யார் வைஷ்ணவன் என்று ஒரு கேள்வி கேட்டால் அதற்கு கேள்வி ரூபத்திலேயே கிடைக்கும் ஒரு அருமையான பதில் -- எவன் விஷ்ணுவின் குணங்களை கொண்டவனோ அவன்?
என்ன அப்படிப் பட்ட குணம் விஷ்ணுவிற்கு? என்று கேட்டால் மீண்டும் கேள்வி ரூபத்திலே விடை ''முதலில் விஷ்ணு யார் தெரியுமா?'' என்று பதிலாக வரும்.
விஷ்ணு என்றால் காப்பவர், தாங்குபவர், எங்கும் இருப்பவர் என்ற அர்த்தம் . விஷ்ணு சர்வ வியாபியாக, உலகையே, பிரபஞ்சத்தையே தாங்குபவராக, எல்லோரையும், எல்லாவற்றையும் காக்கும் கடவுள் , திருமூர்த்திகளில் படைத்தல், காதல், அழித்தலில் மிக முக்யமான காத்தலை பொறுப்பாக கொண்டவர் என்று புரிகிறது. காப்பதற்கு என்ன தேவை, பொறுமை, தயை, கருணை, அன்பு, ............
இது போன்ற குணம் கொண்ட மனிதன், என்ன செய்வான்? விஷ்ணுவிடம் சரணாகதி அடைந்தவனாக, மற்றவர்களை மதிப்பான், உதவுவான், அன்பாகவும், கருணையோடும், மற்றோருக்கு நல்லதே செய்யும் இரக்க குணம் கொண்டவனாக இருப்பான். அப்படி இருப்பவன் விஷ்ணுவை -பின்பற்றுபவன், வைஷ்ணவன். இதில் ஜாதி கிடையாது. வித்யாசம் இல்லவே இல்லை. மதம், இனம், ஆண், பெண், வித்தியாசம் எல்லாம் கடந்த பேரன்பு.
இந்தியாவில் ஒரு நேரத்தில் நமது சனாதன தார்மீகம் சிறிது க்ஷீணமான நிலையில் இருந்தபோது தோன்றியவர்கள் முதல் மூன்று ஆழ்வார்கள். அடுத்து அடுத்து நாட்களில் மயிலையில், காஞ்சியில், மாமல்லையில் ''தானாக' தோன்றியவர்கள். பக்தி, ஞானம், தர்மம், ஆகியவை செழித்தோங்க செய்த ''ஆழ்ந்த'' விஷ்ணு பக்தி கொண்டவர்கள் ஆழ்வார்கள்.
பொய்கை ஆழ்வாரின் பாசுரங்களில் ஞானம் இழையோடுகிறது. பூதத்தாழ்வார் பாசுரங்களில் பக்தி பிரவாஹம் கரை புரண்டோடும். பேயாழ்வார் பாசுரங்களோ கேட்கவே வேண்டாம். ''தன்னை'' இழந்த உயர்ந்த நிலை சரணாகதி, தியாக பாவம். (BHAAVAM ).
எந்த தெய்வத்தையும் தாழ்ச்சி சொல்லாத உயர்ந்த உள்ளங்கள். பிற்கால சிலர் இதற்கு மாறாக நடந்து கொண்டது விதி என்று தான் சொல்லவேண்டும்.
முதல் ஆழ்வார்களின் பாசுரங்கள் அந்தாதி வகை. முதல் பாசுரத்தின் கடைசி வார்த்தை 'அந்தம்'' அடுத்த பாசுரத்தின் முதலாக அதாவது ''ஆதியாக'' தொடரும்.
எல்லா ஆழ்வார்களையும் ஒரே ஒருவரின் உடல் உருவமாக சொல்வதுண்டு. அந்த உருவம் தான் நம்மாழ்வார். பெரியாழ்வார் தலை. மற்ற ஆழ்வார்களும் விஷ்ணுவிடம், மோக்ஷம், ஞானம் இவற்றை வேண்டியபோது, பெரியாழ்வார் தனித்து நிற்கிறார். அவர் படைப்பில் வாத்சல்ய பாவம் (AFFECTION AND DEEP LOVE ) தொனிக்கிறது. நாராயணனுக்கே பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் நின் திருவடிகள் ஒளிவீசி காத்து அருள வேண்டும் என்று வாழ்த்தியவர்.இதனால் தான் அவர் மற்ற எல்லா ஆழ்வார்களை விட ''பெரிய'' ஆழ்வார்.
முகுந்தாச்சாரி என்கிற ஒரு பிராமணர் ஒரு காலத்தில் தனது மனைவி பத்மாவோடு எளிய வைணவ சம்ப்ரதாய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கிறது. தம்பதிகள் இருவருமே ''நாராயணா, உன் தயவால் எங்களுக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் '' என்று வேண்டினார்கள்.
''ஒரு'' குழந்தை என்ன ''பெரும் ' குழந்தையையே பெறுவீர்கள் என்று திருமால் அருளால் பிறந்தவர் பெரியாழ்வார் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட விஷ்ணு சித்தர். '' கருடா, நீயே போய் குழந்தையாக உருவெடு '' என்று திருமால் அனுப்பியதால் ''பெரியா'' ழ்வார் ''பெரிய'' திருவடி அம்சம்.
