'' உந்து மத களிற்றன்''
அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி. அடடா! எவ்வளவு புண்யசாலி. சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண். இல்லவே இல்லை. மிக உயர்ந்த படிப்பான ஞானத்தில் பிறக்கும்போதே தேர்ந்த உயர்ந்த பெண். சாதி உடம்புக்கு தானே. உள்ளத்திற்கேது?
சாக்ஷாத் பரமாத்மன் நாரயணனே, தான் வளர, ஆயர்குலத்தைதானே தனக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுத்தான்,
உலகில் உத்தமமான, பூஜிக்கத் தக்க பிராணியான பசுவை பராமரிக்கும் ஆயர்பாடி மக்கள் அனைவரும் தான் ஆயர்குலம் (higher குலம் )என்ற உயர்குலம் கொண்டவர்கள். அதனால் தான் ஆண்டாளால் கிருஷ்ணனை அவன் வீட்டிலேயே காண முடிந்தது. ஆண்டாள் நினைத்ததை சாதிப்பவள்.
நந்தகோபன், யசோதை, கிருஷ்ணன் பலராமன் ஆகியோரை எல்லாம் துயிலெழுப்பும் வேலையில் ஈடுபட்ட ஆண்டாள் தன் தோழியருடன் சுற்றும் முற்றும் பார்க்கிறாள், இன்னும் யாரை இங்கே துயில் எழுப்பாமல் விட்டு விட்டேன் என்று. அப்போது தான் நப்பின்னை தெரிகிறாள். அடடா, இவளை விடலாமா என்று அவர்கள் அனைவரும் அவளை ஸ்தோத்ரம் செய்கிறார்கள்.
''அழகிய நப்பின்னையே (நீளா தேவி) , கமகமக்கும் தைல வாசனையோடு மணப்பவளே நந்தகோபன் மறுமகளே, உன் மாமனார் எப்படிபட்டவர் தெரியுமா உனக்கு?.
அவரது செல்வங்கள் கணக்கிலடங்காது. அனேக பசுக்கள், எருமைகள்,கன்றுகள் மட்டுமல்ல. யானைகளையும் உடையவர். எதிரிகள் தான் அவரைக் கண்டு அஞ்சி ஓடுவர்களே தவிர அவர் அஞ்சியதாக சரித்திரமே இல்லை. வெளியே சேவல்கள் குரல் கொடுத்து பொழுது விடிந்ததை பறை சாற்றுகிறதே.
அதோ பார், மல்லிப் பந்தல் முழுதும் குயில் கூட்டம் என்னமாக சூழ்ந்து கொண்டு பேசுகின்றன. மல்லிகை மலர்ந்து மணம் வாரி வீச அவற்றை அனுபவித்து தென்றலில் விடியலின் குளுமையில் லயித்து குயில்கள் கூவ, அவைகளின் இனிய குரலோசை, குழலோசையாக துயிலெழுப்பும் வேலையைச் செய்கிறதே தினமும். பந்து விளையாடும் பருவப் பெண்ணே, உன் கைகளின் வளையோசை கலகலவென ஒலிக்க உடனே வந்து கதவைத் திற. உள்ளே வந்து ஆசி பெறுகிறோம். எங்கள் நோன்புக்கு உன் நல்லாசியும் தேவையம்மா.''
நப்பின்னை யார்? இது பரம ரகசியமல்ல. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஒரு பாலம்.
அது புரிந்தால் போதுமானது. அவளது அனுகூலத்துடன் தான் நாம் வீடு பேறு அடைய முடியும்.
சூர்ப்பனகை சீதையை ஒதுக்கிவிட்டு ராமனைத் தேடினாள், ராவணன் சீதையைத் தேடினவன் ராமனை மறந்தான். முடிவில் இருவருமே அழிவைத்தான் தேடிக்கொண்டனர். நப்பின்னைப் பிராட்டி தான் ஆண்டாள் குரல் கேட்டு, கதவைத் திறந்து அந்த ஆயர்பாடி சிறுமிகளைக் கண்ணனிடம் உள்ளே அழைத்துச் சென்றாள். அதற்கப்புறம் தான் ஆண்டாள் கிருஷ்ணனை நேரே காண்கிறாள்.
ஆண்டாளின் இந்த இந்த பாசுரம் ஸ்ரீ ராமானுஜரை மிகவும் கவர்ந்த ஒரு பாசுரம். அவர் பிக்ஷைக்கு போகும்போது இதையே பாடிகொண்டு தான் தனது ஆசார்யன் வீட்டு வாசலில் நின்றார் என ஒரு சரித்திரம் உண்டு. அதை சுருக்கமாக சொல்கிறேன்.
ஸ்ரீ ராமானுஜருக்கே திருப்பாவை ஜீயர் என்று ஒரு பெயர். பெயரை வைத்ததே அவரது ஆசார்யன் பெரிய நம்பிகள். என்ன காரணம் ?
ஸ்ரீ ராமானுஜருக்கு திருப்பாவையின் உள்ளர்த்தங்களில் பொதிந்த வேத சாஸ்திர சாரமும் அதன் பொருட் செறிவும், தெள்ளிய நடையும் அதைப்பாடும்போது கிடைக்கும் நாவின் சுவையும் அனுபவமாயிற்றே. அடிக்கடி ஆண்டாள் பாசுரங்களை பாடிக்கொண்டே செல்வார். அதுவும் முக்யமாக பிக்ஷைக்கு அவர் வெறுங்காலோடு பாதரக்ஷை அணியாமல் செல்வது வழக்கம்.
