பரதத்வம் என்றால் என்ன ? | What is paratatvam? - spiritual story

எப்போதும் நம்மை ரக்ஷிப்பவன் பரமாத்மா!!!!

ஸ்ரீரங்க ஷேத்திரத்தில் பராசர பட்டர் என்கிற ஆச்சார்யார் இருந்தார் . ரெங்கநாத புரோஹிதர் அவர். சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். பகவத் குண தர்ப்பணம் என்று பெயர் அதற்க்கு. பகவானுடைய கல்யாண குணங்களைக் காட்ட கூடிய கண்ணாடி அது. ஸ்ரீரங்கத்திலே இருக்கிறபோது சிஷ்யர்களுக்கல்லாம் பாடம் சொல்லி கொடுப்பது வழக்கம். அவ்வாறு சொல்லுகிறபோது, ஒரு பெரிய வித்வான்வீதி வழியே போவார். அந்த வித்வான் போனால் பராசர பட்டர் ஏறடுத்தும் பார்க்கமாட்டார். விசாரிக்ககூட மாட்டார். அவர் போன சிறுது நேரத்துக்கெல்லாம், ஒரு பெரிய செப்புச் சொம்பை நன்றாக பள பளவேன்று தேய்த்து எடுத்துக்கொண்டு, உஞ்சவிருத்தி பிராமணர் ஒருத்தர் வருவார் - அரை குறையாக ஒரு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு வீதியோடு போவார். ஸ்லோகத்தையும் தப்பாகச் சொல்லுவார். பாத்திரம் ரொம்பும் அளவுக்கு வீதியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுப் போய்விடுவார். நிரக்ஷர குஷி அவர். ஒன்றும் தெரியாதவர். அவர் வந்துவிட்டால் பட்டர் அவரைப் பார்த்து ஒரு அரை மணி நேரம் விசாரிப்பார். " தேவரீர் எப்படி இருக்கிறீர் ? சௌக்கியமாக இருக்கிறீரா? குடும்பம் நன்றாக உள்ளதா ?" என்று கேட்ப்பார்.

ஒன்றுமே தெரியாத ஒருத்தர் வருகிறார். அவரிடம் அரை மணி நேரம் விசாரிக்கிறீர். மஹாவித்வான் போனால் எதுவும் கேட்காமலிருக்கிறீரே....?" என்று சிஷ்யர்கள் கேட்டார்கள் பட்டரிடம்.
அதற்க்கு அவர் சொல்கிறார்: "உங்களுக்கு ஒன்றும் தெரியாது இதை பற்றி ..நாளைக்கு நான் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

மறுநாள், ஸ்ரீரங்கநாதரின் கோயில் உத்சவங்களுல்லாம் முடிந்தபிறகு கிரஹத்துக்கு வருகிறார் பட்டர். சிஷ்யர்களெல்லாம் சித்தமாக இருக்கிறார்கள். அப்போது அந்த பெரிய வித்வான் வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதையெல்லாம் கொடுத்து உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார் பட்டர். "ஆகச்சந்து !" (வாருங்கள்) என்று அழைத்து வந்து "உபவிச்சந்து !" (உட்காருங்கள்) என்று இருக்கச் செய்தார். உட்கார்ந்தவுடனே பட்டர் அவரைப் பார்த்துக் கேட்க்கிறார் " பரதத்வம் நாம கிம் ?" பரதத்வம் என்றால் என்ன ..? எது? உடனே அந்த மகான் சொன்னார், "எனக்கெங்கே சந்தேகமோ அங்கயே நீங்களும் கேள்வி கேட்டு விட்டீர்களே !... இத்தனை சாஸ்திரம் படித்தும் எது பரதத்வம் என்று நிர்ணயம் பண்ண முடியாமல் போட்டுக் குழம்பிக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் புரியவில்லை. நீங்களும் அதையே கேட்டுவிட்டீர்களே"! "சரி நீங்கள் போகலாம் !" என்று அவரை அனுப்பிவிட்டார் .