மதுரையில் அடிக்கடி பெரிய அளவில் மத மாநாடு கூடும். பல மதக் கோட்பாடுகள் கொண்டவர்கள் வந்து தங்கள் பெருமையை ஸ்லாக்கியமாக பேசுவார்கள். வைஷ்ணவர்கள், சைவர்கள், சாக்தர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், என்று பலர் கார சாரமாக வாதம் புரிவார்கள். எனவே மதுரையில் பாண்டியன் அரண்மனையில் இப்படி ஒரு மாநாடு கூடி எல்லோரும் காரசாரமாக விவாதித்தார்கள். பாண்டிய ராஜாவுக்கு இவர்கள் வாதத்தில் திருப்தியில்லை.
''விஷ்ணு சித்தா, எழுந்திரு. உடனே மதுரை போ. அங்கு மத மாநாடு ஒன்று பாண்டிய ராஜா முன்னிலையில், தலைமையில் நடக்கிறது. நீயும் சென்று அதில் பங்கு கொள்.''என்று கனவில் விஷ்ணுசித்தரை விஷ்ணுவே தூண்டினார்.
''பகவானே, நானா, மகாநாட்டில் வாதமா? வாதம் பண்ணும் திறமை இல்லாத சாதாரணன் ஆச்சே நான். என்னை போகச் சொல்கிறீர்களே!''
''அதெல்லாம் இல்லை, விஷ்ணு சித்தா, நீ போய்ப் பேசு, நீயே ஜெயிக்கப் போகிறாய். ஹரி பக்தியை எடுத்துச் சொல்ல உனக்கு யாரும் கற்றுத் தரவேண்டியதில்லையே . எனவே பாண்டியனுக்கும் சபையோருக்கும் அதைச் சொல்லேன் ''.
புது தெம்போடு விஷ்ணு சித்தர் மதுரை நடந்தார். வைணவ மத சார்பாக ஒருவர் வந்திருக்கிறார் என்று பாண்டியன் அறிந்து அவரை வரவேற்றான். உங்கள் வாதத்தை முன் வையுங்கள் என்றான்.
எத்தனையோ கேள்விகள் அவரை துளைத்தன. எங்கிருந்தோ அவருக்கு அமானுஷ்ய சக்தியும் ஞானமும் வந்து அனைத்துக்கும் அசாத்தியமாக விளக்கங்கள் கூறினார். நாராயணன் ஒருவனே உயர் தெய்வம். உயர் சத்யம், சர்வ லோக ரக்ஷணன். அவனை சரணடைந்தாற்கு எந்த குறையும் இல்லை. குறையொன்றும் இல்லாத கோவிந்தனே காக்கும் தெய்வம் பாதுகாக்கும். ''ஓம் நமோ நாராயணாய '' என்கிற சர்வ சக்தி வாய்ந்த அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்துக்கு எதுவும் இணையில்லை . இதுவே தாரக மந்திரம், சர்வ சக்தியோடு, சர்வ வியாபியான ஹரியின் பதங்களை பிடித்தோர்க்கு பரகதி நிச்சயம் என்றார்'' விஷ்ணு சித்தர்.
அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பொற்கிழி ஒன்று ஒரு உயர்ந்த கம்பத்தில் நடு நாயகமாக வெற்றி பெற்றவர்க்கு பரிசாக வைக்கப் பட்டிருந்தது. T 20 போட்டியில் அழகான ஒரு கார் கண்ணை உறுத்துமே அது போல். விஷ்ணு சித்தர் பேசி முடித்ததும் அந்த பொற்கிழி தாழ்ந்து வளைந்து அவர் காலடியில் ''தொப்'' பென்று வந்து விழுந்தது. பாண்டியன் அசந்து விட்டான். பரம திருப்தி அவனுக்கு.
பெரியாழ்வார் இயற்றிய திருப்பல்லாண்டு 12 பாசுரங்கள் கொண்டது. மற்றது பெரியாழ்வார் திருமொழி என்ற 461 தேனினுமினிய பாசுரங்கள். சமஸ்க்ரிதத்தில் எப்படி பிரணவ மந்த்ரமான ''ஓம்'' என்ற சொல்லுக்குப் பிறகே வேதம் உச்சரிக்கப் படுகிறதோ அதே போல் திராவிட வேதத்தில் பெரியாழ்வாரின் திருப் பல்லாண்டு இல்லாமல் மற்ற பாசுரங்கள் துவங்காது. பெரியாழ்வார் திருமொழியில் கண்ணன் லீலா விபூதிகள் கொள்ளையாக இருக்கிறது. பாகவதமே தான் அது என்று கூட சொல்லலாம். எண்பத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பெரியார் கண்டெடுத்த மற்றொரு ஆழ்வார் தான் அவரால் வளர்க்கப்பட்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடி திரு ஆண்டாள் நாச்சியார்.