விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம் - Vidhura Neeti

யார் இந்த விதுரர்?
விதுரர்…திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி…அதாவது, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா…விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர். விதுரர் மகா நீதிமான்…தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்…தர்மராஜர்- அப்பழுக்கில்லாதவர்…

விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்
நூறு வயது வரை வாழ


திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே…இது ஏன்..? என்று கேட்டார்.
அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன – குறைகின்றன என்றார் …
அவை:

1.அதிக கர்வம் கொள்ளுதல்
2.அதிகம் பேசுதல்
3.தியாக மனப்பான்மை இல்லாமை
4.கோபம்
5.சுய நலம்
6.நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது


விதுரர் கூறீய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும் ? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும் …?

முதலாவது வாள் – அதிக கர்வம் கொள்ளுதல் :
தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது வாள் – அதிகம் பேசுதல் :
அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார்; கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்.

மூன்றாவது வாள் தியாக மனப்பான்மை இல்லாமை :
எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.

நான்காவது வாள் – கோபம் :
கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் வெற்றியாளன் , அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஐந்தாவது வாள்– சுய நலம் :
சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள், தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.

ஆறாவது வாள்- நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது :
உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பது போல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.

இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’
விதுரர் சொன்ன நீதி

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

பசி வயிற்றை கிள்ளும் போது.
தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

நம்மைப் பற்றி உணராதவர்கள்.
நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!