Sri Oppiliappan Temple Tirunageshwaram - திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திவ்ய தேசம் - 13

மூலவர் : ஒப்பிலியப்பன் (திருவிண்ணகரப்பன்)
உற்சவர் : பொன்னப்பன்
அம்மன்/தாயார் : பூமாதேவி
தீர்த்தம் : அஹோத்ரபுஷ்கரணி
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவிண்ணகரம்
ஊர் : திருநாகேஸ்வரம்
மாவட்டம் : தஞ்சாவூர் 
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் :  பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல் வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்.
-பேயாழ்வார்.

திருவிழா: 
புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம். 

தல சிறப்பு: 
ஆழ்வார்களினால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 13 வது திவ்ய தேசம். தாயார் அவதரித்த தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.   

பொது தகவல்:
இத்தலத்திற்கு அருகில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம். திருப்பதி வெங்கடாசலபதிக்கு உண்டானது போல் இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.

பிரார்த்தனை :
இங்கு வேண்டிக்கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

தலபெருமை:
திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் "உதயகருடசேவை' அருள்கிறார். பின், "தெட்சிண கங்கை' என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன்பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு சுவாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.

பஞ்சகோல சுவாமி :
இத்தலத்தில் சுவாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, "மாம் ஏகம் சரணம் விரஜ' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு "என்னை சரணடைபவர்களை காப்பேன்' என்று பொருள். நம்மாழ்வார் இவரை "யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்' என்ற பொருளில் மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்கு திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் சுவாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம்.இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள்விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு "பகலிராப்பொய்கை' என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.

மனைவியை பிரியாத பெருமாள் :
பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலதுபுறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது ஒருபோதும் தன் மகளை விட்டு பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

தல வரலாறு :
மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், ""எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள்.மகாவிஷ்ணு அவளிடம், ""நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார்.

தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், ""சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

இருப்பிடம் : கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பஸ் வசதி உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல்1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி : அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் - 612 204. தஞ்சாவூர் மாவட்டம் போன் :
+91- 435 - 246 3385, 246 3685,

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!