மார்கழி என்றாலே நாளுக்கு நாள் குளிர் அதிகமாகிக்கொண்டே தான் போகிறது. இருந்தும் ஆயர்பாடியில் ஆண்டாளும் அவளுடைய தோழியர்களும் சிறு பெண்களாயிருந்தாலும் விடாப்பிடியாக தங்களது பாவை நோன்பை ஸ்ரத்தையோடு நிறைவேற்றி வருகிறார்கள். கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் அருளட்டும். அவர்களுக்கு நல்ல கணவன்மார்கள் கிடைக்கட்டும். ஆண்டாளுக்கு அவள் தேடும் கிருஷ்ணனே கிடைக்கட்டும்.
ஆண்டாள் உரக்க ப்பாடுகிறாள். விடியற் காலை அமைதியில் அவள் வெங்கலக் குரல் கோவில் மணி போல் தனக்கே உரித்தான நாதத்தால் உள்ளத்தைத் தொடுகிறது. எங்கும் எதிரொலிக்கிறது.''அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்''
தெய்வத்திடம் நாம் வைக்கும் நமது பூரண பக்தி நம்மை அவரிடம் கொண்டு சேர்க்கும் என்பதை விட அவரை நம்மிடம் கொண்டு வந்து விடும் என்பது இந்த சிறு ஆயர்பாடி பெண்ணிடமிருந்து தெரிந்து கொள்வோம்!!
நேற்று மார்கழி 23ம் நாள் நடந்ததை நினைவு கூர்வோம். அவள் பாடுவதின் பொருள் என்னவாக நமக்குப் படுகிறது?
“அழகிய சிங்கமே வீறு நடை போட்டு உன் சிம்மாசனத்துக்கு வா, கம்பீரமாக எங்களை உன் காந்த விழியில் நோக்கி “என்னடி பெண்களா எதற்கு என்னை எழுப்பி இங்கு உட்கார சொல்லுகிறீர்கள்?. என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்கச்செய்யும் அளவுக்கு பரந்தாமன் கிருஷ்ணன் மீது அந்த ஆண்டாளுக்கு செல்வாக்கு இருந்தது என்றால் அவளது பக்தி எத்தனை ஆழமானது என்று புரியும் . கிருஷ்ணன் அவ்வாறு கேட்டதும் அவளும் அந்த பெண்களும் என்ன செய்தார்கள் தெரியுமா? அப்படியே ஆண் டாளும் அவள் கூட்டமும் கண்ணன் காலடியில் சரணாகதி என விழுந்தனர்.
''கண்ணா, உன் திருவடிகளே சரணம். இந்த பாதங்கள் தானே மண்ணுலகும் விண்ணுலகும் அளந்தவை. இவையல்லவோ தென்னிலங்கை சென்று ராவணாதியரை அழித்தவை. இவை தானே சகடாசுரனை உதைத்தவை. வத்சாசுரனை கன்று வடிவத்தில் வந்தவனை உதைத்து கொன்றவை. இவை தானே உன்னை சுமந்து சென்று கோவர்தன கிரியை தூக்க வைத்து குடையாக்கி இந்திரனின் சீற்றத்திலிருந்து எங்களை யெல்லாம் காத்தவை.
“கண்ணா, உன் கையில் இருப்பதென்ன கூர்வேலா? அது தானே உனக்கு சென்ற விடமெல்லாம் வெற்றியையும் சிறப்பையும் தருவது. எங்களுக்கு எது கவசம் தெரியுமா? உன்னை புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்பது. அதுவே எங்கள் மூச்சு. எங்களை என்றும் காக்கும் சுலபமான மந்திரம்.''
“அம்மா, ஆண்டாளே அழகிய ஆயர்பாடி சிறுமியே! உன் வழியையே நாம் இந்த மார்கழி 24ம் நாளை வில்லிப்புத்தூரிலும் அனுபவிக்க வேண்டாமா?
''எவ்வளவு அழகாக உங்கள் பெண் கோதை, இந்த ஆண்டாள் என்ற சிறுமியை ஆயர்பாடியில் உருவாக்கி அவளையும் அவள் தோழிகளையும் அந்த சாக்ஷாத் கிருஷ்ணனையே தரிசிக்க வைத்திருக்கிறாள்.'' தத்ரூபமாகவே காட்சியைச் சித்தரித்திருக்கிறாளே'' என்றார் வில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் கோயில் பட்டாச்சார்யர்.
விஷ்ணு சித்தர் ஆனந்தத்தில் லயித்திருந்தார்.
''சுவாமி, எல்லாம் என் ரங்கனின் வரப்ரசாதம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனது பாக்கியம் அவள் என் பெண்ணாக அவதரித்தது. இந்த மார்கழி எனக்கு வைகுண்ட வாசமாக இருக்கிறது இந்த அருமையான பாசுரங்களைக் கேட்டு மகிழ்வதற்கு நான் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.'' என்கிறார் விஷ்ணு சித்தர்.
''விஷ்ணு சித்த சுவாமி, இன்றைய பாசுரத்தைப் படித்துக்காட்டினீர்களே .அதன் அர்த்தத்தை விளக்குங்கள். கேட்க ஆவலாக உள்ளேன்'' என்றார் பட்டாச்சார்யர்.
''கோதை எழுதிய அருமையைச் சொல்கிறேன் கேளுங்கள்.''.
''அந்த ஆண்டாளும் ஆயர்குடிச் சிறுமியரும் கிருஷ்ணனைச் சந்தித்ததும் எதற்காக அவனைப் பார்க்க வந்தோம் என்பது மறந்து, அவனை வாழ்த்தி பல்லாண்டு பாடினர். உலகளந்த அவன் திருவடி போற்றினர்,
தசரதர் எப்படி ராமனைப் புகழ்ந்து அவன் ராக்ஷசர்களை அழிக்க வாழ்த்தினாரோ அதுபோல் ஆண்டாளும் அந்த ராமன் சேது பாலம் கட்டிய பராக்ரமத்தையும், சிவ தனுசு ஓடித்ததையும் புகழ்ந்தவள், கிருஷ்ணன் ஒருவேளை எங்கு தன்னைப் புகழாமல் இவள் ராமனைப் புகழ்கிறாளே என்று நினைத்துக்கொள்வானோ என்று மனதில் தோன்றியதால் உடனே சகடாசுரனையும் வத்சாசுரனையும் கிருஷ்ணன் வதைத்தது பற்றியும் புகழ்கிறாள்.
விடாமல் ஏழு நாள் கோவர்தனகிரியை ஒரு சிறு விரலால் சுமந்து ஆயர்பாடியைக் காத்ததையும் போற்றுகிறாள்.
அந்த சிறு பெண்ணுக்கு எவ்வளவு அற்புத ஞானம். எல்லாம் அந்த அரங்கன் செயல் தான்'' என்றார் விஷ்ணுசித்தர்.
பெருமாள் பிரசாதம் எடுத்துக்கொண்டு விஷ்ணு சித்தர் தனது நந்தவனத்திற்கு நடந்தார்.
வழியெல்லாம் அடுத்த நாள் என்ன பாசுரம் எப்படி வரும் என்ற ஆவலுடன் நடந்ததால் வழிநடந்த களைப்பும் இல்லை. கோதையை வாழ்த்தி அவளுக்கு வட பத்ர சாயியின் பிரசாதம் அளிக்கவேண்டும் என்ற ஒரு ஆவல் மட்டும் அவரை துளசி வன ஆஸ்ரமத்தை நோக்கி வழி நடக்கச் செய்தது.