காற்று வீசும்போதெல்லாம் குறிப்பாக அந்த மூங்கில் காட்டில் இருந்து விசேஷமான காந்த சக்தி யுடைய சப்தம் வரும் என்று ஆயர்குடி கோப கோபியர் நன்றாக அறிவார்கள். வித வித மான இசையோடு காற்றில் கலந்து வரும் அதை ரசிப்பார்கள். யமுனையின் மறு பக்க கரையில் தான் மூங்கில் காடுகள் இருந்தன.
கண்ணன் அங்கிருந்து தான் ஒரு மூங்கில் குழாயில் தனது புல்லாங்குழல் தயார் செய்து கொண்டான். மற்ற மரங்களுக்கெல்லாம் அந்த மூங்கில் கொத்து மரங்களின் மீது இயற்கையாகவே பொறாமை இருக்க இதற்கு மேல் என்ன காரணம் தேவை? .எல்லா மரங்களுக்கும் ஒரு புறம் பெருமையாகவும் இருந்தது. அனைவரும் விரும்பும் கண்ணன் அந்த மூங்கில் குழாய் மீது தனிப் பிரேமை வைத்ததால் அவை அடிக்கடி காற்று வீசாதா அது மூங்கில் காட்டிலிருந்து இன்னிசை எழுப்பாதா என்று எங்கும்.
காற்று தாங்கிக்கொண்டு வந்த இன்னிசை ஒரு பாட்டாகவே அந்த வ்ரஜ பூமி எங்கும் எதிரொலித்தது.
''புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே அந்த புருஷோத்தமன் புகழ் பாடுங்களே''
மார்கழி 20வது நாளான இன்று ஆண்டாளும் சிறுமியர்களும் வழக்கம்போலவே இன்று காலையும் நந்தகோபன் மாளிகை சென்று துயிலெழுப்ப தயாராயினர்.
யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பது ஆண்டாள் என்கிற கெட்டிக்கார சிறுமிக்கு சுலபமாக தெரியுமே. தங்கள் பாவை நோன்பு பலனளிக்க எவர் ஆசியும் அருளும் தேவையோ அவரையே இயங்க வைக்கும் சக்தி நப்பின்னை பிராட்டியே என்பதால் ஆண்டாளின் சிறுமியர் குழாம் நப்பின்னையையே வளைய வந்ததில் என்ன ஆச்சர்யம்! மாளிகையில் முன் வாசலில் அவர்களின் இனிமையான குரலில் நாராயணனையும் கிருஷ்ணனையும் போற்றி பாடினர்.
ஆண்டாள் பாடினாள். தனது பாடலிலே கண்ணனை வேண்டினாள்: அதன் சாராம்சம்:
''முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கும் தேவாதிதேவா. நாராயணா, கேளாமலேயே அனைவரையும் ரட்சிக்கும் தேவனே துயிலெழு. அம்மா, நப்பின்னைப் பிராட்டியே, உலக நாயகியே, நீயும் துயிலெழு. உங்கள் ஆசியுடன் எங்கள் நோன்பு நன்று தொடர வாழ்த்தி அருளவேண்டும். தூய மனங்களில் என்றும் வீற்றிருக்கும் நாராயணனும் பிராட்டியும் தேவர்களை எல்லாம் காத்ததுபோல் நம்மையும், நாம் வேண்டாமலேயே, கேளாமலேயே, காப்பார்கள்.''
அச்சிறுமிகள் அன்றும் யமுனை நீராடி விரதம் வழக்கம் போல் கொண்டாடினர். கை நிறையபுஷ்பங்களை எடுத்து கொண்டு வாய் நிறைய நாமாவளி சொல்லி கொண்டு வீதி வழியாக அருகே இருந்த பெருமாள் கோயில் சென்று வழிபட்டு அன்றைய விரதம் முடிந்தது.
மார்கழியில் இந்த புனித நாளில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஊஞ்சல் சேவையுடன், மாடவீதி புறப்பாடு. காலம் மாறலாம். காட்சிகள் மாறுவதில்லை!!. கோலத்தில் சற்று வேறுபாடு. அவ்வளவே!
எப்போதோ யார் செய்த புண்ணியமோ, நமக்கெல்லாம் அந்த சிறுமி கோதை ஆண்டாளாக உருவெடுத்துக்கொண்டு அளித்த புதையல் இதோ கர்ணாம்ருதமாக வில்லிப்புத்தூர் நந்தவனம் பூரா எதிரொலிக்கிறது.
''முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்''
வாசலில் மாவு எடுத்து பெரிதாக கோலம் போட்டிருந்தாள் கோதை.
செடி கொடிகளை தத்ரூபமாக வரைந்திருந்தாள் அல்லவா? அவளுக்கு மிகவும் நெருக்கமான வைதேகி என்கிற பசு அந்த கோலத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. பாவம், அந்தப் பசு. கோதை வர்ணம் தீட்டி வரைந்திருந்த செடிகொடிகளை நிஜம் என்று நம்பி ஆர்வமுடன் நாவால் நக்கி தின்ன முயற்சித்ததில் கோலம் கலைந்து விட்டது. நமக்கென்றால் மிக்க கோபம் வரும். வாயில்லா ஜீவன் என்று கூட பார்க்காமல் ஒரு கொம்பினால் அதை அடித்து விரட்டுவோம். ஆண்டாள் நம் போல் இல்லையே!. ஆனந்தமாக சிரித்தாள். பசுவை அணைத்தாள் . மெச்சினாள் . கழுத்தைக் கட்டிக்கொண்டு '' வைதேகி ஏமாந்தாயா, நிஜம் என்று நம்பின நீ ஏமாந்து போகலாமா? பாவம் உனது ஆசை நிறைவேற வேண்டாமா? நிஜமாகவே உனக்கு இலை தருகிறேன் என்று உள்ளே சென்று நிறைய அகத்திக்கீரை கட்டாக கொண்டு வந்து வைதேகியின் வாயின் ஊட்டினாள் . ( வைதேகி யின் கண்களில் இருந்து வெளிப்பட்ட நன்றியை யும், அன்பையும், பாசத்தையும் எனக்கு எழுதத் தெரியவில்லையே . வார்த்தை தேடியும் கிடைக்கவில்லையே .
இப்போதெல்லாம் வடபத்ர சாயி கோவிலில் விஷ்ணு சித்தரைச் சுற்றி நிறைய பக்தர்கள் அன்றாடம் ஆண்டாள் எழுதிய பாசுரங்களை படிக்கச்சொல்லி கேட்டு அர்த்தமும் அவர் சொல்லி புரிந்துகொண்டு மகிழ்கிறார்களே. மேற்கண்ட 20வது நாள் பாசுரம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது