விதுரர் திருதராஷ்டிரனுக்கு கூறிய அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களை உடையவை. பழி பாவங்களிலிருந்து தப்பித்து, தர்மத்தின்படி வாழ்வை நடத்த வேண்டும் என நினைக்கும் யாவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நீதிக் கருத்துக்களை எடுத்துக் கூறுகிறது விதுர நீதி.
மஹா பாரதம் நமக்கு கிடைத்த மிகவும் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாகும். நான்கு வேதங்களுக்குப் பின் ஐந்தாவது வேதமாக மஹா பாரதம் கருதப்படுகிறது. மஹா பாரதத்தில் ஒன்றே கால் லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன. மொத்தம் உள்ள பதினெட்டு பர்வத்தில் ஐந்தாவது பர்வமான உத்தியோக பர்வத்தில் விதுர நீதி திருதராஷ்ட்ரன் க்கு கூறப்பட்டுள்ளது.
சஞ்சயன் பாண்டவரிடத்தில் தூது போய் வந்த பிறகு காலையில் திருதராஷ்ட்ரன் ஐ சந்தித்து விவரம் கூறுவதாக சென்றுவிடுகிறான். திருதராஷ்டிரன் தனது ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டிவருமே என்று எண்ணி மிகவும் துன்புறுகிறான். எனவே உறக்கம் வராமல் வாயில் காப்போனை அழைத்து விதுரரை அழைத்து வர ஆணை இடுகிறான். உறக்கம் வராமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும்.
முந்தைய காலத்தில் ஆணிமாண்டவ்யன் என்ற ரிஷி ஒருவர் இருந்தார். அவர் தனது சிறு பிராயத்தில் எறும்புகளைப் பிடித்து துன்புறுத்தி விளையாடி வந்தார். பிறகு யோகங்கள் பல செய்து ஆழ்ந்த தியான மார்க்கத்தில் ஈடுபட்டார். ஒரு நாள் அவர் மீது சில குற்றங்கள் சுமத்தப் பட்டு ராஜாவிடம் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜா அவரை விசாரித்தார். ஆனால் ரிஷி தியானத்தில் ஈடுபட்டிருந்ததால் எதுவும் சொல்லாமல் தியானத்தில் யே ஈடு பட்டிருந்தார்.
ராஜா அவரை கழுவில் ஏற்றுமாறு தண்டனை இட்டான். அவருக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. பாதி கழு உடம்பில் ஏறிய பிறகுதான் அவருக்கு பிரக்ஞை வந்தது. அக்கம்பக்கத்தில் விசாரிக்கவே அவர் செய்ததாக சொல்லப்பட்ட குற்றம் சொல்லப்பட்டது. தான் அந்த குற்றம் செய்யவில்லையே என்ற எண்ணம் அவருக்கு அப்போதுதான்வந்தது.
இருப்பினும் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை கிடைத்திருக்கிறது என்றால் அதற்க்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணி தனது சக்தியால் தரும ராஜனை அழைத்தார். தரும ராஜன் தோன்றவே தனக்கு தண்டனை தரப்பட்டதற்கான காரணத்தை கேட்டார்.
அதற்கு தரும ராஜன் சிறுபிராயத்தில் எறும்புகளை துன்புருதியதற்காக இந்த தண்டனை தற்போது மன்னனால் தரப்பட்டது என்று கூறினார். அருகில் இருந்தவர்கள் மன்னன் வேறு எதோ தவறு செய்ததிற்காக அல்லவா தண்டனை கொடுத்தான். ஆனால் இங்கு எறும்பை துன்புறுத்தியதை பற்றி கேள்விப் படவில்லையே என்று ஆச்சரியப் பட்டார்கள்.
ரிஷி தனது சிறுபிராயத்தில் அறியாமல் செய்த தவற்றிற்கு கொடுத்த தண்டனை சரியானது இல்லை ஆதலால், தர்ம ராஜனை நூறு ஆண்டு காலம் பூலோகத்தில் பிறந்து சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டார். அந்த சாபத்தினால் தான் தர்ம ராஜனே விதுரராக அவதரித்தார். விதுரர் சொல்லும் அனைத்து வார்த்தைகளும் தர்ம நீதிகள் ஆகும். அவர் எப்போதுமே தர்மத்தை தவிர வேறு எதையுமே கூறியதில்லை.