வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்

முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.

கடல் வணிகத்திலும் சிற்ப கலையிலும் சிறந்த பெயர் பெற்ற நரசிம்மவர்ம பல்லவரால் தோற்றுவிக்கப்பட்ட நகரம் மஹாபலிபுரம். கலைக்கோவிலாக விளங்கும்

இந்நகரில் எங்கு பார்த்தாலும் மலர்ந்த தோட்டங்கள் மல்லிகை பூக்கள் காடுபோல் வளர்ந்து இருக்கும். கடலும் கடல் சார்ந்த இடத்தில் நீலோற்பவ மலர்கள் நிறைந்த தடாகங்களும் நிறைய உண்டு.
 
இந்த கடல் சார்ந்த இடத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வரும் நவமிதிதி புதன் கிழமை அவிட்டநக்ஷத்திர நாளில் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார்.
 
மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததார். இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது.
 
ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் திருஅவதாரம் பண்ணின இந்த குழந்தையே பூதத்தாழ்வார் ஆகும். மக்கள் அந்த குழந்தையை பூதத்தான் என்று அழைத்தனர்.
 
 அக்குழந்தையை பூமணத்தோடு வீசும் தென்றல் தாலாட்ட நீரிலே நீந்தி வரும் அன்னப் பறவைகள் சூழ்ந்து நின்று காக்க ஸ்ரீமந்நாராயணனும் பிராட்டியாரும் கருடாழ்வார் மீது ஆரோகணித்து பேரருளை மழைப் போல் வருவித்தனர்.
 
முகத்தில் காணப்பட்ட தேஜஸ் மெய்யன்பர்களை தடுமாறச் செய்தது. பூதன் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள். தன்னுயிர் போல் மண்ணுயிரைப் பேணிக் காத்து வந்ததால் அக்குழந்தைக்கு பூதத்தாழ்வார் என்ற பெயர் நிலைத்தது.
 
அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும் பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் அவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள்.
 
செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார்.
 
எப்போதும் பரமன் புகழ் பாடும் பூதத்தாழ்வாரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர்.
 
திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.
 
நமோ நாராயணா' என்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து உலகத்தாரையும் உணரச்செய்தார். உட்காரும் போதும், நிற்கும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிந்தார் பூதத்தாழ்வார்.