பகவத் ராமானுஜருக்குத்தான் ‘திருப்பாவை ஜீயர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.
ஒருசமயம் ராமானுஜர், தன் சீடரான கிடாம்பி அச்சனுடன், சமையலறையில் அமர்ந்து, சமையலுக்குத் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பாக திருப்பாவை பாடியபடி சில இல்லங்களுக்குச் சென்று அவற்றை சேகரிப்பது வழக்கம்.
திருப்பாவைக்கு ராமானுஜ சம்பந்தம் காட்டும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. பிட்சை
பெறச் செல்லும்போது (பாதுகைகள் அணியத் தடையில்லாதபோதும்) ராமானுஜர் பாதுகைகள் அணியாமல்தான்
செல்வார். அச்சமயங்களில் அவர் திருப்பாவையை உரக்க ஓதியபடி செல்லும் பழக்கம் இருந்ததால்,
பாதுகைகள் அணிந்து செல்வதை ஆண்டாளுக்கும், திருப்பாவைக்கும் செய்யும் அவமரியாதையாகவே
கருதினார்.
ஒரு சமயம், திருப்பாவையைப் பாடியபடி (திருக்கோட்டியூரில்) பிட்சைக்குச் சென்ற
ராமானுஜர், ‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்’ என்ற 18வது பாசுரத்தை பாடிய வண்ணம்
தனது குருவான திருக்கோட்டியூர் நம்பி அவர்களின் வீட்டு வாசற்கதவைத் தட்டினார். பிட்சையோடு
வந்த பெரிய நம்பியின் மகளான அத்துழாய் கைவளை குலுங்கக் கதவைத் திறக்கவும், ராமானுஜர்
‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்’ என்று பாடி முடிக்கவும் சரியாக
இருந்தது. அவளைக் கண்ட மாத்திரத்தில், பாசுர வரிகளில் லயித்திருந்த ராமானுஜர், அத்துழாயை நப்பின்னை பிராட்டியாக எண்ணிக்
கொண்டு, நெடுஞ்சாண்கிடையாக அவள் கால்களில் விழுந்து சேவித்து, மயங்கிவிட்டார்.
அத்துழாய் பயந்து போய், தன் தந்தையான பெரிய நம்பியைக் கூட்டி வர, அவர் மிகச்
சரியாக ராமானுஜர் ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தைப் பாடியபோதுதான் இப்படி ஒரு நிகழ்வு
ஏற்பட்டு அவர் மயங்கியிருக்கவேண்டும் என்பதைக் கணித்து விட்டார்.
அப்போது பெரிய நம்பிகள், “இந்தப் பாசுரத்தின் நாயகியான நப்பின்னையை, உன் ரூபத்தில் தரிசித்ததால், ராமானுஜருக்கு இதுபோல் ஆகியிருக்க வேண்டும்” என்று கூறியபடி, வாசலுக்குச் சென்று ராமானுஜரை, ‘திருப்பாவை ஜீயரே’ என்று விளித்து வரவேற்றார்.
ஆக, இப்பாசுரம் உடையவருக்கு
மிகவும் உகந்தது. அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக
இருந்து வருகிறது.
(கண்ணனின் அருள்பெற நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்பும்படி தோழிகள் கூறுகின்றனர்)
பெரிய நம்பிகளே, ராமானுஜருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்ற பெயரை வழங்கியுள்ளார்.