வித்வான் போன உடனே அந்த உஞ்சவிருத்தி பிராமணர் வந்தார். அவரை வீட்டிற்குள்ளே அழைத்தார் பட்டர் . உடம்பல்லாம் நடுங்கறது அந்த ஏழை பிராமணருக்கு. கூப்பிடுகிறவரோ பெரிய வித்வான் இவரோ ஒன்றும் தெரியாத அஞ்ஞானி; அறிவிலி ; இவரை கூப்பிட்டு உள்ளே உட்கார வைத்துவிட்டு பட்டர் கேட்கிறார் " சுவாமி ஒரு சின்ன சந்தேகம்...." சந்தேகம் என்ற உடனேயே மூர்ச்சை ஆகிவிடும் போலிருந்தது பிராமணருக்கு. பட்டர் அவரை ஆசுவாச படுத்தி "சுவாமி பயபடாதீர் .... ஒரு சின்ன கேள்வி உம்மைப் பார்த்து கேட்கிறேன். பரதத்வம் என்றால் என்னவென்று தெரியுமா ....?
பட்டர் இதை கேட்டதும்தான் தாமசம் பிராமணர் உடனேயே கையிலிருந்த சொம்பை கோபத்துடன் தூக்கி எறிந்தார். அது போய் ரெங்கனாதருடைய கோயில் சுவரில் அடித்து கீழே விழுந்தது! அவர் பட்டரைப் பார்த்துப் பேசினார் " பரதத்வம் தெரியாமலா இத்தனை நாட்களாக இங்கே பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டுருக்கிறீர்! நீர் என்னவோ பெரியதாகச் சொல்லிகொடுக்கிறீர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பரதத்வம் உமக்கே தெரியாதா ....?

"சரி உமக்கு தெரியுமா" பரதத்வம் ...?" திருப்பிக் கேட்டார். ஏன் தெரியாது ? இதோ உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறானே அந்த ரெங்கநாதன்தான் பரதத்வம். இதிலே உமக்கு என்ன சந்தேகம் ....?

---- இதை சொன்னவுடனே பராசர பட்டர் விழுந்து விழுந்து அவரைச் சேவிக்கிறார். எல்லா சிஷ்யர்கள் கண்களிலும் ஜலம் வருகிறது.

எல்லா சாஸ்திரங்களையும் படித்தும், பரதத்வம் என்றால் என்னவென்று சொல்ல முடியவில்லை அந்த மஹாவித்வானால் . ஆனால் உஞ்சவிருத்தி பிராமணருக்கோ ஒன்றும் தெரியாது. ரெங்கநாதன்தான் பரதத்வம் என்கிறார். எது வேண்டும் நமக்கு இப்போது ?"

சுமையான கல்விகள் அதெல்லாம்.... ம்ஹும். அத்தனை கல்விகளைச் சுமந்தும் பிரயஜோனம் இல்லையே! பரதத்வம் தெரியாத கல்வி எதற்கு? ஸாவித்யா, உத்தமா வித்யா, வேத வித்யா ஸமீரிதா - அவனை உணர்த்தாத வித்யை நமக்கு எதற்கு ? அவனை உணராத ஞானம் அஞ்ஞானம் .
அவித்யை என்றால் எது ? அவனை உணராதது அவித்யை. வித்யை என்பது அவனை உணரக்கூடிய காட்டக்கூடிய அனைத்தும் வித்யைதான்.
ஆகவே, சமஸ்த சாஸ்திரங்களையும் படித்து பகவானை உணரவில்லை என்றால் அத்தனையும் வீணே. ஒன்றுமே படிக்கவேண்டாம். ஆனால் அவனை உணர்ந்தால் போதும். எவன் உணர்ந்திருந்தால் எல்லாம் உணர்ந்ததாக ஆகிறதோ அவனே பரபிரும்மம் . எல்லாவற்றையும் உணர்ந்து அவனை உணரவில்லையெனில் எதயுமே உணர்ந்ததாக ஆகாது என்று சொல்லிவிட்டது உபநிஷத்.

