Saranatha Perumal Temple | திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில் | திவ்ய தேசம் 15

மூலவர் : சாரநாதன்
அம்மன்/தாயார் : சாரநாயகி - பஞ்சலெட்சுமி
தீர்த்தம் : சார புஷ்கரிணி
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருச்சேறை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாஸனம் : திருமங்கையாழ்வார்

பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.
-திருமங்கையாழ்வார்

திருவிழா:
தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
தல சிறப்பு:
இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்)நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 15 வது திவ்ய தேசம்.

பொது தகவல்:
இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார். கோயில் நீளம் 380 அடி. அகலம் 234 அடி. கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரம். கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக் கின்றனர்.கோயில் உள்பிர காரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை :
செய்த பாவங்கள் விலக இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த பெருமாளை வழிபாடு செய்தால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கிறது.

நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:
ஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவரை அழைத்து பிரளயகாலம் வருகிறது, நீ உடன் பூலோகம் சென்று ஒரு புனித தலத்தில் மண் எடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் என கட்டளை இட்டார். பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்தவன்னம் இருந்தது. மகாவிஷ்ணுவை வேண்ட திருமால் பூலோக முக்கிய தலங்களுள் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்ததில் நீராடி, மண் எடுத்து செய் எனக் கூறினார். பிரம்ம தேவரும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார்.

விஜயநகரப் பேரரசு ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க அரசர், மன்னார்குடியில் இராஜகோபால சுவாமிக்கு ஒரு கோவில் அமைக்கத் தீர்மானித்து அதற்கான பொறுப்பைத் தன் அமைச்சரான நரச பூபாலனிடம் அளித்தார். பூபாலன் சாரநாதப் பெருமாளின் பக்தர். திருச்சேறையிலும் கோவில் அமைக்க விரும்பிய அமைச்சர், மன்னார்குடிக்குக் கருங்கற்களைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு பாரவண்டியிலிருந்தும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிட்டுச் செல்லும்படி தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். இச்செய்தியை அறிந்து சினமடைந்த அரசன் திருச்சேறைக்குச் சென்றான். அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதப் பெருமாள், இராஜகோபால சுவாமியாகக் காட்சியளித்ததால் சினம் தீர்ந்த அரசன் இக்கோவிலையும் அமைப்பதற்கு மனம் உவந்தான் என்பதும் இத்தலம் குறித்த மரபு வரலாறு ஆகும்.

தல வரலாறு:
பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம்,""அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்,''என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார்.

"தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது,''என காவிரி கூறியவுடன், கருட வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, "வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி,""தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்,''என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

அதிசயத்தின் அடிப்படையில்:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார்.

இருப்பிடம் :
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் அனைத்து பஸ்களும் இத்தலம் வழியாக செல்கின்றன.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை- 612605 தஞ்சாவூர் மாவட்டம்.

போன்:
+91 0435-2468078, 435-2468001.9444104374,

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!