பொய்கையாழ்வார்:
பூதத்தாழ்வார்:
பூதத்தாழ்வார் திருமால் பக்தியில் பெற்ற அனுபவத்தை இரண்டாம் திருவந்தாதியாக அருளிச்செய்தார். அதன்கண் அமைந்துள்ள பாசுரங்களில் ஒன்பது, திருவேங்கடனின் பெருமைகளையும் திருமலையின் அழகையும் எடுத்துரைக்கின்றன.
பேயாழ்வார்:
பேயாழ்வார் பாடியது மூன்றாம் திருவந்தாதி. இதில் பத்தொன்பது பாசுரங்கள் திருவேங்கடவனை நினைத்து பாடப்பெற்றன. திருவேங்கடவனின் பரத்துவ நிலை, அவதார நிலை ஆகியவற்றைப் பற்றி இவை அமைந்துள்ளன. இதில் திருமலையின் இயற்கை எழிலும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
திருமழிசையாழ்வார் :
திருமழிவையாழ்வார் பாடியவற்றுள் பதினான்கு பாசுரங்கள் திருவேங்கடவனைப் பற்றி பேசுவன. இவை திருவேங்கடத்து உறையும் செல்வனைப் பற்றியும், அவன் நிலை நின்று இருக்கும் திருமலையின் எழிலைப்பற்றியும் இயம்புவன.
நம்மாழ்வார்:
நம்மாழ்வார் பாடிய திருவிருத்தத்தில் எட்டு பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் ஒரு பாசுரமும், திருவாய்மொழியில் முப்பத்தைந்து பாசுரங்களும் திருவேங்கடவனைப் பற்றி பேசினவையாகும். இவற்றில் திருவாய்மொழியிலுள்ள இரண்டு பதிகங்களில் நம்மாழ்வார்க்கு திருவேங்கடவனின் வாத்ஸல்ய (தாயன்பு) குணம் பாடப்பட்டுள்ளது. தனிப்பாசுரங்களாக அமைந்த பதின்மூன்று ஆழ்வாருக்கும் திருவேங்கடவனுக்கும் உள்ள அழியாத் தொடர்பையும் அவன் குணங்களையும் போற்றி அமைகின்றன.
திருவிருத்தத்தில் அமைந்த எட்டுப் பாசுரங்களும் அகப்பொருள் துறையில் அமைந்து நாயகி நாயக பாவனையைச் சொல்லுவதாகும். பெரிய திருவந்தாதியில் இடம்பெற்ற பாசுரம் ஆழ்வாரது உள்ளத்தில் வாழும் திருவேங்கடவன் நிலையை உரைப்பதாகும்.
குலசேகர ஆழ்வார்:
பெருமாள் திருமொழி நூற்றைந்து பாசரங்களைக் கொண்டு பத்துத் திருமொழிகளாக அமைந்துள்ளது. அவற்றுள் ஊனேறு செல்வத்து எனத்தொடங்கும் நான்காம் திருமொழியில் பதினொரு பாசுரங்களும் திருவேங்கடவனைப் பற்றியன. கலியுக வரதன் ஏழுமலையப்பன் வாசம் செய்யும் திருமலை சம்பந்தமே இந்த உடல் பிறவிப்பிணிக்கு மருந்து என உணர்த்துவன அவை.
பெரியாழ்வார்:
பெரியாழ்வார் திருமொழியில் ஏழு பாசுரங்கள் திருவேங்கடவனுக்கு உரியன. இவ்வேழு பாசுரங்களும் திருவேங்கடவனை இராமனாகவும் கண்ணனாகவும் கருதிப் பாடினவையாகும்.
திருப்பாணாழ்வார்:
திருப்பாணாழ்வார் ‘அமலனாதிபிரான்’ என்ற பிரபந்தத்தை அருளினார். அதில் இரண்டு பாசுரங்களில் திருவேங்கடவனைப்பற்றி கூறியுள்ளார். திருவேங்கடவனே தெற்கு வாசல் வழியாக வந்து அரவணையில் துயின்று அரங்கன் ஆயினன் என்று போற்றியுரைக்கிறார்.
திருமங்கையாழ்வார்:
பெரிய திருமொழியில் 50 பாசுரங்களும், திருக்குறுந்தாண்டகத்தில் ஒரு பாசுரமும், திருநெடுந்தாண்டகத்தில் மூன்று பாசுரங்களும், திருமடல்களில் ஒவ்வொரு அடியும் திருவேங்கடவனைப் பற்றியன.
ஆண்டாள்:
நாச்சியார் திருமொழியில் பதினாறு பாசுரங்கள் திருவேங்கடவனைப் பற்றியதாகும்.