காலத்தினால் இருந்து ரக்ஷிக்கக்கூடியவன் இந்த எம்பெருமான்தான். அவன்தான் ரக்ஷகன் என்பதை எடுத்துக்காட்டி உள்ளே இருக்கிற அவன்தான் பரதத்வம் என்பதை சுலபமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் உஞ்சவிருத்தி பிராமணர். அவருக்கு மற்ற சாஸ்திரங்களெல்லாம் தெரியாது. இருந்தாலும் "ரெங்கநாதர்தான்' என்று திடமாகச் சொல்லுகிறார் பாருங்கள். அது சாமான்யர்களிடத்தில்தான் அமையும். அப்படிப்பட்ட அவரல்லவோ யாம் வணங்கும் அடிகள் ஆவார் !

'ஜாதியில், ஒழுக்கத்தால் மிக்கோரேனும், சதுர் மறையால் வேள்வியால் தக்காரேனும்' --- பிள்ளை பெருமாள் ஐயெங்கார் அழகாகச் சொல்லுகிறார் - உத்தம குலத்திலே பிறந்திருக்கலாம். சதுர் சாஸ்திர பண்டிதராக இருக்கலாம். ..... அந்த ரங்கநாதன் பரதத்வம் என்று சொல்லாதவர் ... அவனிடத்திலே பக்தி இல்லாதவர் .. வெறும் புலையர்தான்.
"பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாம் என்று சொல்லிவிட்டார். ரெங்கநாதனுக்கு பிடிக்காதவர்கள் அவர்கள்.

சாமானியராக இருந்தாலும் எம்பெருமானிடத்திலே பக்தியோடு இருப்பவர்களே உயர்ந்தவர்.
அவன்தான் ரக்ஷகன். எக்காலத்திலும் எப்பொழுதும் அவன்தான் ரக்ஷகன். நம்முடைய சாமர்த்தியத்தினால் நாம் ரக்ஷிக்கப்படுவதில்லை. அவன்தான் நம்மை ரக்ஷிக்கிறான் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.

பகவான் நம்மை ரக்ஷிக்கிறான் என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்ளலாம்? தூக்கம் என்பதை கொடுத்திருக்கிறானே. அதை கொண்டே நாம் தெரிந்துக் கொள்ளலாமே. நாம் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கிறோம். அதை சரி பண்ணுகிறோம். அதை சரி தட்டுகிறோம் அது மேலே விழுந்துவிடுமோ என்று சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் பார்க்கிறோம். விஷ ஜந்துக்கள் உள்ளே வர கூடாது என்று அதையும் இதையும் மூடி வைக்கிறோம். ஆனால், தூங்குகிறபோது எது மேலே விழுந்தால் நமக்கு என்ன தெரியும். எந்த பிராணியோ விஷ ஜந்தோ கடித்தால் என்ன தெரியபோகிறது. தூக்கத்திலே நம்மை நாமா ரக்ஷித்துக் கொண்டா இருந்தோம்? இல்லையே!
தூக்கத்திலே எப்படி நாம் ரக்ஷகர்கள் இல்லையோ அப்படியேதான் விழித்துக் கொண்டிருக்கும்போதும் நாம் ரக்ஷகர்கள் இல்லை. எவ்வாறு தூக்கத்திலே நம்மை ரக்ஷிப்பதர்க்கு பகவானை நம்பிக் கொண்டிருக்கிறோமோ அதே மாதிரி விழிப்பிலும் அவனே நம்மை ரக்ஷிக்கிறான் என்று நினைக்கிற எல்லோரும் எம்பெருமானிடத்திலே உத்தமமான பக்தி உடையவர்கள்.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!