ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளும்,
பெரியபிராட்டியாரும் கோவில் கர்ப்பகிரஹத்தில் தொட்டில் கட்டித் தாலாட்டி வளர்த்த குழந்தை ஸ்ரீபராசர பட்டர் என்னும் ஸ்வாமி. ஸ்ரீராமாநுஜரால் தமக்குப் பிறகு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைமைப் பீடத்தை அலங்கரிக்கப் போகிறவர் என்று அடையாளம் காட்டப்பட்ட மகான்.அவர் திருப்பாவையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்

1.அன்று ஆண்டாளுக்குப் பெருமாள் எவ்வாறு அருள்புரிந்தாரோ, அதைப் போலவே ஆண்டாள் அருளிய இந்த முப்பது பாசுரங்களையும் தினமும் சொல்லும்/கேட்கும் அனைத்து பக்தர்களுக்கும் அவர் அருள்புரிவார்.

2 .ஆண்டாள் நாச்சியார் சாட்சாத் பூமாதேவியின் அவதாரம்;எனவே ஆண்டாளுக்கு, அருள் புரிந்ததைப் போலவே, மிகத்தாழ்ந்தவர்களான எங்களுக்கும் திருமால் அருள்புரிவார் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு விடையளித்த பராசர பட்டர், “கிராமங்களில் பசுக்கன்றுகளை விலைக்கு விற்றுவிட்டு, கன்றின் தோலுக்குள் வைக்கோலை வைத்து அடைத்து, தோல்போர்த்திய பொம்மைக் கன்றைப் பசுவின் முன்னே நிறுத்துவார்கள். அதைத் தன்னுடைய கன்று என நினைத்துப் பசுவும் பால் சுரக்குமல்லவா? அதுபோலத் தான் நாமும் திருப்பாவை என்னும் தோலைப் போர்த்திக் கொண்டு கன்றுகளாகத் திருமால் முன்னே சென்று நின்றோமானால், திருப்பாவை எனும் தோலைப் பார்த்தவுடன் திருமாலுக்கு ஆண்டாளின் ஞாபகம் வந்துவிடும். அதனால் அவளுக்கு எவ்வாறு அருள்புரிந்தாரோ அதே அருளை நம்மீதும் பொழிவார்! உண்மையான கன்றாயினும், தோல்போர்த்திய கன்றாயினும், ஒரே அளவில் தானே பசு பால் சுரக்கிறது? அதுபோலத் தான் இதுவும்!” என்றார்.

3. முப்பது பாசுரங்களையும் தினமும் சொல்ல முடியா விட்டாலும் ‘மார்கழித்திங்கள்’, ‘வையத்து வாழ்வீர்காள்’, ‘ஓங்கி உலகளந்த’ ஆகிய முதல் மூன்று பாசுரங்களையும், ‘கூடாரை வெல்லும்’, ‘கறவைகள் பின்சென்று’, ‘சிற்றஞ் சிறுகாலே’, ‘வங்கக் கடல்
கடைந்த’ ஆகிய இறுதி நான்கு பாசுரங்களையும் ஆக மொத்தம் ஏழு பாசுரங்களைச் சொன்னால் கூட முழுமை
யாகத் திருமாலின் அருள்கிட்டும்! 

4.அதுவும் முடியாதவர்கள், சாற்றுமறைப் பாசுரங்களான ‘சிற்றஞ் சிறுகாலே’, ‘வங்கக் கடல்கடைந்த’ என்னும் இரண்டு நிறைவுப் பாசுரங்களைச் சொன்னால் கூடப் . பெருமாளின் அருள் பூரணமாகக் கிட்டும்!

5.அதுவும் முடியாவிட்டால் “சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தை மட்டுமாவது சொல்லுங்கள் !

6.அதுவும் முடியாவிட்டால், “ஆண்டாள் இத்தகைய பெருமை வாய்ந்த திருப்பாவை பாடினார் என்று நினைத்துக் கொள்ளுங்கள்;பராசர பட்டர் தினமும் திருப்பாவை சொல்வார் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

