Sri Sarangapani Temple - Kumbakonam |கும்பகோணம் சாரங்கபாணி திவ்ய தேசம் - 12

மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன் தாயார் : கோமளவல்லி தீர்த்தம் : ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு விமானம் : வைதிக விமானம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : திருக்குடந்தை ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் மாநிலம் : தமிழ்நாடு மங்களாசாசனம் : ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே -ஆண்டாள் திருவிழா:
சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.

தல சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12 வது திவ்ய தேசம்.இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது .
பொது தகவல்:
மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. 11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
கும்மாயம்: கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு வெல்லம், நெய் கொண்டு தயாரித்து படைக்கும் நைவேத்தியத்தின் பெயர் கும்மாயம்.
தலபெருமை:
உத்தான சயன பெருமாள் : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான சயன' கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்' என்பர்.

திவ்ய பிரபந்தம் தந்த திருமால் :
பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார். ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை "ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, "இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!' என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி - தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தம்' ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, "ஆராவமுதாழ்வார்' என்ற பெயரும் உண்டானது.
அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் :
திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது.

பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள சீனிவாசன் மேட்டு சீனிவாசன் :
திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார்.
அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், "பாதாள சீனிவாசர் சன்னதி' என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக' தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.

சொர்க்கவாசல் இல்லாதது ஏன்? :
திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.

உபய பிரதான திவ்யதேசம் :
திவ்யதேசம் தெரியும், அதென்ன உபய பிரதான திவ்யதேசம் என்கிறீர்களா?
இதற்கான விளக்கம் இதுதான்! திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே பூஜையின்போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும். ஆனால் இக்கோயிலில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது. அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து, உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார். எனவே இத்தலம், "உபய பிரதான திவ்யதேசம்' எனப்படுகிறது.
வில்லுடன் பெருமாள் :
பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், "சார்ங்கபாணி' என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது.
கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.
மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை :
இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன் :
லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்கு ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது.

தல வரலாறு:
ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. ""உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே'' என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ""அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்,'' என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு "கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், "சாரங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.
இருப்பிடம் : கும்பகோணம்- தஞ்சாவூர் ரோட்டில் நகரின் மையத்தில் கோயில் இருக்கிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம் : தஞ்சாவூர் திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி:
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் - 612 001 தஞ்சாவூர் மாவட்டம்.

போன் : +91-435 - 243 0349, 94435 - 24529.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!