மகாபாரத்தில் அரிய பல கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன. அதில் நாம் விதுர நீதியைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து நீ சுவராஸ்யமான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிறாயே நன்மை தரும் பல விஷயங்களை மேலே சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
விதுரர் தொடர்கிறார். திருதராஷ்டிரா எல்லா ஜீவ ராசிகளிடம் நேர்மையாக நடந்துக் கொண்டாலே சகல தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். எனவே எப்போதும் நியாமாக நடந்து கொள் என்று கூறுகிறார். மேலும் உதராணமாக பிரகலாதன் எப்படி நியாமாக நடந்து கொண்டான் என்பது பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று ஒரு கதையை ஆரம்பிக்கிறார்.
பிரகலாதனுக்கு விரோச்சணன் என்று ஒரு மகன் இருந்தான். (பிரகலாதன் தந்தை ஹிரண்ய கசிபு, பிரகலாதன் மகன் விரோச்சணன் மற்றும் விரோச்சணன் மகன் மகாபலி ஆவார்கள். ) பிரகலாதனுக்கு வயதாகிற்று. விரோச்சணன் வாலிபத்தை அடைந்தான். அப்போது சுதன்வா என்ற பிரமாணனும் அந்த ராஜ்யத்தில் இருந்தான். அங்கு கேசினி என்ற அழகிய பெண்ணும் இருந்தாள். கேசினியை மணக்க விரோச்சணனும் சுதன்வாவும் ஆசைப் பட்டார்கள். எனவே கேசினிக்கு குழப்பம் ஆயிற்று. எனவே இரண்டு பேரில் ஒருவனை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தாள். கேசினியை விரோச்சணன் சந்தித்தான். நாங்கள் தேவர்கள், பிராமணர்கள் மற்றும் அனைவரையும் வென்றாயிற்று. நான்தான் சுதன்வாவை விட உயர்ந்தவன். என்னை மணந்து கொள் என்று கேட்டுக் கொண்டான்.
கேசிநியோ உனக்கு மட்டும் தான் என்னை மணக்க தகுதியோ! சுதன்வாவுக்கு ஏன் தகுதி கிடையாது. நாளை இரண்டு பேரும் வாருங்கள் நான் எனக்கு பிடித்தமானவரை தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறினாள்.
மறு நாள் விரோச்சணன் முதலில் வந்தான். கேசினியின் அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். பிறகு சுதன்வா அங்கு வந்தான். கேசினி சுதன்வாவை நமஸ்கரித்தாள். அவனுக்கு தர வேண்டிய மரியாதையை தந்தாள். பிறகு விரோச்சணன் சுதன்வாவைப் பார்த்து நீயும் இங்கு அமர்ந்து கொள் என்று கூறினான். சுதன்வாவோ தகப்பனார் பக்கத்தில் பிள்ளை அமர்ந்து கொள்ளலாம். ஒரு சத்திரியன் அருகில் மற்றொரு சத்திரியன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு பிராமணன் அருகில் மற்றொரு பிராமணன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு உயர்ந்தவன் அருகில் மற்றொரு உயர்ந்தவன் அமர்ந்து கொள்ளலாம். நான் உனது அருகில் அமர மாட்டேன் என்று கூறினான். அதற்கு விரோச்சணன் ஆமாம் நீ கீழேயே தர்ப்பத்தை விரித்து அமர்ந்து கொள் என்று கேலி செய்தான்.
அதற்கு சுதன்வா விரோச்சனனைப் பார்த்து நான் உன்னவிட உயர்ந்தவன். நான் உட்கார்ந்திருந்தால் உனது தந்தை எனக்கு சமமாக உட்காரமாட்டார். எனவே நான்தான் உயர்ந்தவன் என்று கூறினான். இரண்டு பேருக்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி உண்டாயிற்று. விரோச்சணன் என்னிடம் உள்ள சொத்து அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன், நீ உயர்ந்தவன் என்று தெரிந்தால் அத்தனையையும் கொடுத்து விடுகிறேன் என்று கூறினான். அதற்கு சுதன்வா, வேண்டும் என்றால் உயிரை பணயமாக வைப்போம் மற்ற எந்த சொத்தும் எனக்கு தேவை இல்லை என்று கூறினான்.
இருவருக்கும் நீதியை சொல்ல ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே. எனவே சுதன்வா விரோச்சனனைப் பார்த்து இந்த தேசத்து ராஜாவும் உனது தந்தையும் ஆகிய பிரகலாதனுக்கு அந்த தகுதி இருக்கிறது. அவர் நியாயத்தை சரியாக சொல்வார். அவரிடம் செல்வோம் என்று கூறினான். விரோச்சணனும் ஒத்துக் கொண்டு பிரகலாதனிடம் செல்ல முடிவு செய்தனர்.
