முத்துக்கள் முப்பது - பாதகங்கள் நீக்கும் பரமனடி காட்டும் கோதை தமிழ்

மார்கழி பிறந்து விட்டது.பனி விடியலில், வீதிகளில், பெண்கள் சாணம் தெளித்து, பறங்கிப் பூக்களை வைத்து, அழகுபடுத்துகிறார்கள்.வாசல் மாடத்தில் விளக்கு ஏற்றியிருக்கிறார்கள்.அதோ, கோயிலிலே இனிமையான பாடல் பனிக்காற்றில் தவழ்ந்து வருகிறது.ஆண்டாள் அருளிய திருப் பாவை அல்லவா இந்தப் பாசுரங்கள்.திருப்பாவையின் சிறப்பினை இந்த மார்கழியில் முப்பது முத்துக்களாகத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

1. மாதங்களில் நான் மார்கழி

‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்”( மாஸானாம் மார்க்க சீர்ஷோகம் - கீதை ஸ்லோகம் ) என்றான் கண்ணன் கீதையில். மற்ற மாதங்களுக்கு இது தலைமைப் பொறுப்பு ஏற்கும் மாதம். கண்ணனை அடைய, கண்ணனுக்குப் பிடித்த மார்கசீர்ஷ (மார்கழி) மாதத்தில், பாவை நோன்பை ஆண்டாள் கடைப்பிடித்தாள்.

2. தேவர்களின் விடியல்

மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மனிதர்களின் ஒவ்வொரு இரண்டு மாதமும் தேவர்களுக்கு இரண்டு மணி நேரம். அந்த வகையில் தேவர்களின் சூரிய உதயமாகிய ஆறு மணி என்பது தை மாதத்தைக் குறிக்கிறது. பர தெய்வமான மன் நாராயணனை, தேவர்கள் பூஜிக்கும், பிரம்ம முகூர்த்தமான, காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை, தை மாதத்தின் முந்திய மாதமாகிய, மார்கழி மாதம் குறிக்கிறது .இந்த பிரம்ம முகூர்த்த வழிபாடு தான் “மார்கழி வழிபாடு” என்று கருதப்படுகிறது.

3. மாதம் 30 நாள்களும் முக்கியமே

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் மிகச்சீரிய பலனைத் தரும். பிரம்ம முகூர்த்தத்தில் எந்தவித நாள், வார, திதி தோஷங்கள் இல்லை. பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் வழிபாடு நூறு மடங்கு புண்ணிய பலனை தரும் என்பதால், தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமாகிய விடிகாலை நேரத்தை, மார்கழி மாதமாக வைத்தார்கள். மார்கழி மாதத்தை “பீடை மாதம்’ என்று அறியாதவர்கள் சொல்லுவார்கள். ஆனால் மார்கழி மாதம் பீடுடைய மாதம். ஆன்மீகத்திற்கே உரிய மாதம்.பெரும்பாலும் மாதத்தின் ஓரிரு நாளே ஆன்மிக முக்கியத்துவம் பெறும். ஆனால், மார்கழி மாதத்தின் முப்பது நாள்களும் ஆன்மிக முக்கியத்துவம் பெறும்.

4. திருப்பாவை மாதம்

மார்கழி மாதத்தை “திருப்பாவை மாதம்” என்று சொல்வார்கள். திருப்பாவை ஆண்டாள் எழுதிய தமிழ் பிரபந்தம். திருப்பாவை பிரபந்தத்தில் 30 பாசுரங்கள் இருக்கின்றன. வைணவர்களிடம் ஒரு வழக்கம் உண்டு அவர்கள் மார்கழி மாதத்தின் தேதிகளைக் குறிப்பிடுகின்ற பொழுது, மார்கழி 1,2 என்று குறிப்பிடுவதில்லை .திருப்பாவையின் பாசுர தொடக்க வார்த்தையை வைத்துத் தான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக மார்கழி 1 என்று குறிப்பிடாமல், ‘‘மார்கழித் திங்கள்” என்று குறிப்பிடுவார்கள். மார்கழி இரண்டாம் தேதியை, திருப்பாவை இரண்டாம் பாசுர தொடக்கமான ‘‘வையத்து வாழ்வீர்காள்” என்று குறிப்பிடுவார்கள். மார்கழி மூன்றாம் தேதியை ‘‘ஓங்கி உலகளந்த”என்று குறிப்பிடுவார்கள். மார்கழி 30 ஆம் தேதியை “வங்கக் கடல்” என்று குறிப்பிடுவார்கள்.

