22 ''செங்கண் மாலே''
இறைவன் எங்கும் உள்ளான். அவனை எப்பெயரிலும் எவர் வேண்டுமானாலும் அறியலாம் என்பதால் தான் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற பரந்த நோக்கம் நம்மிடம் உண்டு. எனினும் ஒரு தாயைப் பொறுத்தவரை எல்லாக் குழந்தைகளும் பிடிக்கும் என்றாலும் ''என் குழந்தை'' என்று நோக்கும்போது அதன் மீது அலாதி பிரியமும் பாசமும் வைப்பவள்.
கிருஷ்ணன் அவ்வாறே நம் இதயத்தில் குடிகொண்டவன். இந்த மார்கழி முப்பது நாளும் அவன் விடியற்காலை ஒவ்வொருநாளும் ஆயர்குடிப் பெண் ஆண்டாளால் துயிலெழுப்பப்பட்டு நம் அனைவரையும் வந்தடைகிறான் என்று உணரும்போது மனம் மகிழ்கிறது.
ஆண்டாளின் திருப்பாவை 21 பாசுரங்களை இதுவரை எனக்குத் தெரிந்த தமிழில், என் மனத்தையும், ஆர்வத்தையும் சேர்த்துக் கலந்து மிக்க மகிழ்வோடு பகிர்ந்து வருகிறேன்.
இது உங்களை திருப்தி கொள்ளச்செய்து, ஒரு கணம் அந்த இளம் சிறுமியை நினைக்கச் செய்தால் என் முயற்சிக்கு அதுவே அன்பர்களே, நீங்கள் எனக்கு கொடுத்த சிறந்த பரிசு, சன்மானம்.
இன்னும் என்னை திருப்திப்படுத்த நினைத்தால் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆண்டாளை அறிமுகம்செய்யுங்கள். மார்கழி மாதம் கோவிலுக்குக் கூட்டிச் செல்லுங்கள். ஆண்டாள் சந்நிதி இருக்கும். அங்கே ''இதோ உள்ளே இருக்கும் உம்மாச்சி பத்தித் தான் உனக்கு தினமும் சொன்னேன்'' என்று ஞாபகப்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகி தங்கள் குழந்தைகளுக்கு அவ்வாறு சொல்ல நேரிட்டால் நீங்கள் நினைவில் நிற்பீர்கள்!
இந்த உலகில் உண்மையாக பாடுபட்டு உழைத்தால் கைமேல் பலன் என்று நாம் கூறுகிறோம் அல்லவா? அந்த காலத்திலேயே ஆண்டாள் என்கிற சிறு பெண் இதை நிரூபித்திருக்கிறாள். தினமும் முழுமனதோடு இறைவன் மீது தீராத அன்பும் பக்தியும் கொண்டு தன்னொத்த சிறுமிகளையும் விடியற்காலை யிலேயே கூட்டிக்கொண்டு யமுனை நதியில் நீராடி மார்கழி குளிரில் நாவினிக்க மனமினிக்க நாராயணனை, பரந்தாமனாகிய கிருஷ்ணனை வேண்டி அருள் பெற விரதமிருந்தாள்.
இதோ இன்று மார்கழி 22ம் நாள் நந்தகோபன் அரண்மனையில் கிருஷ்ணனின் அறையில், நப்பின்னையின் பூரண ஆசியோடும் உதவியோடும் கிருஷ்ணனையே நேரில் கண்டு தோழியரோடு நிற்கிறாள்.
கிருஷ்ணனை அவன் அறையிலேயே பிடித்த கின்னஸ் ரெகார்ட் பெண்ணல்லவோ ஆண்டாள்.
அவள் என்ன சொல்லிப் பாடுகிறாள் இனிய குரலில் கிருஷ்ணனை நோக்கி, எனக் கோதையின் எழுத்து வடிவில் பார்ப்போமா:
''அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்''
“கிருஷ்ணா, இதோ உன் அறையில் எண்ணற்ற மாவீரர்களும் அரசர்களும் உன்னோடு மோதி, தோற்று, உன் அருமை பெருமை அறிந்து, தம் தவறை உணர்ந்து, கைகட்டி, வாய் பொத்தி, தலை குனிந்து, பணிவோடு, உன் அடிமையாக நின்றி ருப்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோமே. அதே போல் நாங்களும் உன் கட்டிலின் அருகே செயலிழந்து சரணாகதி என நிற்கிறோமே. பாரேன்! உன்னுடைய சூர்ய சந்திரர்கள் போன்ற செந்தாமரைக்கண் சற்றே திறந்து கொஞ்சம் கொஞ்சமாவது எங்கள் மேல் பட்டாலே எங்கள் ஜன்ம ஜன்மாந்தர பாபங்கள் எல்லாம் தீருமே!! எங்கள் பாவை நோன்பின் பலன் கைமேல் கிட்டட்டுமே".
இதோ இங்கே பார்த்தீர்களா?
வில்லிப்புத்தூரில் வடபத்ரசாயி ஆலயத்தின் வாசலில் நிற்கும் இருவரும் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்கள் தான். கோவில் பட்டாசார்யர் சுவாமி விஷ்ணுசித்தரை நோக்கி தலையாட்டி உள்ளன்போடு என்ன சொல்கிறார்:
"சுவாமின் என்ன ஆழ்ந்த பக்தி உங்கள் அருமைப் பெண்ணுக்குப் பார்த்தீர்களா?. தனது தூய பக்தியை அந்த ஆயர்பாடிச் சிறுமி மேல் புகுத்தி அவள் கிருஷ்ணனை நேரில் கண்டு வணங்கியது போல் சித்திரம் தீட்டியிருக்கிறாளே . உண்மையிலே இன்று உங்கள் பெண்ணுக்கு ரங்கன் காட்சி தந்தானோ என்னவோ.? அதால் தான் இப்படியெல்லாம் எழுத வருகிறதோ?''
அவள் பெற்ற அந்த அருள் கொஞ்சம் கொஞ்சமாவது சிந்தி நம் மேல் விழட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.
இன்று நாம் இதை படித்துக்கொண்டு இருக்கும் மார்கழி 22ம் நாள் வழக்கமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் என்ன விசேஷம் தெரியுமா ஸ்ரீ ஆண்டாள் பிரியா விடை காட்சி நடைபெறும். அங்கிருக்கும் பக்தர்களுக்கும், எங்கிருந்தோ அங்கு சென்று களிக்கும் பக்தர்களுக்கும் இங்கிருந்தே அதையெல்லாம் நினைத்து பார்க்கும் நமக்கும் அந்த நாராயணனின் அருள் கிடைக்க வேண்டி இன்றைய பாசுர பகுதி விடை பெறுகிறது.