1) மகரிஷி வியாசரின் புத்திரர் சுகர் வாழ்ந்த ஸ்தலம் என்பதால் அவரின் திருநாமம் கொண்டே திருச்சுகனூர் என்று பெயர்பெற்றது இந்த பகுதி. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சானுர் ஆகியிருக்கிறது.
2) மகரிஷி வியாசரின் தந்தை பராசரர் வாழ்ந்து அடங்கியிருந்த இடமும் திருச்சுகனூர் அருகில் தான் அமைந்துள்ளது. இப்பகுதி இன்று யோகி மல்லாவரம் என்று அழைக்கப்படுகிறது, இதன் ஆதி பெயர் திரு பராசரேஸ்வரம்.
மகான்கள் அடக்கம் செய்யப்படுகிற இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவது தமிழர் வழக்கம். இதுவே யோகி மல்லாவரத்தில் உள்ள ஸ்ரீ பராசரேஸ்வர ஸ்வாமி திருக்கோவில்.
விஷ்ணு புராணத்தின் ஆசிரியரும் இவரே.
3) ஸப்தகிரியும் கூடுகின்ற இடத்தில் நின்ற திருக்கோலத்தில் வேங்கடவன்.
சேஷாத்ரி – பாற்கடலை விட்டு பரந்தாமன் கிளம்பியதும் ஆதிசேஷன் அவரை இங்கு மலையாக தாங்கினான்
நாராயணாத்ரி/ வேதாத்ரி – வேதங்களே மலை வடிவில் வந்து வேங்கடவனை துதிக்கிறது
கருடாத்ரி – கருடன் இருந்து சுமந்த மலை
விருஷபாத்ரி – அரக்கன் விருஷபாசுரனை வதம் செய்த மலை
அஞ்சனாத்ரி – வாயு புத்ரனான ஆஞ்சநேயனை அஞ்சனை தவம் இருந்து பெற்ற மலை
நீலாத்ரி – நீலாதேவியின் பெயரால் அழைக்கப்பட்ட மலை. இவள் தான் வேங்கடவனுக்கு முடிக்காணிக்கயை தொடங்கியவள்.
வேங்கடாத்ரி/ ஆனந்தாத்ரி – “வேம்” என்றால் பாவம் “அட” என்றால் நாசம். பாவங்களை நாசமாக்கும் மலை.
இந்த மலையில் தான் மற்ற அனைத்து மலைகளும் கூடி நாராயணன் ஆனந்தமாக காட்சி அளிக்கிறான்.
4) வேங்கடவன் வருவதற்கு முன் திருமலைக்கு வராகபுரி என்று பெயர். பூவராக மூர்த்தியின் வாசஸ்தலம்.
5) பாற்கடல் வந்த பிருகு முனிவரை பரந்தாமன் கண்டும் காணாதது போல் இருக்க, இதனால் முனிவர் கோபமுற்று ஸ்ரீ ஹரியின் மார்பில் உதைத்ததும் லக்ஷ்மிக்கு கோபம் மூண்டது ஆனால் பரந்தாமனோ அவரை மன்னித்து விட்டார்.
உன் திருமார்பு நான் வசிக்கும் இடம் அல்லவா அவரை மன்னித்துவிட்டீரே, இந்த இடம் அசுத்தமாகிவிட்டது இனி நான் இங்கு இருக்கமாட்டேன் என்று லக்ஷ்மி கிளம்பி விட்டாள்.
6) லக்ஷ்மி கோபத்துடன் பிருகுவை விடமாட்டேன், இனி பிராமணனிடம் செல்வம் நெருங்காது தங்கள் அறிவை விற்றே பிழைக்கட்டும் என்று சபித்தாள்.
7) லக்ஷ்மி புறப்பட்டு கோலாபுரியை வந்தடைந்து காவி உடை தரித்து தவத்தில் ஈடுபடலானாள். இதுவே இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாபுர்.
8) லக்ஷ்மியை பல இடங்களில் தேடி காணாது களைத்து போய் பெருமாள் கடைசியாக வந்த ஷேத்திரம் வராகபுரி. இனியும் அலைந்து விரயமே என்று அங்கேயே தங்கி கொள்ள ஸ்ரீ ஹரி அந்த சாம்ராஜ்யத்தின் அதிபதி பூவராக மூர்த்தியிடம் பிரார்த்திக்க “சரி, நூறு அடி தருகிறேன். என்ன விலை தருவாய் ?” என்று கேட்டார் பூவராகன்.
9) நானோ பரம ஏழை, லக்ஷ்மி என்னிடம் இப்போது இல்லை. என்னால் என்ன கொடுத்து விட முடியும் என யோசித்து “கலி யுகம் முடியும் வரை நான் இங்கு இருப்பேன், என்னை காண பல கோடி பக்தர்கள் வருவார்கள் அவர்கள் வந்து முதலில் உன்னை வணங்கிய பின்பே என்னை வணங்குவார்கள்” என்று ஸ்ரீ ஹரி கூற பூவராகன் அகமகிழ்ந்து இடத்தை கொடுத்தார்.
இன்றுவரை வேங்கடவனுக்கு திருமலையில் அவன் வாசம் செய்யும் நூறு அடி கர்ப்பக்ரகம் மட்டுமே சொந்தம் மற்ற அனைத்தும் பூவராக மூர்த்தியின் சொத்துக்கள்.
10) வராகபுரியில் வகுளாதேவி என்ற வயதான மூதாட்டி இருந்தாள் அவள் பரந்தாமனுக்கு இட்ட பெயரே ஸ்ரீனிவாசன். இவளே கிருஷ்ணாவதாரத்தில் யசோதை.
தாயாக கிருஷ்ணனின் கல்யாணங்களை பார்த்திராத குறையை கூற அவர் வரம் தந்து கலி யுகத்தில் ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாணத்தை நடத்தி வைக்க பிறந்தவள் வகுளாதேவி.