மஹா பாரதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. ராமாயணம் மற்றும் மஹா பாரதத்தை நாம் இரண்டு இதிகாசங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆத்மாவிற்க்கு நன்மை பயப்பதாய் சத் விஷயங்களை காட்டி கொடுப்பதாக மஹா பாரதம் விளங்குகிறது. அது பெரியதாக இருப்பதாலும் உயர்ந்ததாக இருப்பதாலும் தான் அது மகா பாரதம் என்று அழைக்கப் படுகிறது. இதை தினமும் ஒரு சிறு பகுதியாவது நாம் படித்தால் நமக்கு நன்மைகள் பல கிட்டும். நாம் நமது பிறவிப் பயனைப் பெற்று பிரம்மத்தை அடைவோம் என்பது நிச்சயம்.
விதுரர் தொடர்ந்து செய்த போதனைகளை மேற்கொண்டு பார்ப்போம். கீழ்க் கண்ட பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்கிறார்.
1. கள் குடித்து போதையில் வெறி பிடித்தவன்.
2. எதையுமே கவனமின்மையால் தப்பு தப்பாகவே செய்பவன்.
3. பைத்தியம் - இவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
4. களைத்தே காணப்படுபவன் - எந்த வேலை சொன்னாலும் கை சரியில்லை, கால் சரியில்லை என்று ஏதாவது காரணம் சொல்லுபவன். இவனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
5. கோபப்படுபவன் - எதற்கெடுத்தாலும் கோபம் அடைவதால் எந்த நன்மையையும் கிடைக்காது. மூளைதான் மழுங்கிப் போகும்.
6. பெரும் பசியாளன் - எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன். இவனாலும் ஒரு நன்மையும் இல்லை.
7. பதட்டத்தில் அவசரமாக எந்த செயலையும் செய்பவன் - இவன் செய்த வேலையில் சுத்தம் எப்போதுமே இருக்காது.
8. எதையும் யாருக்கும் கொடுக்காமல் தானே அனுபவிப்பவன் - இவனுக்கு பிறவி விமோசனமே கிடைக்காது.
9. எல்லாவற்றிற்கும் ஆசைப்படுபவன் - இவனது கவனம் பொருட்களின் மீதே இருக்கும்.
10. எதற்கெடுத்தாலும் பயப்படுபவன் - எந்த செயலை செய்ய மாட்டான். பயந்து கொண்டே இருப்பான். இவனாலும் ஒரு பிரயோஜனமும் கிடையாது.
ஆக இந்த பத்து பேரையும் தள்ளி வைக்க வேண்டும் என்று விதுரர் கூறியுள்ளார். மேற்கொண்டு உபதேசித்ததை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.