அம்மன்/தாயார் : பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
தல விருட்சம் : புன்னை மரம்
தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : பூதப்புரி
ஊர் : திருப்புள்ளம்பூதங்குடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்
அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம் நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே.
-திருமங்கையாழ்வார்.
திருவிழா: வைகுண்ட ஏகாதசி
தல சிறப்பு:
பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 10 வது திவ்ய தேசம்.
பொது தகவல்:
இத்தல பெருமாளை ராமன், ஜடாயு ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை :
புதனுக்குரிய பரிகார தலமான இங்கு, பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உகந்தது. மேலும் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபாடு நடத்துகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பதவி உயர்வுக்காக பிரார்த்திப்பவர்கள், பிரகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், உத்யோக உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
தலபெருமை:
ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமன் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது. வைணவ சம்பிராத யத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளபூதங்குடி. இதை ஆச்சாரியார்கள் சிறப்பித் தார்கள். ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை, அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயு விற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் வல்வில் ராமன் என அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு:
சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள்.அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார்.இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.
சிறப்பம்சம்:
பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் :
சுவாமிமலையிலிருந்து திருவைகாவூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் 4 கி.மீ., தொலைவில் திருப்புள்ள பூதங்குடி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி, சென்னை
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி- 612301, தஞ்சாவூர் மாவட்டம்.
போன்: +91- 94435 25365