"நாவிலேயே தழும்பு எற்பட்டுப்போகும் அளவுக்கு திரு நாமத்தை உச்சாடனம் பண்ணனும். எத்தனை தடவைன்னு கேட்கக் கூடாது" என்கிறார், திருமங்கையாழ்வார்.
தழும்பு எப்படி உண்டாகும்? மீண்டும் மீண்டும் சொல்வதால்.. அதற்குத்தான் நியமம் ஏற்பட்டிருக்கிறது.
எழுந்திருக்கும் பொழுது, துயிலெழும்போது "ஹரிர் ஹரி, ஹரிர் ஹரி" என்று ஏழு தடவை சொல்ல வேண்டும். உரக்க, பெரிசா சொல்லணுமா?
மனசுக்குள்ளே சொன்னால் போதாதா? மனசுக்குள்ளே சொன்னால், பலன் நமக்கு மட்டும். பெரிசா சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்டபடி எழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும் இருக்கும். வெளியிலே கிளம்பிப் போகும்போது "கேசவா" என்று உச்சரிக்கணும்.
திருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து நம்மாழ்வார் பாடுகிறார் "கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன".. கேசவா என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடுமாம். அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும் போது கேசவா என்று அழைப்பது.
ஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித்திருக்கிறார் "கேசவனைப் பாடவும், நீ கேட்டே கிடத்தியோ, தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்" என்கிறது திருப்பாவை. "கேசவா கேசவா" என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம். நீ அதை கேட்டும் கிடந்து உறங்குகிறாயே"... என்று துயில் எழுப்புகிறார்.
அடுத்தது உணவு கொள்வதற்கு முன்னால் “கோவிந்தா” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவனை இப்படி அழைப்பதன் மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.
சிரமம் இல்லை, கஷ்டமான நியமம் இல்லை. ஹரி, கேசவா, கோவிந்தா, மாதவா என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து விட்டிருக்கிறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியும் இல்லாமலே நாம சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது. ஆனால், சொல்கிற அந்த நேரத்திலே மனசு அளவு கடந்த பக்தியிலே நிரம்பி இருக்கணும்.
"சொல்லிப் பார்ப்போமே, பலன் இருக்கிறதாவென்று" அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக்கூடாது.
காரணம், அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை. "சர்வோத்தமஸ்ய கிருபையா".. சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மை உச்சரிக்க வைப்பதும் அவனுடைய கிருபைதான், கருணைதான்.
முதலிலே இந்த நித்ய காரியங்களுடனான நாம உச்சாடனத்தைப் பழகிக் கொண்டு விட்டால் மனசு மேலும் மேலும் அந்த சத் அனுபவத்தைக் கேட்கும். அந்த மனசுக்கு தெய்வானுபவம் தரக்கூடியதாய அமையப் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
ஓம் நமோ நாராயணா !
சர்வம் விஷ்ணு மயம்