விதுரர் அடுத்ததாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று பத்து வரை நாம் பற்ற வேண்டியது, விட வேண்டியது என்று கணக்கு போட்டு சொல்கிறார்.
முதலில் நாம் பற்ற வேண்டிய மற்றும் விட வேண்டிய ஒன்றுகளைப் பற்றி காண்போம்.
1. இனிய தின் பண்டத்தை தனித்து அனுபவிக்கக் கூடாது. - நமக்கு சுவையான பண்டம் உண்பதற்கு கிடைத்தால் அதை தனியாக அனுபவிக்கக் கூடாது. சேர்ந்தே உன்ன வேண்டும். இதனால் மற்றவர்களின் வயிற்றெரிச்சல் நமக்கு வந்து சேராது. பிறர்க்கு கொடுத்த புண்ணியம் கிடைக்கும். அடுத்து இல்லாதவனுக்கு கொடுத்தால் அது பெருமாளுக்கு ஆனந்தத்தை உண்டாக்கும்.
2. எந்த ஒரு முடிவையும் தனித்து எடுக்கக் கூடாது. - எந்த ஒரு முடிவையும் பிறரிடம் கலந்து ஆலோசித்த பிறகே நடைப் படுத்த வேண்டும். அப்படி ஆலோசித்தால் தான் அதனால் ஏற்படும் நல்ல அல்லது பற்றிய கெட்ட முடிவுகளை முன்பே தெரிந்து கொள்ள முடியும். .
3. இரவில் காட்டு மார்கத்தில் தனித்து போகக் கூடாது. - இதனால் நமக்கு வரும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
4. இரவில் எல்லோரும் உறங்கும்போது தனித்து விழித்திருக்கக் கூடாது.
அடுத்து இந்த ஒன்றுகளுக்கு நிகரானது வேறு இல்லை எனவே இதை பற்ற வேண்டும் என்றும் கூறுகிறார்
5. சொர்க்கத்துக்கு செல்ல சத்தியம் ஒன்றேதான் வழி. இதைதவிர வேறு வழி ஏதும் இல்லை. எப்படி, கங்கையை கடக்க படகு என்ற ஒரே வழியோ அதுபோல சொர்க்கத்துக்குச் செல்ல சத்தியம் ஒன்றேதான் வழி.
6. பொறுமை என்ற குணம் ஒன்றே மற்ற குணங்களை விட சிறந்த குணம் - பொறுமை குணத்தை சிலர் நிந்தித்தாலும் இதைவிட நிகரான குணம் வேறில்லை. கோபம் என்ற புத்தியை சாந்தி என்னும் நெருப்பு அனைத்து விடும். ராமனே தனது பிராட்டியை இராவணன் கடத்தி சென்றாலும் அவனை கொல்வதற்கும் இன்று போய் நாளை வா என்று பொறுமை காட்டினார் அல்லவா. எனவே பொறுமை என்ற குணத்திற்கு நிகரான குணம் வேறு எதுவும் கிடையாது. பொறுமை ஒன்றுமில்லாதவனுக்கு இருந்தால் குணம் ஆகும். அதுவே வீரனுக்கு இருந்து விட்டால் அது ஆபரணம் ஆகும்.
7. ஒருவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் தருமம் ஒன்றே சிறந்த வழி.
8. ஒருவனுக்கு சாந்தி நிலவ வேண்டும் என்றால் பொறுமை ஒன்றே சிறந்த வழி.
9. ஒருவனுக்கு திருப்தி ஏற்பட வேண்டும் என்றால் படிப்பு ஒன்றே சிறந்த வழி.
10. ஒருவனுக்கு சுகம் வேண்டும் என்றால் யாரையும் துன்புறுத்தாத அகிம்சை ஒன்றே சிறந்த வழி.
இவ்வாறு பற்ற வேண்டிய மற்றும் விட வேண்டிய ஒன்றுகளை பற்றி விதுரர் கூறியுள்ளார். அடுத்த அத்தியாயத்தில் பற்ற வேண்டிய இரண்டுகளைப் பற்றிக் காண்போம்.