5. மாதத்தின் பெயரோடு தொடங்குகிறது

தமிழில் எத்தனையோ பிரபந்தங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு மாதத்திற்கு உரிய பிரபந்தமாக, அந்த மாதத்தின் பெயரோடு தொடங்குகின்ற பிரபந்தம் திருப்பாவையைத் தவிர வேறு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டுமே மாதத்தின் பெயரோடு தான் தொடங்குகின்றது. திருப்பாவை மார்கழி என்ற மாதத்தின் பெயரோடும், நாச்சியார் திருமொழி தை என்ற மாதத்தின் பெயரோடும் தொடங்குகிறது. இன்னும் சிறப்பு இரண்டும் அடுத்தடுத்து வருகின்ற மாதங்களின் பெயர்கள்
அல்லவா?

“மார்கழி”த் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.(திருப்பாவை, முதல் பாசுரம்)

தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.(நாச்சியார் திருமொழி,முதல் பாசுரம் )

6. திருப்பாவை ஜீயர்

வைணவத்தை வளர்த்த ராமானுஜருக்கு எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. உடையவர், பாஷ்யக்காரர், எம்பெருமானார் என்று பல பெயர்கள் உண்டு. ஆனால், சதாசர்வகாலமும் திருப்பாவையை சொல்லிக் கொண்டும் தியானித்துக் கொண்டும் இருந்ததால் அவரை “திருப்பாவை ஜீயர்” என்றும் அழைப்பதுண்டு. ஆண்டாள்
நாறு நறும்பொழில் பாசுரத்தில் நூறு தடா (அண்டா) வெண்ணெய், நூறு தடா அக்கரவடிசில் அழகருக்கு சமர்ப்பிப்பதாக நேர்ந்து கொண்டு பாடினாள். அவள் வாக்கு உண்மையாக வேண்டும் என்று சுவாமி ராமானுஜர், நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்கரவடிசில் அழகருக்கு, ஆண்டாளின் சார்பில் சமர்ப்பித்தார். அதை சமர்ப்பித்து விட்டு வில்லிபுத்தூர் வந்தபோது ஆண்டாள் ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாளாம்.

இதை விளக்கும் வாழித்திருநாமம்
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.
(பெரும்புதூர் மாமுனி= ராமானுஜர்; பின்னானாள் =தங்கையானாள்)

7. என்னால் உரை எழுத முடியாது

ராமாநுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதியவர். பல வேதாந்த நூல்களை இயற்றியவர். ராமானுஜரிடம் திருப்பாவைக்கு ஒரு முறை உரை சொல்லும்படி கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் இது.“ஆண்டாள் என்ற பெண்ணின் மனதின் நிலையைச் சொல்லுகின்ற திருப்பாவை பிரபந்தத்திற்கு, ஒரு ஆடவனாக பிறந்த என்னால், முழுமையாக அவள் உணர்ச்சிகளை உணர்ந்து, உரை சொல்ல முடியாது” என்றாராம்.  

8. அனுஷ்டான பிரபந்தம்

பிரபந்தங்களில் திருப்பாவையை அனுஷ்டான பிரபந்தம் என்று சொல்வார்கள்.மார்கழி மாதம் முழுவதும் பாகவதர்கள், தங்களை ஆண்டாளின் வழி வந்தவர்களாக (கோபிகைகளாக) கருதிக்கொண்டு, காலை வேளைகளில் திருப்பாவை பாடி, வலம் வரும் காட்சிகளைக் காணலாம். இறைவன் ஒருவனே புருஷோத்தமன். மற்ற உயிர்கள் அனைவரும் பெண் தன்மை உடையவர்கள். பெண் ஆடவனை இணைவது போல ஜீவாத்மா (பெண்) பரமாத் வாவை (ஆண் ) இணையும் விழைவைக் காட்டுவது திருப்பாவை.

9. இசை பாடும் கண்ணன்

கண்ணன் இசையில் வல்லவன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பயன்படுத்தும் புல்லாங்குழல் மூன்று வகையானதாம்.

1. வேணு 2. முரளி 3. வம்சி.
வேணு ஆறு அங்குலம். அதில் ஆறு
துவாரங்கள் மட்டுமே இருக்கும்.
முரளி 18 அங்குலம். மிக இனிமையான ஓசையை எழுப்பும். வம்சி என்ற பெயர் கொண்ட புல்லாங்குழல் சுமார் பதினைந்து அங்குல நீளமும், ஒன்பது துவாரங்களும் இருக்கும். கிருஷ்ணரின் தோழர்களான இடை குல கோபால சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாம். கிருஷ்ணர் வாசிக்க சிறுவர்கள் மெய்மறந்து ரசிப்பார்களாம்.
இதை பெரியாழ்வாரும் பாடுகிறார்.

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்  
செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்ப
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.

மனிதர்களை மட்டும் அல்லது அவன் மேய்த்த மாடுகளையும் மயக்கியது கண்ணன் இசை.

