அழகு சில நேரங்களில் ஆணவத்தையும் கர்வத்தையும் தரும். அழகை ரசிக்கலாம், அதே நேரத்தில் தான் அழகாக இருக்கிறோம் என்பதை நினைத்து கர்வம் கொள்ளக்கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவுமே சில காலம் பிரிந்து பின்னர் சேர்ந்திருக்கின்றனர். இதனால் பெருமாளுக்கு கள்வப்பெருமாள் என்ற திருநாமமே உண்டாகியுள்ளது.
கண்ணன் கள்வன்தான். வெண்ணெய் திருடி உண்டவர். கள்ளழகப் பெருமானாக வைகையில் எழுந்தருளுகிறார். அதே நேரத்தில் கள்வப் பெருமாளாக காஞ்சியில் திருக்கள்வனூரில் எழுந்தருளியுள்ளார். இந்த தலம் 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம். 108 வைணவத் திருத்தலங்களில் மிகச் சிறிய வடிவிலான இறைவனாக விளங்குவது இங்கு மட்டும்தான்.
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது. சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும். இத்தலத்தில் கிழக்கு நோக்கி நான்கு தோள்களுடன் இறைவன் ஆதிவராகப் பெருமாள், இறைவி அஞ்சிலை வல்லி நாச்சியார் ஆவார். இத்தலத் தீர்த்தம் நித்ய புஷ்கரணி. விமானம் வாமன விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது.
இங்கு பெருமாளும் மகாலட்சுமியும் எழுந்தருளியது பற்றி ஒரு புராண கதை உள்ளது.
பெருமாளோ, கோபப்படாமல் முக அழகில் என்ன இருக்கிறது.... அகத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு என்றார். புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது என்று கூறியும் லட்சுமி கேட்கவில்லை.
உடனே விஷ்ணு லட்சுமியின் கர்வத்தை அடக்க நினைத்தார். பெண்ணுக்கு அழகு இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் இருக்கக் கூடாது. எந்த அழகு மீது அளவு கடந்த பற்று வைத்துவிட்டாயோ அந்த அழகு இருக்கும் உருவமே இல்லாமல் அரூபமாக போவாயாக!” என சாபமிட்டார்.
கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து தன்னை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டாள். பூமியில் எங்கு ஒரு முறை செய்யும் தவத்திற்கு ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிடைக்குமோ, அங்கு சென்று தவம் செய்தால் உமது பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்றார் விஷ்ணு.
சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதிதேவி, தன் சாபம் நீங்க காஞ்சியில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி விமோசனம் பெற்றாள். அவளது பாவத்தை போக்கிய இத்தலத்திற்கு வந்த மகாலட்சுமி அரூபமாக தங்கி விஷ்ணுவை வணங்கி வந்தாள். கொஞ்சம், கொஞ்சமாக அரூப வடிவம் மாறி உருவம் பெற்றாள்.
இத்தலத்தில் உள்ள பஞ்சதீர்த்தக் கரையில் லட்சுமியும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்ததை இவர் ஒளிந்திருந்து கேட்டதால் பார்வதி இவரை, “கள்வன்’ என்று அழைத்ததால் இப்பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு உண்டு.
கள்வப்பெருமாள், காமாட்சி அம்மன் கோயிலில் கருவறைக்கு வெளியே காயத்ரி மண்டபத்தில் வலப்புறத்தில் உள்ள ஒரு சுவரில் தென்கிழக்கு திசையை நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறத்தில் காமாட்சி அம்மனின் கருவறைச்சுவரில் மகாலட்சுமி தாயார் இருக்கிறார். பொதுவாக மகாலட்சுமி நான்கு கைகளுடன் வரம் தரும் கோலத்தில் தான் இருப்பார். ஆனால், இவரோ இரண்டு கைகளுடன் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.