தெரிந்து கொள்ள வேண்டிய மூன்றுகள் - விதுர நீதி - 8

விதுரர் மேலும் தொடர்கிறார். கீழ்கண்ட மூன்று பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் வலியுறுத்துகிறார்.

1. மனிதர்கள் மூன்று வகைப்பட்டவர்கள்
தாழ்ந்தவன் - தான் வாழ பிறரை கெடுப்பவன். மத்திமன் - தானும் வாழ்வான் பிறரையும் வாழ விடுவான். உத்தமன் - தான் கெட்டாலும் பிறரை வாழ வைப்பான். இந்த காலத்தில் உத்தமனாக  வாழ்வது மிகக் கடினம். குறைந்த பட்சம் நாம் மத்திமனாக  வாழலாம்.

2. இந்த மூவருக்கும் தனித்து சொத்து கிடையாது
மனைவி, வேலைக்காரன் மற்றும் பிள்ளைகள். மனைவியின் சொத்து கணவர் வசமே இருக்கும். பிள்ளைகள் சொத்து தகப்பனையே சேரும். (இந்த காலத்தில் கணவனையோ தகப்பனையோ சார்ந்து இருக்காதவர்களுக்கு  இது பொருந்தாது. ) 

3. இந்த மூன்று குற்றம் நம்மை கெடுத்தே தீரும்.
பிறர் சொத்துக்கு ஆசைபடுதல். பிறன் மனை நோக்குதல் மற்றும் நமக்கு நன்மை நினைத்தவனை விட்டு விடுதல். மேற்கண்ட குற்றங்கள் உடம்புக்கு உடனடியாக நன்மை தந்தாலும் ஆத்மா நாசம் ஆகி விடும்.

4. இந்த மூன்று தோஷங்களை விட்டு விட வேண்டும்.
காமம், குரோதம் மற்றும் பேராசை. இந்த மூன்றும் இருந்தால் நரகத்தின் வாசல் நமக்காக திறந்தே இருக்குமாம்.

5. இந்த மூன்றை விட நண்பனை எதிரியிடம் இருந்து காப்பதே மேல்.
நல்ல வரம், ராஜ்யம் மற்றும் பிள்ளை பேரு.  நண்பன் எதிரியிடம் மாட்டிக் கொண்டால் மேல் சொன்ன மூன்று நன்மைகளை நாம் கேட்டு அடைவதை விட  அவனை காத்தல் மிகவும் சிறப்பானது என்று கூறுகிறார்.

6. இந்த மூன்று பேரை எந்த காலத்திலும் விட்டுவிடக் கூடாது
பக்தன், வேலைக்காரன், நம்மிடம் சரண் அடைந்தவன்.

இவ்வாறு நமக்கு இருக்க வேண்டிய சிறப்புகளை மூன்று மூன்றாக அழகாக அடுக்கி வைக்கிறார். அடுத்த அத்தியாயத்தில் நான்குகள் பற்றி என்ன சொன்னார் என்று பார்ப்போம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!