10. இசையும் இன்னிசையும்

கண்ணனின் இசையைக் கேட்டு மாடுகளும் கன்றுகளும் கூட தன்னிலை மறந்து இருந்தன. கையில் புல்லாங்குழல் வைத்து, மாடு மேய்க்கும் போது , இசைக்கும் கண்ணனுடைய இசையை தேவாதி தேவர்கள் கேட்பார்கள். ஆனால், அந்த கண்ணனையே மயக்கிய இசை திருப்பாவை.திருப்பாவையை “இன்னிசை” என்று பராசர பட்டர் போற்றுகிறார்.

அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்
பன்னு திருப் பாவைப் பல் பதியம்! -
இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
இசையைத் தந்தவன் கண்ணன்.
இன்னிசையைத் தந்தவள் ஆண்டாள்.
ஆண்டாளின் திருப்பாவை, கண்ணன் பாடிய இசையை விடச் சிறந்தது.
காரணம் அந்தக் கண்ணனையே மயக்கிய இசை
ஆண்டாளின் திருப்பாவை.

11. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

ஆண்டாள் இரண்டு காரியங்களைச் செய்தாள். முதல் காரியமாக அவனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் மாலை கட்டி, அந்த எம்பெருமானுக்கு பொருத்தமாக இருக்குமா என்பதற்காக, ஒருமுறை தான் சூடிப் பார்த்து, அழகாக இருக்கும் என்று தெரிந்த பின்னால், எம்பெருமானுக்கு அந்த மாலையை அணிவித்தாள். பொதுவாக இறைவனுடைய சூடிக் களைந்த மாலையைத் தான் பக்தர்கள் பிரசாதமாக விரும்புவார்கள். ஆனால் ஆண்டாள் பக்தியினால் சூடிக்கொடுத்த மாலையை இறைவன் விரும்பி சூடிக்கொண்டான். இதனால் ஆண்டாளுக்கு “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று பெயர். இப்பொழுதும் திருமலை உற்சவத்தில் ஆண்டாள் மாலை வேங்கடவனுக்குப் போகிறது.

12. பாடிக் கொடுத்தாள்

இரண்டாவதாக தமிழிலே அழகான இரண்டு பிரபந்தங்களைப் பாடிக்கொடுத் தாள். ஒன்று திருப்பாவை. இரண்டு நாச்சியார் திருமொழி. ஒன்று பூமாலை. இன்னொன்று பாமாலை. ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவள் பாடிக் கொடுத்த பாமாலையான திருப்பாவை பல்லாயிரம் வருடங்களாக நம்மிடத்தில் அனுஷ்டானத்தில் இருக்கிறது. கவியரசு கண்ணதாசன் ஆண்டாளைப் பற்றி சொல்லுகின்ற பொழுது பாடுவார்.

சூடிக் கொடுத்தாள், பாவை படித்தாள்,
சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்,
கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள்,
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்.

13. வைணவ தினசரி வழிப்பாட்டில் திருப்பாவை

திருப்பாவை பிரபந்தத்தை பொறுத்த வரையிலே, ராமானுஜர் அற்புதமான ஏற்பாட்டைச் செய்தார். இறைவனுடைய தினசரி வழிபாட்டு முறைகளை வகுத்தவர் “நித்யம்” என்று ஒரு நூலை இயற்றினார். அதில் வழிபாட்டு முறைகள் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த வழிமுறைகளை சற்று விரிவுபடுத்தி பின்னால் “திருவாராதன க்ரமம்” என்ற நூல் வந்தது. இந்த வழிபாட்டு வழிமுறை நூலில், ஒவ்வொரு வழிபாடும் திருப்பாவை பாடல் களோடு நிறைவு பெறவேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார். குறிப்பாக காலை வழிபாட்டில் திருப்பாவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற நெறியை ஏற்படுத்தி வைத்தார்.

14. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திருப்பாவை

திருப்பாவையைப் பாடுவதற்கு கால நியமமோ, தேச நியமமோ எதுவுமில்லை. எல்லா விசேஷங்களுக்கும் திருப்பாவையை வைணவர்கள் பாடுவார்கள். திருப்பாவை தமிழ் பிரபந்தத்தை ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மற்ற மற்ற மாநிலங்களிலும் உள்ள பெருமாள் கோயில்களில் கட்டாயமாக பாடும் முறையை ஏற்படுத்தித் தந்தவர் ராமானுஜர் அது இன்றளவும் பின் பற்றப்படுகிறது. வேற்று மொழிக்காரர்கள் தங்கள் மொழியில் திருப்பாவையை எழுதி வைத்துக்கொண்டு மார்கழி மாதத்திலே பாடுவார்கள்.

