9. மாமாயன் மாதவன்
ஆயர்பாடியில் ஆண்டாள் மனம் கலங்கவில்லை. எல்லோருக்கும் ஊக்கமளித்து உற்சாகத்தோடு அவர்களை பாவை நோன்பில் பங்கு கொள்ள சகல முயற்சிகளிலும் துவள வில்லை. நீங்கள் கேட்டதனைத்தும் அந்த கண்ணன் தருவான். அவன் புகழ் பாடி மகிழ்வோம் என்று விடியற்காலையில் வீடு வீடாகச் சென்று பெண்களைத் திரட்டினாள்
''என் உற்ற சிநேகிதிகளா, நீங்களாவது என்னோடு தினமும் வந்து மற்றவர்களை எழுப்புவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்றும் (மார்கழி 9 தேதி) வழக்கமான வேலை - அது தான்,கதவை தட்டி எழுப்புவது- நடக்கட்டும்.
‘’அடியே! செவிடு, பதிலே சொல்லாமல் தூங்குகிற ஊமை, பைத்தியம், சுகமாக கொசு கடிக்காமல் அகில் புகை போட்டுகொண்டு வாசனையாக , மெத்து மெத்து என்று கட்டில் மேலே கனவு கண்டு கொண்டே இருக்கின்றவளே!, எழுந்து வாடி வெளியே, காத்துக்கொண்டிருக்கோம் உனக்காக. நாங்கள் மட்டுமில்லை அந்த கிருஷ்ணனான நாராயணனும் நம்ப நோன்பு பாட்டு எல்லாம் கேட்க ஆசையாக காத்துக்கொண்டு இருக்கிறானே , கேட்டு அருள்வதற்கும் தான்!
அந்த தூங்கி வழியும் பெண்ணின் தாய் கண்ணில் படுகிறாள். அவள் தயவை நாடுகிறாள் ஆண்டாள்.
''மாமி, மாமி, கொஞ்சம் அவளை எழுப்புகிறீர்களா? பாருங்களேன் எத்தனை நாழி தூங்குகிறாள் உங்கள் பெண்''
வில்லிப்புத்தூரில் இந்த காட்சியைப் படம் பிடித்து ஏட்டுச்சுவடியில் எழுத்தாக்கினாள் கோதை.
விஷ்ணுசித்தர் நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் இந்த சுடர்க்கொடியின் கைவண்ணத்தில் மகிழ்ந்து போனார்.
''கொழந்தே, இன்னிக்கு பாசுரத்தை நீ இப்போ பாடினே பார், அதை என்னாலே வர்ணிக்க முடியாதும்மா, நானும் தான் நிறைய எழுதறேன், உன் கைவண்ணமே, தனி, அலாதி அம்மா.''
அப்படி என்ன கோதை எழுதினால் அன்று -- ஆண்டாள் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை துயிலெழுப்பும் வழக்கமான நிகழ்ச்சி தான் அந்தச் சிறு பாசுரம் .
''தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.''
பூக்களைப் பறித்துக்கொண்டே விஷ்ணு சித்தர் சிந்தித்தார்.
இந்த தூங்கும் பெண், ஏன் தூங்குகிறாள்? அவளுக்கு ஒரு கவலையும் இல்லை. அனைத்தையும் அந்த கிருஷ்ணனிடமே சரணாகதி என்று விட்டு விட்ட சந்தோஷத்தில் நிம்மதியாக தூங்குகிறாள் என்ற உபாயத்தை ஆண்டாள் மறைமுகமாக அறிவிக்கிறாள்.
கூரத்தாழ்வான் ஒரு இடத்தில் ''ரங்கா இந்த ராமானுஜருடன் எனக்கு ரத்த சம்பந்த உறவு என்று ஒன்று இல்லையே. அந்த பாக்கியம் முதலியாண்டானுக்கும் எம்பாருக்கும் அல்லவா கிட்டியது'' என்று உணர்த்துவதுபோல் ஆண்டாள் ''மாமி, உங்கள் பெண் '' என்று அந்த பெண்ணின் உறவைப்பற்றி குறிப்பிடுவது அந்தப்பெண்ணால் அந்தக்குடும்பமே கண்ணன் அருளைப் பெறும் பாக்யத்தை பெற்றது என்று குறிப்பிடவே தான்.
விஷ்ணு சித்தரின் எண்ணத்தை அன்றலர்ந்த ஒரு பெரிய அழகிய மலர் கலைத்தது.