யார் பண்டிதர்கள் - விதுர நீதி - 3

விதுரர் தனது அறிவுரைகளை மேலும் தொடங்குகிறார். திருதராஷ்டிரனிடம் பண்டிதர்கள் என்றால் யார் முட்டாள்கள் என்றால் யார் அவர்களுக்கான இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்று கீழ் வருமாறு கூறுகிறார். இதை படிக்கும்போது விதுரர் படித்தவர்கள் தான் பண்டிதர்கள் என்று எங்குமே கூறவே இல்லை. கீழ் வரும் நான்கு லட்சணங்கள் முதலாவதாக பண்டிதருக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

1. தன்னைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டவர்கள்.
2. தனக்கு தெரிந்ததை செயலாற்ற முயற்சி செய்பவர்கள்.
3. அதை செயலாற்ற முயற்சி செய்யும் போது வரும் தடங்கல்களை தாங்கும் பொறுமை உள்ளவர்கள்.
4. செய்யவேண்டிய காரியங்களை தரும சாஸ்திரம் சொன்ன வழியிலேயே செய்ய முயற்சிப்பவர்கள்.

தன்னை பற்றி ஒருவன் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை பற்றி தாழ்வாகவோ அல்லது உயர்வாகவோ நினைத்துக் கொள்ளக் கூடாது. தன்னால் என்ன செய்யமுடியும் எதை செய்ய முடியாது தனது பலம் என்ன என்று ஒருவன் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தனக்கு தெரிந்ததை செய்ய முயற்சி செய்யவேண்டும். தனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் அதை செய்யாவிட்டாலும் அவன் பண்டிதனாக மாட்டான்.

மேலும் ஒரு காரியத்தை செய்ய முற்படும் பொது இடையில் வரும் தடங்கல்களை தாங்கும் சக்தியும் ஒருவனுக்கு இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு செயலை செய்யும் போது வரும் தடங்கல்களை தாண்ட அவன் தரும வழியையே அவன் மேற்கொள்ள வேண்டும். எந்த குறுக்கு வழியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் மேல் சொன்ன நான்கும் பண்டிதனின் முதல் லட்சணங்கள் என்று விதுரர் கூறுகிறார்.

விதுரர் அடுத்து கீழ் கண்ட நான்கு காரியங்களை செய்பவன் பண்டிதன் என்று கூறுகிறார்.

1. முன்னோர்கள் செய்த நல்ல காரியங்களை தொடருபவன்.
2. முன்னோர்கள் விட்டு விட்ட கெட்ட காரியங்களை தொடராமல் விட்டு விடுபவன்.
3. நாஸ்திக புத்தியை விட்டு விடுபவன்.
4. சாஸ்திரத்தில் சிரத்தையுடன் இருப்பவன்.

நமது முன்னோர்கள் எந்த காரியங்களை நல்லது என்று செய்து வந்தார்களோ அதை தொடர்ந்து செய்து வர வேண்டும். உதாரணத்திற்கு நீராடி உணவருந்துதல். அடுத்து நமது முன்னோர்கள் எதை செய்ய கூடாது என்று ஒதுக்கி வைத்தார்களோ அதை நாம் செய்யக் கூடாது என்று முதல் இரண்டு காரியங்களாக விதுரர் கூறுகிறார்.

அடுத்து நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத பிரம்மம் போன்ற விஷயங்கள் இல்லை என்ற நாஸ்திக புத்தி இருக்கக் கூடாது என்றும் சாஸ்திரத்தில் எப்போதுமே சிரத்தையுடன் இருப்பவன் பண்டிதன் என்று கூறி முடிக்கிறார்.

அடுத்து கீழ் கண்டவைகளில் இருந்து விலகி இருப்பவனே பண்டிதன் என்று கூறுகிறார்.

1. அதிக கோபம்
2. மிக்க மகிழ்ச்சி
3. கர்வம்
4. வெட்கம்
5. திமிர்
6. துரபிமானம் (தானே எல்லோராலும் மதிக்கப் படுபவன் என்று நினைப்பவன்)

ஆக பண்டிதன் என்பவன் தனது திறமையை மறைத்துக் கொண்டு சிறு பாலனை போல் இருக்க வேண்டும் என்று கொள்ளலாம். யாரை பார்த்தும் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவர்கள் பண்டிதர்கள் ஆக மாட்டார்கள். 

ரைத்வர் என்ற மகாச்சாரியர் ஒருவர் இருந்தார். அப்போது இருந்த ஜன சுருதி என்ற மன்னனுக்கு பிரம்ம ஞானத்தை தவிர மற்ற ஞானம் வந்து விட்டது. அவனுக்கு பிரம்ம ஞானத்தை சூட்ட இரண்டு ரிஷிகள் முடிவு செய்து இரண்டு பக்ஷிகளாக ராஜன் இருக்கும் இடத்திற்கு மேலே பறந்து வந்தனர். அந்த ராஜனுக்கு பக்ஷிகளின் பாஷைகள் தெரியும்.  

அப்போது ஒரு பறவை தனது நிழல் அந்த ராஜன் மீது படுமாறு சென்றது. அதற்கு மற்றொரு பறவை அதனிடம் அந்த ராஜன் தரும சிந்தனை உள்ளவன் உன்னை எரித்து விடுவான் ஒதுங்கி செல் என்று சொன்னது. அதற்கு அந்த பறவை அவன் அவ்வாறு செய்ய அவன் என்ன ரைத்வனோ என்று கேட்டது விட்டு சென்று விட்டது. ராஜனுக்கு தான் ரைத்வன் இல்லை ஆதலால் உண்மையான ரைத்வனை தேட ஆரம்பித்தான்.

பண்டித கோஷ்டிகள், பணக்கார கோஷ்டிகள், வியாபார கோஷ்டிகள் என்று பல வித மனிதர்களிடையேயும் ரைத்வர் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வண்டி சக்கரத்தின் அருகே கிழிந்த உடைகளுடன் அழுக்காக இருக்கும் ஒருவன் தான் ரைத்வன் என்று வேலைக்காரன் சொல்ல அந்த ரைத்வனை அழைத்து வருமாறு ராஜன் ஆணை இட்டான். 

அந்த ரைத்வன், அழைக்க சென்ற சேவகனிடம் தனக்கு ராஜா என்ற ஒருவரை யார் என்றே தெரியாது தான் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான். ராஜன் ஒரு தேரை அனுப்பி அழைத்து வருமாறு ஆணை இட்டான். அதற்கு அந்த ரைத்வன் தான் வருவதாகவே சொல்லவில்லை. மேலும் தனக்கு காலும் வலிக்கவில்லை. ஆனாலும் வருவதற்கான எண்ணமே இல்லை என்றும் வர இயலாது என்றும் சொல்லிவிட்டான்.  

பிறகு மன்னன் தானே வந்து வணங்கியவுடன் அதற்கு நீ பறவை சொல்லி வந்தாயோ என்று கேட்க அவனே ரைத்வன் என்று அறிந்து ஞானத்தை புகட்டுமாறு கேட்டுக் கொண்டான். ரைத்வரும் ராஜனுக்கு பிரம்ம ஞானத்தை புகட்டினார் என்று சரித்திரம்.

எனவே உருவத்தை வைத்து யாரையும் எடை போடா முடியாது என்று கொள்ளலாம். அடுத்த அத்தியாயத்தில் பக்தி உடையவர்களுக்கான லட்சணங்கள் எவை என்று விதுரர் கூறி உள்ளதைப் பார்க்கலாம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!