15. திருமலையில் திருப்பாவை

பொதுவாக திருமலையில் சுப்ரபாத நிகழ்ச்சி என்பது அதிகாலையில் நடக்கும். ஆனால் மார்கழி மாதத்தில், அங்கு சுப்ரபாத நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு திருப்பாவை நிகழ்ச்சியை நடத்துவார்கள்.

16. கோதை உபநிடதம் “திருப்பாவை”

வேதங்களின் உச்சி பாகத்தை உபநிடதங்கள் என்று கூறுவார்கள். அந்த உபநிடதங்களின் சாரமே கண்ணன் அருளிய பகவத் கீதை. அதாவது உப நிடதங்கள் ஆகிய பசுக்களின் பால் தான் பகவத் கீதை என்பார்கள். பகவத் கீதையை ‘‘கீதா உபநிஷத்” என்றும் சொல்லுவார்கள். ஆண்டாளின் திருப்பாவையும் வேதத்தின் சாரமான விஷயங்களை உள்ளடக்கியது என்பதால் ‘‘வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்” என்று சொல்வார்கள். ஆண்டாளின் கோதா உபநிடதம் (கோதைத் தமிழ்) பகவானின் கீதா உபநிஷத் தை விடச் சிறந்தது என்பார்கள். திருப்பாவையை வேத வித்து என்று சொல்லும் பாடல்:-

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் -
கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

17. கீதையை விட சிறந்ததா திருப்பாவை?

கீதையை விட சிறந்ததா திருப்பாவை? ஆம். பகவத் கீதை 700 சுலோகங்கள். ஆனால் தமிழில் ஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாசுரங்கள். பகவத்கீதை வடமொழி. ஆண்டாளின் திருப்பாவை அழகிய தமிழ் மொழி. கண்ணன் சொன்ன மொழி பகவத்கீதை. கண்ணனுக்காக சொன்ன மொழி ஆண்டாளின் திருப்பாவை. பகவத்கீதையில் பற்பல மார்க்கங்களை உபதேசித்து நிறைவாக ‘‘மாம் ஏகம்”, என் ஒருவனையே சரணம் பற்று, உன்னை சகல பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் என்று சொல்கின்றான் கண்ணன்.

ஆனால் அந்த பிரபத்தி மார்க்கத்தை, சரணாகதியை, முதல் பாசுரத்திலேயே அழுத்தம் திருத்தமாகவும் தெளிவாகவும், ‘‘நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று இரண்டு “ஏ காரங்களால்” உறுதிப்படுத்துகின்றாள் ஆண்டாள்.எனவே எல்லா விதத்திலும் கீதையை விட கோதை தமிழ் உயர்வானது.

18. இறைவனின் ஐந்து நிலைகள்

ஆண்டாளின் திருப்பாவையில் 30 பாசுரங்களை ஐயைந்தும் மைந்தும் என ஐந்து ஐந்து பாசுரங்களாக ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகவான் ஐந்து நிலை
களில் இருக்கின்றான். ஒன்று பரமபதம் என்று சொல்லப்படுகின்ற விண்ணில் இருக்கும் நிலை. அடுத்து அவன் பாற்கடலில் பள்ளி கொண்ட நிலை. மூன்றாவதாக தர்ம நெறி அழிகின்ற பொழுது அவன் எடுக்கக்கூடிய அவதாரங்களாகிய விபவ நிலை. நான்காவதாக அவன் அங்கங்கே பூலோகத்தில் அன்புடன் உள்ளம் புகுந்து அருள்கின்ற அர்ச்சாவதார நிலை. ஐந்தாவதாக அவரவர் உள்ளத்தில் பரமாத்மாவாக உறைகின்ற அந்தர்யாமி நிலை. இந்த ஐந்து நிலைகளை ஆறு வழிகளிலே காட்டுகின்றார்கள். இது ஆறு ஐந்து பெருக்கினால்
30 பாடல்கள் வரும் அல்லவா. அந்த முப்பது பாடல்கள் தான் திருப்பாவை.

19. ‘‘ஆ” வை திருப்பிய திருப்பாவை

இறைவன் ஸ்ரீ மன் நாராயணன் தமிழின் மீது தீராத ஆர்வம் கொண்டவன். தமிழ் எங்கெல்லாம் ஓதப்படுகிறதோ, அங்கே சென்று அதைக் கேட்பவன். “பைந்தமிழ் பின்னே சென்ற பச்சை பசும் கொண்டல்” என்று குமரகுருபரர், இதை தமது மீனாட்சி யம்மை பிள்ளைத்தமிழில் பாடுகின்றார் ஆக,தமிழால் இறைவன் கவனத்தை திருப்ப முடியும்..ஆண்டாள் திருப் பாவை பாசுரங் களால்- “ஆ”வை -அதாவது ஆன்மாவை இறைவனாகிய கண்ணன் பக்கம் திரும்பியதால்,”ஆவை திருப்பிய பாசுரங்கள்” - திருப்பாவை என்று போற்றப்படுகின்றது. நாம் பாடினாலும் நம் ஆன்மா இறைவன் பக்கம் திரும்பும் என்பதால் மார்கழி மாதத்திலே தினம் தினம் திருப்பாவையைப்பாடி அவனை வழிபடுகிறோம்.

