Sri Perundevi Thayar - பொன்மழை பொழிந்து வறுமையைப் போக்கும் காஞ்சிபுரம் பெருந்தேவித் தாயார்!

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது வள்ளுவர் வாக்கு. செல்வத்தின் பிறப்பிடமாக விளங்கித் தன்னைத் துதிக்கும் அனைவருக்கும் வாரி வழங்குபவள் அன்னை மகாலட்சுமி. தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குச் செல்வச் செழிப்பை அருள்வதற்காகவே ஶ்ரீநிவாசப் பெருமாள் தன் மார்பில் அன்னை மகாலட்சுமியைத் தாங்கி தரிசனம் கொடுக்கிறார். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருமகளின் அருள் வேண்டாதவர்கள் இல்லை. அன்னையின் அருளை எளியவர்களுக்கும் சொந்தமாக்கவே ஆசார்யர்கள் தோன்றி பல தோத்திரங்களை அருளிச் செய்திருக்கின்றனர்

தன் வீட்டு வாசலில் துவாதசி நாளில் பிட்சை கேட்டு வந்து நின்ற ஆதிசங்கரருக்கு, தன் வசம் இருந்த ஒரே நெல்லிக்கனியையும் தானமாகக் கொடுத்தாள் ஓர் ஏழைப் பெண். தனக்கில்லாத நிலையிலும் பிறருக்கு உதவும் அவளின் நிலை கண்டு வருந்திய ஆசார்யர், அந்த கணத்திலேயே அன்னை மகாலட்சுமியைத் துதித்து போற்ற ஆரம்பித்தார். அன்னை மனம் இரங்கி பொன்மழை பொழிந்தாள். பொன்னே மழையாகப் பொழிந்ததால், `கனக தாரா ஸ்தோத்திரம் ' என்று அந்த துதி பெயர் பெற்றது.

அதேபோல அன்னை மனமிரங்கிய மற்றுமொரு நிகழ்வு, காஞ்சிமாநகரிலும் நிகழ்ந்தது. நமது நாட்டிலுள்ள முக்கிய புண்ணியத்தலங்களான அயோத்தி, மதுரா, மாயா, காசி, அவந்தி, காஞ்சி, துவாரகா ஆகிய 7 நகர்களில் காஞ்சியே முக்கியமான சிறப்பினை உடையது. இதையே `முக்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சிதனில்' என்று காஞ்சிமாநகரின் பெருமையைப் புகழ்வார் தேசிகர். திரும்பும் திசையெங்கும் திருக்கோயில்களே காட்சியளிக்கும் காஞ்சிமாநகரில் முக்கியமான ஒரு தலம் வரதராஜனாக எழுந்தருளி தரிசனம் கொடுக்கும் `பேரருளாளன்' திருக்கோயிலும் ஒன்று. இந்தத் தலத்தில் அன்னை புரிந்த அற்புதங்கள் அநேகம். அவற்றுள் வேதாந்த தேசிகரின் வேண்டுதலை ஏற்றுப் பொன்மழை பொழிந்த நிகழ்வும் ஒன்று.

வேதாந்த தேசிகர், 1268 - ம் ஆண்டு தூப்புல் என்னும் கிராமத்தில் அவதரித்தவர். பெருமாளின் மீது பெரும் பக்தி கொண்டவர். தன் வாழ்வில் செல்வத்தின் பின்னே செல்வதில்லை என்னும் பெரும் வைராக்கியம் கொண்டவர். வேதாந்த தேசிகரை அறிந்தவர்கள் அவரின் வறுமைபோக்க விரும்பி, அவருக்கு பிட்சை இடும்போது, அரிசியோடு சேர்த்து சில பொற்காசுகளையும் இடுவர். பிட்சை முடிந்து வீடு திரும்பிய தேசிகர் அரிசியில் பொற்காசுகள் இருப்பதைக் கண்டதும், முகம் சுளித்து அதைத் தொடக்கூட விரும்பாமல் குச்சி ஒன்றை எடுத்து அக்காசுகளைத் தள்ளிவிடுவாராம். அந்த அளவுக்குச் செல்வத்தின்மீது ஆசையில்லாமல் இருந்தவர் தேசிகர். அவருக்கு அருள் செய்ய வேண்டும் என்று தாயுள்ளத்துடன் காத்திருந்தார் பெருந்தேவித் தாயார். அதற்கான தருணமும் கனிந்தது.