இருவரும் ராஜாவிடத்தில் சென்றார்கள். இருவரும் சேர்ந்து வருவதை பார்த்து விரோச்சனிடம், சுதன்வா உனக்கு நண்பனா என்று கேட்டார். அதற்கு விரோச்சணன் நாங்கள் இருவரும் நேர் விரோதம் கொண்டவர்கள் யார் உயர்ந்தவர் என்று தெரிந்து கொள்ள வந்துள்ளோம் என்று கூறினான். ராஜாவும் நடந்ததை கேட்டு உயிரைப் பணயமாக வைத்துள்ளதுப் பற்றியும் அறிந்துக் கொண்டார். பிறகு ராஜா சுதன்வாவை நமஸ்கரித்து பருத்த வெள்ளைப் பசுவை தானமாக கொடுத்தார்.
சுதன்வா, இந்த தானத்தை விட உன்னிடம் சத்யத்தை எதிர்ப் பார்க்கிறேன். எனவே சத்யத்தை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ராஜாவோ நீ பிரம்மத் ஞாநி அவனோ எனது பிள்ளை, நான் என்ன கூற வேண்டும் என்று சுதன்வாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார். சுதன்வா உனது சொத்தையும் ராஜ்யத்தையும் உனது மகனுக்கு கொடு. நீ சத்யத்தை மட்டும் சொல். எங்களில் யார் உயர்ந்தவர் என்று கூறு என்று கேட்டுக் கொண்டான்.
ராஜா இந்த தர்ம சங்கடாமான சூழ்நிலையில் நான் பொய் சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்று கூறு என்று கேட்டுக் கொண்டார். சுதன்வா பொய் சொல்பவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றி கூறினான்.
நீ ஒரு வேளை பொய் சொல்லிவிட்டால் -
1. அக்னி முன்பு கை பிடித்த மனைவியை வேறு பெண்ணிற்க்காக கை விட்டு விட்டால் முதல் மனைவிக்கு ஏற்படும் துன்பத்தை அனுபவிப்பாய்.
2. சூதாட்டத்தில் மொத்த சொத்தையும் இழந்து விட்டவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய்.
3. தலை முழுக்க அதிக பாரத்தை ஏற்றி விட்டு அவனை வெய்யிலில் விட்டால் அவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய்.
மேலும் பொய் சொல்பவர்கள் என்ன தண்டனைக்கு உள்ளாவர்கள் என்றும் சுதன்வா கூறினான்.
1. பிராநிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஐந்து தலை முறை கெட்டுப் போவான்.
2. பசுவுக்காக பொய் சொன்னால் அவன் பத்து தலை முறை கெட்டுப் போவான்.
3. ஒருவன் குதிரைக்காக பொய் சொன்னால் அவன் நூறு தலை முறை கெட்டுப் போவான்.
4. ஒருவன் ஒரு பெண் விஷயத்திற்காக பொய் சொன்னால் அவன் ஆயிரம் ஜென்மம் கெட்டுப் போவான்.
5. தங்கத்திற்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஒரு தலை முறை முன்பும் ஒரு தலை முறை பின்பும் கெட்டுப் போவான்.
ஆனால் பூமிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் எத்தனை தலை முறை உண்டோ அதனை தலை முறையும் கெட்டுப் போவன். கேசினி பூமிக்கு சமம். அவள் விஷயத்தில் பொய் சொல்லக் கூடாது. எனவே எங்களில் யார் உயர்ந்தவர் என்று சரியாக சொல் என்று கேட்டுக் கொண்டான்.
பிரகலாதன் நறுக்கு தெரித்தார் போல தனது தீர்ப்பை சொன்னார். சுதன்வா தந்தை உனது தந்தையை விட உயர்ந்தவர். சுதன்வா தாய் உனது தாயை விட உயர்ந்தவர். விரோச்ச்சனா நீ அகங்காரம் கொண்டு உள்ளாய். உன்னைவிட சுதன்வாவே உயர்ந்தவன் என்று கூறி முடித்தார். பிறகு சுதன்வாவை நமஸ்கரித்து எனது மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடு என்றும் கேட்டுக் கொண்டார்.
சுதன்வா எனக்கு உனது மகனின் உயிர் வேண்டாம். கேசினியும் எனக்கு வேண்டாம். நீ சத்யம் தவறாது பேசினாயே அது போதும் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். இவ்வாறு கதையை முடித்து விட்டு விதுரர் அமைதி காத்தார். பிறகு பாண்டவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்துவிடு என்று திருதராஷ்டிரனிடம் கூறினார்.
திருதராஷ்டிரனோ கேட்பதாக இல்லை. மேலும் தனது உரையை விதுரர் தொடர்ந்தார். மேற்கொண்டு என்ன தெரிவித்தார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.