7. தன்னுடைய பக்தர்கள் தன்னிடம் காட்டும் அன்பும் பக்தியும் சிறிதாகவோ பெரிதாகவோ எப்படி இருந்தாலும், அதைக் கணிசியாமல், பக்தர்கள் அனைவரையுமே திருமால் சமமாகத் தான் கருதுகிறார். “ஸமோஹம் ஸர்வபூதேஷு” என்று கீதையில் கண்ணபிரானே  தெரிவித்துள்ளார். 
எனவே ஒரு பாசுரம் சொன்னவர்கள், முப்பதும் சொன்னவர்கள் என்று எண்ணிக்கையால் திருமால் அவர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அத்தகைய தாராள குணம் திருமாலுக்கு இருக்கிறது என்பதற்காக, அதை அவனுடைய பலவீனமாக நினைத்து, முப்பது பாசுரம் சொல்ல முடிந்தவர்களும், சோம்பேறித் தனத்தால் ஒரு பாசுரம் மட்டும் சொல்கிறேன் என்று கூறுவது மிகத்தவறு. 
எனவே ஒரு பாசுரம் சொன்னாலும் முழுமையாக அருள்புரியும் அளவுக்குக் கருணைக் கடலாக அவர் இருக்கிறார் என்று அவரது கருணையை நினைத்துக் கொண்டே முப்பது பாசுரங்களும் தினமும் சொல்ல முயலுங்கள்!

8.இவ்வாறு பக்தர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பு, ஆர்வம், ஈடுபாடு இவற்றைக் கொண்டு அவர்களுக்குள் வேறுபாடு பாராமல் அனைத்து பக்தர்களிடமும் சமமாக அன்பு காட்டுவதால் திருமால் ‘ஸம:’ என்றழைக்கப்படுகிறார் 

பட்டர் அருளிச் செய்த திருப்பாவைத் தனியன்:

"நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம்உத்போத்ய க்ருஷ்நம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ்சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம்யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூயஏவாஸ்து பூய: ||

நீளாதேவி(நப்பின்னைப் பிராட்டி)யின் திருமார்பில் தலைவைத்து மயங்கி உறங்கிக் கிடக்கும்,தான் சூடிக்களைந்த மாலையில் விலங்கிடப் பட்டவனாய் இருக்கிற கண்ணன் எம்பெருமானை உணர்த்தி(தட்டி எழுப்பி),பல உபநிஷத்
களாலும் தேறின பாரதந்தர்யத்தை அறிவித்து,கண்ணனை பலாத்கரித்து, ஆராதனை செய்யும் கோதை என்னும் ஆண்டாள் திருவடிகளை காலா காலத்துக்கும் (எப்பொழுதும்) வணங்குகிறேன்" 

ஸ்ரீ உய்யக்கொண்டார் போற்றிப் பாடிய
தனியன்கள்.

1."அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் –இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்,நற்பாமாலை; 
பூமாலை,
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு !!"

"அன்னங்கள் விளையாடித் திரியும் வளங்கள் நிறைந்த வயல்களையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திவ்ய தேசத்
தில் பிறந்தவளும், திருவரங்கத்திலே திருமகள் கேள்வனாக உறையும் திருவரங்கனுக்கு மிகச்சிறந்த இனிய இசையுடன் கூடிய  திருப்பாவையாகிற முப்பது பாடல்களை பாமாலைகளாக பாடிக் கொடுத்தவளும், தான் சூடிக் களைந்த பூமாலைகளை அந்த அரங்கன் சூடி அநுபவிக்கக் கொடுத்தவளுமான ஆண்டாளை வாய் படைத்த பயனாக நெஞ்சே சொல்லு" என்று நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் உய்யக்கொண்டார்.

2"சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு"
   
தான் சூடிக்களைந்த மாலையை எம்பெருமான் உகந்து அணியும், பேறு பெற்ற,ஆண்டாள் தொன்மையான பாவை நோன்பு நோற்று, அவரை அற்புதமாகப் பாடினாள்.பல வளையல் களை அணிந்து கொண்டிருக்கும், ஆண்டாள், தன்னை திருவேங்கடவற்கு விதி என்று சொன்ன வாக்கை நாமும் வழுவாமல் பேணி, வாழ அருள வேண்டும்  என்று ஆண்டாளிடம் வேண்டுகிறார்.

 முதல் பாசுரத்தில் அரங்கற்கு என்றதும், இப்பாசுரத்தில்  வேங்கடவற்கு என்றதும்
கோயில் திருமலைகளில் எழுந்தருளி இருக்கும், எம்பெருமானின் அர்ச்சாவ தாரங்களை ஆண்டாள் பாடிய வண்ணம்.
("மந்திபாய் வட வேங்கட மாமலை, வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்தரவின் அணையான்" என்று திருப்பாணாழ்வார் பாடியதும் கொள்க)