20. தனுர் மாத விரதம்

திருப்பாவையை நோன்பு நூல் என்றும் சொல்லலாம். இறைவனை அடைவதற்காக ஆண்டாள் தனுர் மாதமாகிய மார்கழி மாதம் முழுக்க, காலையில் எழுந்து நீராடி, இறைவனை பிரார்த்தித்தாள். எனவே இந்த நூல் தனுர் மாத விரத நூல் என்றும் சொல்லுவார்கள். இதனுடைய பலனாக அந்தக் கண்ணனே ஒரு நல்ல கணவனை பெண்களுக்குப் பெற்றுத் தருவார்.வைணவத்தில் இப்பொழுதும் திருமணத்தின் பொழுது மணமகளை ஆண்டாள் சொரூபமாகவும்,மணமகனை கண்ணன் சொரூபமாகவும் வைத்து மந்திரங்களை ஓதி திருமண சடங்குகளை நடத்துவார்கள். ஆண்டாள் அருளிய திருக்கல்யாண பாசுரங்களையும் ஓதி மணமக்களை ஆசீர்வதிப்பார்கள்.

21. வாழ்த்துப் பாசுரம்

பெரும்பாலும் ஒருவரை வாழ்த்த பயன்
படும் பாசுரம் ஆண்டாளின் பாசுரம்தான்.
அந்தப் பாசுரம்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும்
மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு
கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்
பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ
ரெம்பாவாய்!
முழு பாசுரம் சொல்லா விட்டாலும், பெரியவர்கள் அட்சதை ஆசீர்வாதம்
செய்யும்போது, ‘‘நீங்காத செலவும் நிறைந்து” என்று சொல்லி ஆசீர்வதிப்பார்கள். இந்த வார்த்தையிலேயே எல்லா வாழ்த்துச் சொற்களும் அடங்கி விடுகின்றன. வேத
வாழ்த்துக்கு நிகரானது இது.

22. எது நல்ல நாள்?
தனது திருப்பாவையில், எது நல்ல நாள் என்பது குறித்து, ஓர் அற்புதமான சிந்தனையை விதைக்கிறாள் ஆண்டாள். முதல் பாசுரத்தில், ‘‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்” என்று பாடுகின்றார். ஒருவனுக்கு எப்பொழுது இறைவனைப் பற்றிய பூரணமான அறிவு பிறக்கின்றதோ, அந்த நாள் அவனுக்கு நல்ல நாள். இதை உரையாசிரியர் பாகவதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விவரித்துக் காட்டுகிறார்.

கம்சன் அவையிலிருந்தவர் அக்ரூரர். கண்ணனைக் கொன்று விட திட்டம் தீட்டி, கண்ணனையும் பலராமனையும் தந்திரமாக அழைத்து வர அக்ரூரரை அனுப்புகின்றான் கம்சன். தன்னை இந்தத் தீய காரியத்திற்கு அனுப்புகின்றான் என்ற எண்ணம் அக்ரூரருக்கு இருந்தாலும், “கண்ணனைச் சந்திக்கப் போகின்றோம்” என்கின்ற
உணர்வோடு அவர் வருகின்றார். அடுத்த நாள் காலையில் கண்ணனை சந்திக்க வேண்டும். அதற்கு முன் நீராடிவிட்டு சூரிய நமஸ்காரம் செய்கின்ற பொழுது,அவர் அந்த நாளை நல்ல நாள் என்று நினைத்தாராம். ‘‘இன்று கண்ணனை சேவிக்கக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த நாள் எனக்கு நல்ல நாள்” . எனவே, இறை உணர்வு தோன்றுகின்ற நாள், ‘‘மதி நிறைந்த நாள்” என்று சொல்லலாம்.