ஓர் அந்தண இளைஞன், தன் திருமணத்துக்குச் செல்வம் இல்லாமல் தவித்துவந்தான். காஞ்சிமாநகர் வீதிகளில் அவன் தனக்குத் தானமிடும் அளவுக்குச் செல்வந்தர் யார் என்று விசாரித்துக்கொண்டிருந்தான். செல்வத்தின்மீது பற்று இல்லாமலும் அதே நேரம் வைராக்கிய பக்தியோடும் வாழும் தேசிகரைக் கண்டு உள்ளூரில் இருந்த சிலர் பொறாமை கொண்டனர். அவர்கள், அந்த இளைஞனை அழைத்து, `உனக்கு தானம் செய்யும் தகுதி தேசிகருக்கே உள்ளது. அவரைச் சென்று பிடித்துக்கொள்' என்று சொல்லியனுப்பினர். தேசிகர் கேட்பவருக்கு `இல்லை' என்று சொன்னால் அவரை அவமானப்படுத்தியதாக இருக்கும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது.

அந்த இளைஞன் தேசிகரை நாடித் தன் தேவையைச் சொன்னான். உடனே அன்னையை மனதில் தியானித்த தேசிகர், `நாளை காலை பெருந்தேவித் தாயார் சந்நிதிக்கு வா' என்று சொல்லி அனுப்பிவைத்தார். மறுநாள் அந்த இளைஞனும் அங்கு வந்தான். தேசிகர், அன்னை பெருந்தேவி மீது பாடியிருந்த `ஶ்ரீஸ்துதி'யை அவனிடம் தந்து இதைப் பாடியபடியே தாயாரின் சந்நிதியை வலம் வரச் சொன்னார்.

ஆசார்யரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்த இளைஞன், `மானாதீத ப்ரதித...' என்று தொடங்கும் ஶ்ரீஸ்துதியினைப் பாடத் தொடங்கினான். 25 பாடல்களைக் கொண்ட அந்த ஸ்துதியினைப் பாடிக்கொண்டே அந்த இளைஞன் வலம் வந்தான். ஶ்ரீஸ்துதியின் 16 வது பாடலான, `யோகாரம்பம் ...' என்று தொடங்கும் பாடலைப் பாடத் தொடங்கியதும் அன்னை பொன் மழை பொழிய  தொடங்கினாள். இதைக் கண்டு சிலிர்த்த தேசிகர் அந்த இளைஞனிடம், ` அன்னையின் அருள்கருணையே மழையாகப் பொழிகிறது. வேண்டுமட்டும் சிந்தாமல் சிதறாமல் பிடித்துக்கொள்' என்று சொன்னார். அந்த இளைஞனும் தன் மேல் துண்டினை விரித்து வீழ்ந்த பொற்காசுகளைப் பிடித்துக்கொண்டான். அதன் பின் தேசிகரையும் அன்னையையும் வழிபட்டு தன் வீடு திரும்பினான்.

இன்றும் அன்னை பெருந்தேவியின் சந்நிதியில், `ஶ்ரீஸ்துதி' பாடி வேண்டிக்கொள்ள வறுமை விலகுகிறது என்று பக்தர்கள் சொல்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலும் விளக்கேற்றி ஶ்ரீஸ்துதி பாடிவர செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை. திருமணம் தொடர்பான அத்தனை சிக்கல்களும் இங்கு வேண்டிக்கொள்ள தீர்ந்து விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் எல்லாம்  இங்கு பெருந்தேவித் தாயாரை வேண்டிக்கொள்ளத் தீரும்  பெருந்தேவித் தாயாரை வணங்கி சகல நன்மைகளையும் பெறலாம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!