இது வைணவர்களுக்கு ஒரு புனிதமான நாள். 

இந்த நாள் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் எல்லா பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறக்கப்டும். பெருமாள் அந்த வாசல் வழியாக எழுந்தருளிய பின் பக்தர்கள் அந்த வழியை கடந்து சென்றால் நமக்கு பரமபபதம் என்றும் வைகுண்டம் கிடைக்கும் என்று நம்பிக்கை. இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு கோவிலிலும் நேரத்தை கணித்து அறிவிப்பு செய்வார்கள். அப்போது கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.

பரமபதம் என்றால் என்ன?

வைணவ மத சான்றோர்கள் இப்பூலகில் உள்ள எல்லா திவ்விய தேசங்களையும் தரிசனம் செய்த பின்னர் அவர்கள் இறுதியாக செல்வது-செல்ல விரும்புவது வைகுண்டம். 108 திவ்ய தேசங்களில் 106 திருத்தலங்கள் தான் இந்த பூவுலகில் உள்ளன. 107-வது திருத்தலம் திருப்பாற்கடல். 108-வது திருத்தலம்தான் வைகுண்டம்.பூமியில் உள்ள 106 கோவில்களை தரிசனம் செய்தால் 107-வது தேசமான திருப்பாற்கடலுக்கு பெருமாளே அழைத்து செல்வாராம். அதன்பின் அவர்கள் பரமபதம் என்னும் வைகுண்டம் சென்று அழியாபிறவியான நித்தியசூரிகளா அங்கு விளங்குவர். அங்கு அவர்கள் எப்போதும் இறைவனின் புகழ்பாடி ஆனந்தமாக இருப்பர்.
பரமபதத்தில் பெருமாள் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். அவருக்கு பரமபதநாதன், வைகுண்டபதி என்ற திருப்பெயர்கள் உண்டு. அங்குள்ள தாயாருக்கு பெரியபிராட்டியார் என்று பெயர். அங்கு பெருமாள் எல்லா ரூபங்களுக்கும் ஆதியானதாக மூலமானதாக உற்பத்தி ஸ்தானமாக- என பரமாய் விளங்குவதால் அந்த இடம் பரமபதம் என்று அழைக்கப்படுகிறது.

பரமபதத்தில் விரஜாநதி, அயிரமத புஷ்கரணி ஆகிய தீர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்பூலக வாழ்க்கையை முடித்து விட்டு வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெற்றால் அவர்களை மண்ணும் விண்ணும் தொழும். மேகக்கூட்டங்கள் தூரியம் போல் முழக்கமிடும். கடல் அலைகள் கையெடுத்து வணங்கும். 

விண்ணுலகில் தேவர்கள் விரைந்து வந்து எமது இடத்திற்கு வாருங்கள் எங்கள் இடத்தில் தங்குங்கள் என அழைத்து மரியாதை செய்வார்கள்.
வைகுண்டம் செல்வோருக்கு இப்படி சிறப்புகள் இருக்கும் என்று நம்மாழ்வர் குறிப்பிடுகிறார்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகுண்டத்தை அடைய யார் தான் விரும்ப மாட்டார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்து பரமபத வாசல் நடந்தால் பாவங்கள் குறைந்து வைகுண்டம் செல்ல வழி கிடைக்கும்.