அவரை மிகவும் ஈர்த்த பாசுரம் இந்த 18வது திருப்பாவை ''உந்து மதக் களிற்றின்''
ஒரு முறை திருக்கோஷ்டியூரில் இவ்வாறு வெறுங்காலுடன் ''உந்து மதக்களிற்றின்'' பாசுரம் பாடிக்கொண்டே தனது ஆசார்யன் வீட்டு வாசலில் பிக்ஷைக்கு நின்றார். அவர் நின்ற சமயம் அவரது ஆசார்யனின் பெண் வாசல் கதவை திறந்த அந்த நேரம், ராமானுஜர் பாசுரத்தின் மற்றொரு அடியான ''செந்தாமரைக் கையாள் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்'' என்ற வரியை பாடிக்கொண்டிருந்தார். '' வளை ஒலிப்ப'' என்று சொல்லும் போது தான் தற்செயலாக அந்தப் பெண் கையில் வளைகள் அணிந்து வந்து, கதவைத் திறந் தாள்
கை வளை ஒலிக்க ஆண்டாளே பிரத்யக்ஷமாக தோன்றியதாக ராமானுஜருக்கு மனதில் பட்டது. அந்த ஆனந்த அநுபவத்தில் ராமானுஜர் மூர்ச்சையானார். பெரிய நம்பி ஆச்சர்யருக்கு விஷயம் சென்றது.
''வாசலில் என்ன சத்தம், என்னம்மா அத்துழாய் நடந்தது?''
''வாசலில் பிக்ஷைக்கு யாரோ வந்திருக்கிறாரே என்று கதவைத் திறந்தேன். உங்கள் சீடர் ராமானுஜர் தான் நின்றார். என்னைகண்ட அடுத்த வினாடி அவர் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார் அப்பா. ஏன் எதற்கு விழுந்தார் என்று தெரியவிலையே ''
அப்போது அவர் என்ன பண்ணிக்கொண்டிருந்தார்?.
''ஏதோ சீரார் வளை ஒலிப்ப '' என்று உச்சரித்துக்கொண்டிருந்தார்.''
''ஓஹோ ராமானுஜன் உந்து மதக்களிற்றன் பாசுரத்தை பாடிக்கொண்டு வந்திருக்கிறான் போலும். வளைக்கரங்களோடு நீ கதவை திறந்தது அவன் பாடிய பாசுரத்தில் வரும் காட்சியை நினைவூட்டி இருக்கும். ஆண்டாளே நேரில் வந்து கதவைத் திறந்ததாக ராமானுஜனுக்கு தோன்றியிருக்கலாம்'. அந்த ஆனந்தானுபவத்தில் தன்னை இழந்திருக்கிறான்' என்று ஊகித்தார். அதனால் தான் அவருக்கு ''திருப்பாவை ஜீயர்'' என்ற பெயரும் இட்டார்.
அது சரி ஏன் ராமானுஜர் திருப்பாவை பாடல்கள் பாடும்போது பாத ரக்ஷை அணிவதில்லை? . காரணம், ஆண்டாள் பூமி தேவி. அவளது சாக்ஷாத் அவதாரம். அவளைப் பாடும்போது செருப்பு அணிவது தாயாருக்கு செய்யும் அபசாரம், அவமரியாதை அல்லவா என்று எண்ணினவர். என்னே அவர் பக்தி!! இதோ அந்த பாசுரம்:
''உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்''
மேலே சொன்ன ஆண்டாள் குரல் ஒலித்தது கோதை மூலம் வில்லிப்புத்தூரில். எங்கோ ஒரு அமைதியான நந்தவனத்தில் பறந்து செழித்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று பூத்துக்குலுங்கும் பல ஜாதிப்பூக்கூட்டங்களுக்கிடையே அந்த பர்ண சாலையை நந்தவனப்பூக்கள் எல்லாம் நறுமணத்தால் குளிப்பாட்ட உள்ளே விஷ்ணு சித்தர் பூஜைக்காக ஏற்றிய தூப தீபங்களின் இனிய மணத்தோடு கலந்து மேலும் இன்ப மூட்டியது. கண்ணுக்கு தெரியாமல் எங்கிருந்தெல்லாமோ வித வித பட்சி ஜாலங்களின் சப்தக்கலவை ஏழு ஸ்வரங்களின் ஓசையைக் கலந்து கட்டியாக பரிசளித்தது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி மேலே காற்றில் கோதையின் தெய்வீகக் குரலில் மேற்கண்ட பாசுரம் ஒலி பரப்பானது.
''அம்மா கோதை, நீ பாடுவது ஒவ்வொன்றும் அபூர்வம். அசாத்தியம். அதன் அர்த்தம் அலாதி. நான் இப்போதெல்லாம் வில்லிப்புத்தூரில் இல்லை அம்மா. நீ தான் என்னைக் குண்டு கட்டாக கட்டித் தூக்கி ஆயர்பாடியிலே வைச்சுட்டியே. நான் கேக்கறதெல்லாம், '' என்னை ஆயர்பாடியிலேயே வச்சுடு. அந்த ஆண்டாளோடு சேர்ந்து நானும் அவள் எங்கெல்லாம் போறாளோ அவள் கூடவே போறேன். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கிற காரணம் என்ன என்பது உனக்கு தெரியவேண்டுமா? சொல்கிறேன் கேள் :
''நீ தான் எனக்கு அந்த ஆண்டாள். என்னை மட்டுமல்ல எவரையுமே நீதான் ஆண்டவள் ''