ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.

மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.

மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

மகாலட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.

லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.

லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.

லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.

லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.

லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.

அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி மகாலட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.

இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம்.

எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.

கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.

குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.

கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.

சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம்.

சீல கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.

செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.

தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.

திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.

திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.

தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.

தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது

தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.

தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.

நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

நாம் செய்யும் பாவ, புண்ணியந்த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.

நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.

நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.