இறை நாமம் நமக்கு என்ன உதவி செய்கிறது ?

மூன்று விதம்

வடமொழி நூல்களின் படி

1. திருஷ்ட பலம்
2.அதிருஷ்ட பலம்
3.திருஷ்டாதிருஷ்ட பலம்

 என்று மூன்று வகையான பலத்தைக் கொடுக்கிறது. நேராக, கண் கூடாக எல்லோரும் பார்க்கும்படியான நேர் பலன். நேராக வந்து காரியத்தை நடத்திக் காடும் பெருமை, திருநாமத்துக்கு உண்டு. இதைத்தான் திருஷ்ட பலம் என்கிறது.
திருஷ்ட பலத்துக்கு உதாரணமாக பாகவதத்திலே ஒரு சம்பவம் வருகிறது.
ஜாமி என்றால் நல்ல ஸ்த்ரீ என்று அர்த்தம். அஜாமி என்றால் அதற்கு நேர் எதிரானவர்! அத்தகைய ஸ்த்ரீயின் சேர்க்கையுடையவனாக இருந்தான் அஜாமிளன். காட்டிலே தர்பை கொண்டு வர போனவன், அங்கு பார்த்த ஸ்த்ரீயுடன் தங்கி பத்து குழந்தைகளைப் பெற்றான். எண்பத்தெட்டு வயது நிறைந்த காலத்தில், அஜாமிளன் படுத்த படுக்கையானான். அந்த ஸ்த்ரீ அவனை கைவிட்டு விட்டாள். கவனிக்க யாருமில்லை. அந்திம காலத்திலே மூன்று யம பட்டர்கள் வந்து அவன் பக்கத்திலே நிற்கிறார்கள். (வழக்கமாக இருவர் தான் வருவார்கள், ஆனால் அவன் "மகா பாபி" என்பதால் யமன் மூன்றாவதாக ஒரு ஆளை அனுப்பினானாம்) நடுநடுங்கி, கதிகலங்கி போனானாம் அஜாமிளன். என்ன செய்வதென்று புரியாமல், சற்று தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த தனது பத்தாவது புதல்வனைக் கூப்பிட்டானாம்.

"நாராயணா"என்று அவன் தன் குழந்தையைத் தான் கூப்பிட்டான். கூப்பிட்டவுடனேயே, பீதாம்பரதாரியாக சங்கு சக்கரத்தோடு எம்பெருமான் போன்றே, நான்கு பேர் வைகுண்டத்திலிருந்து வந்து யம தூதர்களை விரட்டினார்கள். அந்தக் கட்டத்திலே அஜாமிளன் எண்ணினான். "அடடா! இப்படிக் கடைசி காலத்திலே என் குழந்தையின் பேரைச் சொன்னதற்கே பகவான் ஓடி வந்து காப்பாற்றினானே! ஆயுள் முழுவதும் அவன் பெயரைச் சொல்லியிருந்தால் எத்தனை கதிபாலன் அடைஞ்சிருப்பேன்"
அப்புறம் அஜாமிளன் கூட முக்தி அடைந்தான். அதனாலே "அவனைப்போல் நாமும் இருக்கலாமே" என்று எண்ணினால் அது நம் கையில் இல்லை. நம் சரித்திரம் அஜாமிள சரித்திரம் ஆகாது. அப்போதைக்கிப்போதே நாம் பகவான் நாமாவைச் சொல்லி வைக்கணும்.
ஒருத்தர் ரொம்ப உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாயிருந்தார். போகிற வழிக்கு அவருக்குப் புண்ணியம் கிடைக்கட்டுமே என்று அவருடைய கடைசிப் பிள்ளையைக் காட்டி "இவன் யாரு" என்று கேட்டார்கள் (அவர் கடைசிப் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர்)
"இவனா இவன் என் கடைசிப் பிள்ளை" என்று சொல்லிவிட்டு உயிரை விட்டுவிட்டார் அவர். அஜாமிளன் சரித்திரத்தைச் சொன்னது திருஷ்ட பலம் பற்றித் தெரிஞ்சுக்கறதுக்காக. எல்லோரும் அறியும் வண்ணம் நேராக உணர்த்தும் பலனை அவன் நாமத்தின் மூலம் பெறுகிறோம்.

அடுத்து, அதிருஷ்ட பலம். திரௌபதி சரணாகதி அடைந்த போது அவளுக்குப் புடவை சுரந்தது அதிருஷ்ட பலத்துக்கு உதாரணம். அதாவது மறைந்து நின்று உதவக்கூடியது பகவான் திருநாமம்.

திருஷ்டா திருஷ்டா பலனுக்கு உதாரணம் கஜேந்திர மோக்ஷம். ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைத்ததுமே பகவான் அதிவேகமாக வந்து ரக்ஷித்திருக்கிறான். "ரங்கநாதா! உன்னை நமஸ்கரிக்கவில்லை நான்.. அன்னைக்கு கஜேந்திரன் அழைத்ததும் ஓடி வந்தாயே, அந்த வேகத்துக்கு நமஸ்காரம் என்கிறார் பராசரபட்டர். அத்தனை வேகம்.

வேகமாக வந்ததுடன், முதலையிடமிருந்து கஜேந்திரனை விடுவித்தான். அந்த யானைக்கு மோக்ஷத்தையும் அளித்தான். உயிரைக் காப்பாற்றிய திருஷ்ட பலத்துடன் மோக்ஷத்தை அளித்த அதிருஷ்ட பலமும் சேர.. திருஷ்டா திருஷ்ட பலம் வாய்க்கப் பெற்றது.

அவனை மனசார நினைத்து அன்னம் எடுத்து ஹோமம் பண்ணுங்கள்; அப்படியில்லை என்றால் மனசார அவன் நாமத்தைச் சொல்லுங்கள். எம்பெருமான் அனுக்கிரகஹம் விஷேஷமாக கிடைக்கும். இப்படி மூன்று வகையான பலன்களும் கிடைக்கும்.

திருநாமத்தைச் சொன்னால் மோக்ஷம் கிடைச்சுடுமா? அது நேரே மோக்ஷம் வாங்கி தராது. சொல்லச் சொல்ல பக்தி ஏற்படப் பண்ணும். பக்தி உண்டாக உண்டாக, இந்த ஆத்மா அவனுடையதுன்னு நினைப்போம். அதை அவன் திருவடியிலே சமர்ப்பிப்போம். அதன் விளைவாக மோக்ஷம் கிடைக்கும் இதுவே அவன் திருநாமம் நமக்குப் பண்ணக் கூடிய மிக உயர்ந்த உதவி.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!