மஹா பாரதத்தில் நமக்கு வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் உத்தியோக பர்வத்தில் உள்ள விதுர நீதியை பற்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருதராஷ்டிரனுக்கு விதுரர் உபதேசித்தது நமக்கு இன்றும் உபயோகமுள்ளது ஆகும்.
மேற்கொண்டு சிறந்த ஆசிரியனாக விளங்க கீழ்க் கண்ட குணங்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். (விதுர நீதியில் இதுவரை சொல்லப்பட்டதை பழைய பதிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.)
1. யார் ஒருவன் அடங்கிப் போன சண்டையை மூட்டிவிடாமல் இருப்பானோ அவன் சிறந்த ஆசிரியன். - இந்த காலத்தில் நமது பகையை மறந்து இருக்கும்போது நமக்கு அதை நினைவூட்டி பகையை ஞாபகமூட்டி சண்டையை மூட்டி விடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள். நாம்தான் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும்.
2. யாரிடம் கர்வம் இல்லையோ அவன் சிறந்த ஆசிரியன் - ஆசிரியனிடம் கர்வம் சிறிதளவும் இருக்கக் கூடாது. எல்லாம் தெரிந்திருப்பதால்தான் அவன் ஆசிரியன் ஆவான். தனக்கு தெரிந்து இருப்பதை கர்வமாக நினைப்பவன் சிறந்த ஆசிரியன் ஆக மாட்டான்.
3. தனது வறிய நிலையை சொல்லாதவனே சிறந்த ஆசிரியன் - ஆசிரியன் தனது கஷ்டத்தப் பற்றி மாணவர்களிடம் சொல்லக் கூடாது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கொடது. இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் இருந்தாலும் அவர்கள் இன்னும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தால் அதை வறிய நிலை என்று எடுத்துக் கொள்ளலாம்.
4. எந்த துன்பத்தில் இருந்தாலும் செய்ய கூடாத காரியத்தை செய்யாதவனே சிறந்த ஆசிரியன். - ஆசிரியன் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். தனக்கு எதாவது கஷ்டம் வந்தால் அதிலிருந்து தப்பிக்க எந்த கெட்ட காரியத்தையும் செய்து விடக் கூடாது. பகவான் நம்மை சோதிக்கலாம். நாம்தான் மன தைரியத்துடன் எந்த கஷ்டத்தையும் தாங்கிக்கொள்பவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய குணங்களை விதுர நீதியில் கூறியுள்ளார். மேற்கொண்டு என்ன சொன்னார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.