசுரத்தை ஒலித்தபோது பெரியாழ்வார் மட்டுமல்ல அவர் நந்தவனத்திலிருந்த புஷ்பங்கள் கூட விகசித்தன. காற்றில் ஆடிய அவற்றின் தோற்றம் அந்த பாசுரத்தின் அருமையிலும் இனிமையிலும் தலை அசைப்பதை போன்று காணப்பட்டது.
விஷ்ணு சித்தர் அந்த பாசுரத்தின் இனிய உட்பொருளில் ஆழ்ந்தார்.
''...........முன்வினை இவ்வினை பாபங்களை போக்கும் சக்தி வாய்ந்த பாசுரம் அல்லவா இது. """''''' தோழியரே கவனமாகக் கேளுங்கள். இந்த நோன்பு விழாவிற்கு எந்த இடையூறும் இன்றி இனிதே முடிய அந்த மாயவனை, கிருஷ்ணனை வேண்டுவோம். நல்ல காரியத்திற்கு தான் எப்போதும் தடை.
கெட்ட காரியமே ஒரு தடை, அதற்கேது மற்றொரு தடை?.
என் உயிர் மூச்சே, அரங்கா, என்னே உன்கருணை. என்னுடைய செல்வம், இந்த இளம்பெண் கோதை, ஆண்டாள் என்ற இடைச் சிறுமி மூலம் காலம் காலமாக விளக்கமுடியாத அற்புத விஷயங்கள் தெள்ளத் தெளிவாக புரியப் பண்ணுகிறாளே. அது உன் அருளினாலே தானே.''
ஏதாவது ஒரு காரியம் ஆரம்பித்து, செய்து முடிப்பதற்குள் எத்தனை இடையூறுகள் நிகழ்கிறது.
வசிஷ்டர் குறித்த நன்னாளில் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்ததா?
ஆண்டாள் என்கிற படிக்காத அந்த பேதைப்பெண் மூலம் என் கோதை என்னமாய் நமக்கு சொல்கிறாள். ''நீ அந்த கிருஷ்ணனை பூஜித்து வந்தால் அவன் நம்மை பாதுகாப்பானே. கெடுதல் வராதே. சுத்தமான பசும்பால் பருகினால் பித்தம் கிட்டே நெருங்குமா? என்கிறாளே!
ராமன் ஏன் தனக்கு பட்டாபிஷேகம் வராமல் தள்ளி வைத்துக்கொண்டான் என்பதே அநேகருக்கு புரிவதில்லை. தனது பக்தர்கள் சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், தனது பாதுகை, ஆகியவர்கள்/ஆகியவற்றை மதித்து அவர்கள்/அவற்றுக்கு பட்டாபிஷேகம் நடந்த பின்னரே தனது பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டானே. பக்தவத்சலன் அல்லவா. பக்தர்கள் மகிழ்ச்சி அல்லவோ அவனுக்கு முக்கியம்!
அந்த ராமன் தானே இந்த கிருஷ்ணன். குழந்தையாக இன்ருந்தபோதே யமுனையை வழி விட வைத்தான். யசோதை தன்னை கயிற்றால் கட்ட அனுமதித்தான். அவன் காருண்ய சிந்தோ அல்லவா?
''ஏ தாமரை மலரே, அவன் திருவடிகளில் நீ குடியிருக்க கொடுத்து வைத்தவள். என் அருமை நந்தவனமே , நீ மகராசி. வாரி வாரி புஷ்பங்களை வழங்கி அவை அத்தனையும் அந்த கோவிந்தனான அரங்கனை அலங்கரிக்க முடிந்ததே. அருமை வண்ண வண்ண புஷ்பங்களே, உங்களோடு சேர்ந்தும் உங்களை மலராக தொடுப்பதால், நானும் அல்லவோ கொடுத்து வைத்தவனாகி விட்டேனே. '' வாயினால் பாடி ,மனதினால் சிந்திக்க ....''என்ன பாக்கியம் பண்ணிருக்கிறேன் .
பூக்களை பறித்துக்கொண்டே விஷ்ணு சித்தர் சிந்தனையில் இவ்வாறு இருக்கும்போது ,
''அப்பா "
பாசம் நிறைந்த பெண்ணின், வீணையின் நாதம் தோற்கும் கோதையின் குரல் பெரியாழ்வாரை பூவுலகத்தில் வில்லிப்புத்தூர் நந்தவன ஆஸ்ரமத்திற்கு மீட்டது. பூக்குடலையுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.