23. ஆலய வழிபாட்டு நிரல்

திருப்பாவை 30 பாசுரங்களையும் இப்படிச் சொல்லலாம். முதல் ஐந்து பாசுரங்கள் இறைவனுடைய ஐந்து நிலைகளைப் பேசுகின்றன. அடுத்த பத்து பாசுரங்களால், 10 ஆழ்வார்களை எழுப்புகின்றாள். 16வது பாசுரத்திலிருந்து பகவானோடு இருக்கக்கூடிய அடியார்களை துணை கொள் கின்றாள். அடுத்த பாசுரத்தில் கண்ணனின் தந்தையாகிய நந்தகோபாலரை எழுப்பி, தாயாகிய யசோதையை எழுப்பி, பலராமரை எழுப்பி, தங்களை இறைவனோடு சேர்த்து வைக்கும் தாயாராகிய நப்பின்னை பிராட்டியையும் எழுப்பி, அவன் நடந்து வருகின்ற அழகை சேவித்து,அவனுக்கு போற்றி மந்திரங்களைப் பாடி, தங்களுடைய நிலையைச் சொல்லி, தங்களுக்கும், இறைவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைச் சொல்லி, தங்கள் கோரிக்கையை வைத்து, நிறைவு செய்வது போல்முடிக்கிறாள். ஒரு முழுமையான ஆலய வழிபாட்டு நிரலோடு அமைக்கப்பட்டது திருப்பாவை.

24. திருப்பாவை “முத்தமிழ் பிரபந்தம்”

திருப்பாவையை ‘‘முத்தமிழ் பிரபந்தம்” என்று சொல்லலாம். இதில் இயற்றமிழ் உண்டு. இசைத் தமிழும் நாடகத் தமிழும் உண்டு. திருப்பாவை முழுக்க ஒரு திரைப் படக் காட்சி போலவே விரியும். ஆண்டாள், தான் என்ன செய்யப்போகின்றாள் என்கின்ற உறுதிமொழியோடு, தன்னுடைய தோழிமார் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று, பகவத் குண அனுபங்களைச் சொல்லி உரையாடி, அவர்களிடம், எம்பெருமானுடைய பெருமைகளை விரிவாக எடுத்துரைத்து, அவர்களையும் அழைத்துக் கொண்டு, எம்பெருமானுடைய திருமாளிகைக்குச் சென்று, இறைவனைச் (கண்ணன்) தரிசித்து, தன்னுடைய கோரிக்கையை வைத்து நிறைவேற்றி கொள்கின்றாள் என்பதுதான் திருப்பாவையின் காட்சிகள்.
‘‘எல்லே இளங்கிளியே” என்ற 14 வது பாசுரம் முழுக்க சுவையான நாடகம் தான். அதில் வைணவத்தின் அடிப்படை தத்துவங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

25. சங்கத் தமிழ் மாலை

திருப்பாவையை “சங்கத் தமிழ்” என்று சொல்கிறார்கள். திருப்பாவை பாசுரத்திலேயே இந்த சொல்லாட்சி வருகின்றது. 30 வது பாசுரத்தில்,‘‘பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே” என்ற வரியால், இது சங்கத் தமிழ் மாலை முப்பது என்று சொல்லலாம். தமிழுக்கு, தண்டமிழ், வண்டமிழ், நற்றமிழ், செந்தமிழ் என எத்தனையோ அடைமொழிகள் இருந்தாலும் ‘‘சங்கத்தமிழ்” என்பது இங்கே பொருத்தமாக இருக்கிறது.

1. சங்க காலத்தில் உள்ள புலவர்கள், திருமாலை எப்படிப் பாடினரோ, அதே அமைப்பில், அதில் சொல்லப்பட்ட சாரமான கருத்துக்களை, பொதிந்து கொடுத்ததால் திருப்பாவை சங்கப் பாடலுக்கு இணையான தமிழ்.

2. சங்கம் என்பது ஒலிப்பது. வேத கோஷம் ஒலிப்பது போல, திருப்பாவை தினம் ஆலயங்களில் ஒலிக்கின்றது. அதனால் திருப்பாவையை வேதம் (வேத வித்து) என்று சொல்வார்கள். சங்கம் ஒலிப்பது போல ஒவ்வொரு ஆலயங்களிலும், வீடுகளிலும் ஒலிக்கக்கூடிய தமிழ்மாலை என்பதனால் சங்கத் தமிழ் மாலை.

3. மூன்றாவதாக திருப்பாவையை ஆண்டாளின் தனித்துவமான அனுபவமாக ஆண்டாள் வெளியிடாமல், ‘‘நீராடப் போதுமின் போதுமினோ நேரிழையீர்” என்று எல்லா அடியார்
களையும் இணைத்துக் கொள்கிறாள். அதற்காக தன் தமிழை பயன்படுத்துகிறாள். அடியார்களை ஒன்றாக இறை அனுபவத்தில் சங்கமிக்க வைத்த தமிழ் என்பதினால்,
“சங்கத் தமிழ் மாலை” என்று சொல்லலாம்.

