நான்கு தெய்வ பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து சொர்க்கத்துக்கு போவது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்பது அவர்கள் வாதத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது.

சோமநாதன் என்ற பக்தன் சொன்னான். நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத் தேர்ந்தவன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு.

வேதபாலன் என்ற பக்தன் அவன் கூற்றை மறுத்து பின் கண்டவாறு கூறவுற்றான். வேதங்களையும் மந்திரங்களையும் கற்று வைத்திருப்பது போர் கருவிகளை உபயோகிக்காமல் வைத்து துருப்பிடிக்க செய்வதற்கு சமம். நான் வேத மந்திரங்களை கற்றிருப்பதோடு அவற்றை என்னால் இயன்றவரை மக்களுக்கும் உபதேசிக்கிறேன். அதனால் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு.

மூன்றாவது பக்தனான குகநாதன் சிரித்தான் . கிளிப்பிள்ளை மாதிரி வேதங்களை கற்பதனாலும் பிறருக்கு ஒப்புவித்து விடுவதாலும் ஒரு மனிதனுக்கு தகுதிகள் எதுவும் அமைந்து விடாது. வேதங்களும் மந்திரங்களும் சொல்லும் உட்பொருளை கிரகித்து அந்த முறைப்படி வாழ முற்படுபவனுக்கு தான் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி உண்டு. அத்தகைய தகுதி என்னிடம் தான் அமைந்திருக்கிறது என்றான்.

 நான்காவது பக்தனான சுந்தரானந்தன் சொன்னான்
நான் என் உடலை வாட்டி வதைத்து விரதங்கள் அனுஷ்டிக்கிறேன். இரவு பகல் பாராது பூஜை புனஸ்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். நான் உங்கள் மாதிரியான வெளிப்பகட்டு வாய் வேதாந்தி அல்ல. சொர்க்கத்துக்கு போவதற்கான நியாயமான தகுதி என்னிடம் தான் அமைந்திருக்கிறது.

இவர்கள் விவாதம் செய்வதை அருகில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வறட்டி தட்டிக் கொண்டிருந்த ஒரு நரை மூதாட்டி கேட்டுக் கொண்டிருந்தாள். தன் கைவேலை முடித்துக் கொண்டு எழுந்த அந்த மூதாட்டி " நான் போனால் நிச்சயமாக சொர்க்கத்துக்கு போகலாம் " என்று கூறிக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

அவள் போன வேகத்தை பார்த்தால் அவள் நேராக சொர்க்கத்துக்கே போய்விடுவாள் என்று தோன்றியது. பக்தர்கள் நால்வரும் எழுந்து அவள் பின்னால் ஓடினார்கள்.

அவளை வழி மறித்து பாட்டி நாங்கள் எவ்வளவோ தகுதிகளை பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். என்றாலும் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று உறுதி எங்களுக்கு ஏற்படவில்லை.  நான் சொர்க்கத்துக்கு போவேன் என்று உறுதியாக சொல்லுகிறாய். எங்களிடம் இல்லாத தகுதி உன்னிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டனர்.

நான் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று சொல்லவில்லையே என்றாள் நரை மூதாட்டி.

பின்னே என்ன சொன்னாய் என்று பக்தர்களில் ஒருவன் கேட்டான்.

நான் போனால் சொர்க்கத்துக்கு போகலாம் என்று சொன்னேன் என்றாள் பாட்டி.

நீ சொல்வதற்கு வேறு ஏதாவது உள்ள அர்த்தம் இருக்கிறதா? என்று பக்தர்கள் வினாவினர்.

வெளிப்படையாக தானே பேசுகிறேன். நான் என்று சொன்னது என்னைப் பற்றி அல்ல. நான் என்ற அகந்தையை பற்றி,  அந்த நான் போய்விட்டால் அதாவது அது அகன்று விட்டால் சொர்க்கத்துக்கு நிச்சயம் போய்விடலாம் என்று சொன்னேன் என்றாள் நரை மூதாட்டி. 

இவ்வாறு சொல்லிவிட்டு பாட்டி போய்விட்டாள். நான் என்ற அகந்தைக்கு ஆளாகி நின்ற நான்கு பக்தர்களும் வெட்கத்தால் தலை குனிந்தனர்.