எந்த காலத்துக்கும் பொருந்தும் படியாக விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு மஹா பாரதத்தில் விதுரர் மூலம் சொல்லப் பட்டுள்ளது. இது உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு கூறப் பட்டிருந்தாலும் எல்லோரும் கேட்டு பயனடையுமாறு வியாச மகரிஷியால் நமக்கு அருளப் பட்டது நமது பெரும் பாக்கியம்.
அடுத்து மூடன் என்றால் யார் என்று கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.
1. கேள்விச் செல்வம் இல்லாதவன் - அதாவது எதையுமே நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொள்பவன். நல்லோர்கள், படித்தோர்கள் சொல்வதை கேட்பவனே பண்டிதன் ஆவான்.
2. வீண் ஜம்பம் அடிப்பவன் - அதாவது கையில் ஒன்றுமே இல்லாமல், 18 மாடி வீடு கட்டுவேன் என்று ஜம்பம் அடிப்பவன் மூடன்.
3. முயற்சி எதுவும் செய்யாமல் தானாக கிடைக்கும் என்று நினைப்பவன். - எதையுமே செய்யாமல் நமது அறிவு, திறமையால் தானாகவே எல்லாம் கிடைக்கும் என்று நினைப்பவன் மூடன் ஆவான்.
4. தனது செயலை விட்டு விட்டு பிரர்த்தியார் செய்யும் தொழிலே நல்லது என்று நினைப்பவன் - அதாவது தான் செய்யும் தொழிலை தாழ்வாக நினைத்து பிறர் செய்யும் தொழில் சிறந்தது என்று நினைப்பவன் மூடன்.
5. நண்பனுக்கு/உறவினனுக்கு துரோகம் நினைப்பவன்.
6. தன்னை விட பலசாலியை பகைவனாக நினைப்பவன் - அதாவது தன்னை விட பலம் மிகவும் அதிகமாக உள்ளவனிடம் யுத்தம் செய்ய நினைப்பவன் மூடன் ஆவான்.
7. எதிலும் சந்தேகம் கொள்பவன் - தேவையற்ற சந்தேகத்தை கொள்ளாதவனே அறிவுள்ளவன் ஆவான்.
8. சீக்கிரம் செய்ய வேண்டிய காரியத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவன் - எந்த காரியத்தையும் அந்தந்த நேரத்தில் முடிப்பதே புத்திசாலித் தனமாகும். நேரம் தவறி செய்யும் காரியங்கள் அந்த காலத்திற்கு ஒப்பாமல் பயனற்று போகும்.
9. தெய்வங்களுக்கு பூஜை/அர்ச்சனை மற்றும் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யாதவன்
10. அழையாமல் வருபவன் மற்றும் பேசுபவன்.
11. பிறர் குற்றத்தை பற்றி பேசுபவன். - அதாவது தான் மீது உள்ள குற்றங்களை பற்றி நினைக்காமல் பிறர் பற்றி குற்றம் பேசுபவன். சாஸ்திரம் படி மூன்று பேருக்குத்தான் குற்றத்தை கேட்கும் அதிகாரம் உண்டு. பகவான், மகாலட்சுமி தாயார் மற்றும் தரும தேவதை. தங்களுக்கு இடப் பட்ட வேலையை மட்டும் செய்பவனே அறிவுள்ளவன் ஆவான்.
12. தன்னால் எதுவம் செய்யமுடியாது என்று தெரிந்தும் கோபித்து கொள்பவன். அதாவது கையாலாகதவன் கோபித்துக் கொள்ளுவதில் அர்த்தமே இல்லை. பேசாமல் இருப்பதே நல்லது.
மேலே சொல்லப் பட்ட விஷயங்களில் இருந்து நமக்கு மூடனுக்கு உள்ள குணங்கள் எதாவது தவறி நம்மிடம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த அத்தியாத்தில் நமக்கு பக்தி வரவேண்டுமானால் நமக்கு இருக்கவேண்டிய அவசியமான ஏழு குணங்களைப் பற்றி காண்போம்.