4. இறைவனோடு ஜீவாத்மா கலந்து இன்புறுவதை வடமொழியில் “சம்ஸ் லேஷம்” என்று சொல்வார்கள். தமிழில் சங்கம் என்று சொல்லலாம். திருப்பாவையின் ஈரத் தமிழ், இறைவனோடு இறை அடியார்களை சங்கமிக்க வைப்பதால் சங்கத் தமிழ் என்று சொல்லலாம்.

1. தமிழால் சங்கம்,

2. அடியார்களோடு சங்கம்,

3. இறைவனோடு சங்கம்

 - என்று மூன்று நிலைகளில் இந்த பாசுரங்கள் செயல்படுவதால் இதற்கு சங்கத் தமிழ் மாலை என்ற அடைமொழி முற்றிலும் பொருந்தும்.

26. திருப்பாவையின் யாப்பு திருப்பாவையின் யாப்பு மிகச் சிறந்தது. எட்டு அடிகள் கொண்ட கொச்சகக் கலிப்பா. ஒவ்வொரு பாசுரத்தின் எட்டாவது அடியில் “ஏல், ஓர், எம்பாவாய்’ என்ற சொற்றொடர் 28 பாசுரங்களில் உள்ளது. 17 ஆம் பாசுரத்தில் “ஓர் எம்பாவாய்” மட்டும் உள்ளது. ‘‘ஏல்” என்ற சொல் “உறங்கேல்” என்ற முன் சொல்லின் விகுதியாக உள்ளது. முப்பதாம் பாசுரத்தில் “எம்பாவாய்” மட்டும் உள்ளது. ஏல், ஓர் சொற்கள் இல்லை.இந்தச் சொற்களை நீக்கி, ஒவ்வொரு பாசுரத்தின் எட்டாவது அடியைப் பார்த்தால், அங்கு உள்ள சொற்கள் 13 பாசுரங்களில் வினையெச்சமாகவும், 16 பாசுரங்களில் வினை முற்றாகவும் உள்ளன.

27. தமிழிலக்கியங்களில் பாவை நோன்பு

பாவை நோன்பு, தமிழ் மண்ணில் நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை பழந்தமிழ் இலக்கியங்களான கலித்தொகை, பரிபாடல் முதலிய நூல்
களில் காணலாம். அம்மா ஆடல் என்று இது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்பு பற்றி யாப்பருங்கலக்காரிகை விருத்தியில் குறிப்பு உள்ளது. சங்க இலக்கியங்களில் காணப்படும் உயரிய நெறிகளையும், கருத்துக்களையும், சொற்களையும் ஆண்டாள் பாசுரங்களில் காணலாம்.

28. ஆற்றுப்படை இலக்கியம்

ஆற்றுப்படை இலக்கியத்தின் பல கூறுகள், திருப்பாவையில் நன்றாகவே காண முடிகிறது. தாம் ஆற்றுப்படுத்துவது, வெளிப்படையாகவே ஆண்டாள் தன்னுடைய கடைசி பாசுரத்தில் சொல்லுகின்றார். “ஆற்றுப்படை இலக்கியம்” என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று. ஆறு - வழி; படை - படுத்தல். எனவே, ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்தல் அல்லது வழிகாட்டுதல் என்பது பொருள். பரிசு பெற்ற பாணர் முதலியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தைத் தம் இனத்தைச் சார்ந்தவர்க்குக் கூறித் தம்மைப்போல் அவர்களும் பயன் பெற,தாம் பரிசு பெற்ற வள்ளல் அல்லது அரசனிடம் வழிப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும். அங்கே“பொருள்” வேண்டி வழிப்படுத்துவது போல இங்கே ஆண்டாள் “அருள்” வேண்டி ஆற்றுப்படுத்துகிறாள். அதற்கு வெளிப்படையாகச் சான்று தரும் பாசுரம் இது.

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-

சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

‘‘திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி அங்கப் பறை கொண்ட ஆற்றை” என்ற சொற்களால், பாவை நோன்பு நோற்று இறைவன் திருவருளாகிய பறையை (அருள், செல்வம், தொண்டு)பெற்றது போல, நீங்களும் மார்கழி விரதம் இருந்து பெறலாம் என்று, ஆற்றுப்படுத்து வதால் திருப்பாவையை “ஆற்றுப்படை இலக்கியம்” என்று கூறலாம்.

