23. பூவைப் பூவண்ணா
ஒவ்வொரு நாளும் நமக்கு புத்தம் புதிதாகத் தான் அமைகிறது.
புதிய எண்ணங்கள், புதிய எதிர்பார்ப்புகள். சில புதிய நம்பிக்கைகள். இதை முன்னேற்றம் என்று சொல்லலாமா? முன்னேற்றம் என்பது ஒரேயடியாக மேலே தாவுவது அல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நகர்வது.
இந்தச் சிறு பெண் ஆண்டாள், எப்படி முதலில் மற்ற ஆயர்பாடி இடைச்சிறுமியர்களை அழைத்தாள். கூட்டம் போதவில்லை என்று வராதவர்கள் வீடெல்லாம் சென்று அவர்களை தட்டி எழுப்பினாள் . அனைவரையும் ஒன்று சேர்த்து தினமும் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராட வைத்து அவர்கள் அனைவரும் பாவை நோன்பு நோற்க வைத்தாள் . பின்னர் நந்தகோபன் மாளிகை சென்றாள் . அவனை எழுப்பியதோடல்லாமல் யசோதையை, பலராமனை, நப்பின்னையை, எழுப்பினாள். எழுப்பியும் எழுந்திராத கண்ணனையும் எழுப்பிவிட்டாள்
கிருஷ்ணனை அவன் கட்டிலுக்கருகிலேயே நின்று அவர்கள் எல்லோரும் அவனது திவ்ய தரிசனம் கண்டு, அவனது க்ருபா கடாக்ஷம் வேண்டுமென்று பார்வை தங்கள் மேல் விழுந்து பாபங்கள் அகலவேண்டுமேன்று சரணாகதி அடைந்தனர் என்பது இதுவரை நாம் அனுபவித்த மார்கழி அமுது
இன்று மார்கழி 23ம் நாளில் இருக்கிறோம். இதோ இன்று ஆண்டாள் பாடும் அருமையான பாசுரம்.
''மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் அறிந்து அருளேலோர் எம்பாவாய்''
ஆண்டாள் சாதித்து விட்டாள். அவள் விரதம் பலன் கொடுக்கத் துவங்கிவிட்டதே. (நர) சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து விட்டாளே.
இந்த சந்தோஷம் நம்மை அப்படியே தூக்கி வில்லிபுத்தூரில் துளசி வனத்தில் அல்லவா போட்டு விட்டது. இதோ நமக்குத் தெரிந்த குரல் பேசுவதும் கேட்கிறதே.
ஆம், விஷ்ணுசித்தர் தான், தனது அருமை மகள் அன்று எழுதிய பாசுரத்தைப்பற்றி வடபத்ர சாயீ ஆலய பட்டாச்சாரியாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களோடு பட்டாச்சாரியாரின் பாரியாளும் கையைக் கட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறாள். மேலும் சில வைஷ்ணவர்களும் அவர்களோடு இருப்பதும் காண்கிறோம். விஷ்ணு சித்தர் அவர்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்?
ஆயர்பாடியில் ஆண்டாள் சொன்னதையே தான் விஷ்ணு சித்தரும் சொல்கிறார். ஆண்டாள் அன்று காலை நந்தகோபன் அரண்மனையில் கண்ணனைச் சந்தித்த விவரங்களைத் தான் சொல்கிறார். நாமும் தெரிந்துகொள்வது நாம் செய்த பாக்கியம்.
கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடுபவளா அந்த குட்டி ஆண்டாள். எவ்வளவு சமயோசிதம் தெரிந்தவள்.
''கிருஷ்ணா, உன்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன மனதில் தோன்றுகிறது தெரியுமா? ஒரு அடர்ந்த வனம். அதில் ஒரு பெரிய மலை. அதன் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த ஒரு பெரிய குகை. அந்த குகையில் தனது ராணியுடன் ஒரு சிங்கம் வசிக்கிறது. மழை காலம் எனவே, அடக்கமாக ராஜா சிங்கமும் ராணி சிங்கமும் உறங்குகின்றன. கொஞ்சம் மழை விட்டது. சூரிய வெளிச்சமும் கொஞ்சம் குளிரை விரட்டியடித்துவிட்டது. எனவே சிங்கராஜா எழுந்து விட்டார். தலையை அசைக்கிறார். கம்பீரமான அவரது மஞ்சள் விழிகள் சிவந்த நிறத்தை அடைந்து விட்டன. நெருப்பு உமிழ்கின்றன. எல்லாபக்கமும் நோட்டம் விடுகின்றன. அடர்ந்த பிடரியை அனாயாசமாக ஒரு உலுக்கு உலுக்குகிறார் சிங்க ராஜா. தலையைத் தூக்கியவாறு கம்பீரமாக ராஜா குகைக்கு வெளியே வருகிறார். ஒரு பெரிய பாறை எதிரே தெரிகிறதே அதன் மேல் ஏறி நின்றதும் தனித்துவமான சிம்ம கர்ஜனை ஒன்று அவரிடமிருந்து வெளிப்படுகிறது. வனாந்திரமேல்லாம் அது கர்ஜித்து எதிரொலிக்கிறது.
காயாம்பூ வர்ண மலரணிந்த கண்ணா, அந்த சிங்கம் நீயே! . உன் தலையை நிமிர்த்தி, உயர்த்தி, எழுந்து ராஜ நடை போட்டு இந்த அழகிய ரத்ன சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு '' பெண்களே, எதற்காக என்னை வந்து எழுப்பினீர்கள்?'' என்று நீ கேட்பாயானால் நாங்கள் நீ கேளாமுன்னரே எங்களுக்கு உன் அருள் உண்டு, எங்கள் நோன்பின் பயனை உன் தரிசனத்திலே அடைந்தோம் என்று அர்த்தமாக எடுத்துக்கொள்வோம். எங்கள் மீது கருணை கொண்டு எங்களை ரட்சிக்க வேண்டும். ''
ஆண்டாள் இப்படி வக்கணையாக பேசுவது நமது நன்மைக்காகவும் தான். இந்த பாசுரத்தில் ஆண்டாள் கிருஷ்ணனை நரசிம்ஹ மூர்த்தியாக பாவிப்பது அபூர்வம். என்ன வளமான கற்பனை அந்த சிறிய இடைப்பெண்ணுக்கு!
சிங்கம் இந்த இடத்தில் நரசிம்மனாக ஸ்ரீமந் நாராயணன் அவதாரமெடுத்து ப்ரஹலாதனைக்காக்க ஹிரண்யனை வதம் செய்ததை நினைவு கூர்வதாக அமைகிறது. வழக்கமாக இன்றைய தினம் வில்லிப்புத்தூரில் ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உற்சவம். மனதாலேயே நாம் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம்.