ஏகாதசி 17 வழிபாட்டு குறிப்புகள்

1. ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள்.

2. ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாகதந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

3. ஏகாதசியன்று இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும். இரவெல்லாம் கண்முழித்து இருக்க வேண்டும். பகலெல்லாம் கீர்த்தனம் பண்ணணும் என்பதே இந்த இரண்டு செயல்கள்.

4. கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி.

5. இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

6. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

7. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.

8. நெருங்கிய உறவினரின் பிறப்பு இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.

9. பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதிக சிறப்பு உண்டு.

10. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் (எல்லா விரதங்களுமே) குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணம், துன்பப்படுவோர் நன்மை பெற வேண்டும் என்பது மட்டுமல்ல. அவ்வல்லல்களுக்குக் காரணமாகும் தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று நினைவுறுத்துவதே, விரத மேன்மை விவரிப்புகளின் நோக்கமாகும்.

11. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது.

12. ஏகாதசி விரதத்தன்று வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு.

13. அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல் களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது.

14. எல்லா தேய்பிறை, வளர்பிறை ஏகாதசிகளிலும் எல்லோருமே, முற்றும் உண்ணாமையை மேற்கொள்வதே சிறப்பு. இருப்பினும், இல்லறத்தாரின் அன்றாட பணி நிர்பந்த நிலைகளையும், அதனால் கொஞ்சமாவது உணவு ஏற்க வேண்டிய நிலையையும் கருதி, சாஸ்திரங்கள் சில விதி தளர்வுகளை அனுமதிக்கின்றன.

15. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் உண்ணாமை யாவர்க்கும் கட்டாயம். பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.

16. நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.

17. குசேலன், ஏகாதசி விரதமிருந்து, பெரிய செல்வந்தன் ஆனான். தர்மராஜா, ஏகாதசி விரதமிருந்து, துன்பத்திலிருந்து விடுபட்டார். ருக்மாங்கதன் ஏகாதசி விரதமிருந்து, மக்கட்பேறு பெற்றான். வைகானஸ் என்ற அரசன், ஏகாதசி விரதமிருந்து, தன் மூதாதையர்களுக்கு நற்கதி பெற்றான்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!