29. சிங்கம் போல இறைவன்

திருப்பாவையின் ‘‘மாரி மழை” பாசுரத்தில் கண்ணனை சீரிய சிங்கம் போல வர வேண்டும் என்று அழைக்கிறாள். சிங்கத்துக்கு பிடறி மயிர் அழகாக இருக்கும். ஹிரண்ய கேச: என்று புகழப்படும் கேசவனும் பொன்மயமான முடியை அடர்த்தியாக உடையவனாக விளங்குகின்றான். அந்த முடியும் பரிமள வாசனையுடன் சுகந்தமாக இருக்கிறது. அடுத்து அதன் கம்பீரம். அரங்கன் நான்கு கதிகளைக் காண்பிக்கிறான்.சிம்ம கதி, கஜகதி, வ்யாக்ர கதி, சர்ப்ப கதி இப்படிப்பல நடையழகுகள். தூங்கிய சிங்கம் நிமிர்ந்து அப்படி இப்படி என தலையை ஆட்டும்போது அந்த பிடறிமயிரும் பொங்கிச் சிலிர்த்து கலைந்து அசந்து எழும்.

அலுப்புதீர சிங்கம் எழுந்து, உடலைச் சிலிர்க்கிற பொழுது அதன் அசைவில் அந்த குகையே ஆடும். சர்வேஸ்வரனின் அசைவில் அகில உலகங்களும் அசையும். எந்தத் திசையும் சற்று நடுங்கவே செய்யும். பரப்பிரம்மம் அவன். உடல்மிசை உயிரெனக்கரந்து எங்கும் பரந்துள்ளவன். சுடர்மிகு சுருதியாக இருப்பவன். சேதன அசேதனங்களாகவும் இருப்பவன். ஈஸ்வரனுக்கு உறுப்புக்களாக பிரகிருகியிலுள்ள அத்தனை பொருட்களும் இருக்கிறது. அவன் நிமிரும்போது அத்தனையும் நிமிர்கிறது.    

குகையிலிருந்து சிங்கம் பிடறி மயிர் சிலிர்த்து
எழுந்ததுபோலே நாம் நீ
எழுந்தருள வேண்டும்.  
“உன்னழகைக் கன்னியர்கள்
கண்டதினாலே,
உள்ளமெல்லாம் உன்வசமாய்  
ஆனதினாலே,”

 - என்றபடிக்கு, எங்களின் உள்ளத்தை, நீ சிம்மம்போல் எழுந்து புறப்படும் கம்பீரம் ஆட்கொள்ள வேண்டும். சர்வ உலகங்களுக்கும் “சுவாமி நீ” என்பதைப் போலே, கம்பீரமாக எழுந்தருள வேண்டும்.” என்று சிங்கத்தோடு கண்ணனை ஒப்பிட்டு, ஆண்டாள் பாடும் அழகு நம்மை வியக்க வைக்கும்.

30. பூவைப் பூவண்ணன்
“காயம்பூ மேனி வண்ணன்” என்று கண்ணனின் நிற அழகை வர்ணிப்பார்கள்.
ஆண்டாள் பூவைப் பூவண்ணன் என்று
வர்ணிக்கிறாள். நீல வண்ணம் என்பது
மனத் துயரை நீக்கி பாதுகாப்பை அளிக்கும் வண்ணம் என்று இன்றைய அறிவியலாளர்களும் கருதுகின்றனர்.

 கரு வண்ணம் கருணைக்கு இருப்பிடமான மேகத்தை
ஒத்திருக்கிறது. ஆழி மழைக் கண்ணா!  
என்று மழைக்கு இறைவனை அழைத்
தாலும், அவனுக்கும் உள்ளே விளங்குபவன்
அந்தர் யாமியான அச்சுதன் அல்லவோ!

முன்பு கம்பீரத்துக்குச் சிங்கத்தைச் சொன்னாள். அந்தக் கடுமைக்கு நேரான மென்மையை இங்கே சொல்கிறாள். எதிரிடையான இரண்டு பொருள்களுமாக அவன் இருக்கிறான். எப்பொருளுமாக இருப்பவன் இறைவனல்லவா? என்ற தத்துவமும் இங்கே உணரத்தகும். நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், இருக்கும் இடத்தில் மெல்லிய இதயமும் கருணைவிழிகளும் கலந்திருக்கின்ற புதுமை கண் ணனிடம் மட்டுமே காண முடியும் என்பது ஆண்டாள் நாச்சியாரின் நம்பிக்கை. உண்மையில், ஓர் உதாரணத்திற்கு சிங்கத்தையும் பூவையும் ஒப்பிட்டார்களே தவிர, ஒப்பு ஒன்று இல்லாத உயர்வான அவனைச் சொல்ல எந்த மொழியும் வார்த்தைகளும் இல்லை.

நிறைவுரை:இப்படித் தொட்ட தொட்ட இடமெல்லாம் சுவைக்கும் திருப்பாவையின் முப்பது பாசுரங்களையும், மார்கழியில் பாடி, மாலவனின் அருள்பதம் பெறுவோம். திருப்பாவையை தினம் பாடுவதன் மூலம், எங்கும் திருவருள் பெற்று இன்புறலாம் என்பது ஆண்டாள் கருத்து.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!