சிலர் கோவிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக் கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
தீபாராதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள மூலவரைக்கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்தகண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள்.
இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.
எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய்.
நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.
உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டே இறைவனை காண செல்லுங்கள்.
இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப் படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும்.
எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை விட்டு விட்டு, கண்திறந்து பார்த்து தரிசியுங்கள். அழகில் மயங்குங்கள்.
அத்துடன் இறைவா!
என்னை நீ தான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு எது தேவையோ அதைக்கொடு. எது தேவையில்லையோ அதை நீக்கிவிடு என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
மேலும் இறைவா!
நீ என் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்திருந்து அருள் ஆட்சி செய்வாய் என வேண்டி இறைவனை இல்லத்தில் எழுந்தருள செய்யுங்கள்.
பின்னர் தினசரி பூஜையின் போது, கோயிலில் தரிசித்த இறைவனின் திருவுருவத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்வது தான் உண்மையான வழிபாடு ஆகும்.