வைகுண்ட ஏகாதசி அன்று கண் விழிப்பது எதற்காக?

நாம் கடைப்பிடிக்கும் மற்ற விரதங்களில் இல்லாத ஒரு சிறப்பு இந்த வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து விரதம் மேற்கொண்டால் மோட்சம் கிட்டும் என்கிறது நம் ஐதீகம். எதற்காக இந்த விரதத்திற்கு மட்டும் கண் முழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் என்ற வரலாற்று கதை உங்களுக்கு தெரியுமா? தெரியாதவர்களாக இருந்தால் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று கதைதான் இது. வழக்கம்போல அசுரர்களை அழிப்பதற்கான கதையும் கூட. எது எப்படியாக இருந்தாலும் நமக்கு கூறப்பட்டுள்ள புராணக் கதைகளின் மூலம் கெட்டது செய்பவர்களுக்கு கெட்டது நடக்கும் என்ற ஒரு கருத்தினை நமக்கு உணர்த்தி விடுவார்கள். நம்மை நல்வழியில் நடத்திச் செல்லத்தான் புராணக்கதைகளை நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றுள்ளார்கள் என்பது இப்படிப்பட்ட கதைகளை நாம் தெரிந்து கொள்ளும்போது உணர்கின்றோம்.

முரன் என்ற அரக்கன் தான் செய்த கடும் தவத்தினால் அழிக்கமுடியாத அசுர சக்திகளை பெற்றார். தேவர்களையும், முனிவர்களையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தான் அந்த அரக்கன். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தஞ்சம் அடைந்தனர். ஆனால் சிவபெருமானோ விஷ்ணு பெருமானிடம் செல்லுமாறு கூறி விட்டார். விஷ்ணு பெருமானிடம் சென்ற தேவர்கள் தங்களை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றுவதற்காக விஷ்ணு பெருமான் அரக்கனிடம் போரிட்டார். போர் நீண்ட நாட்கள் தொடர்ந்தது. அந்த விஷ்ணு பகவானினாலே அரக்கனை அழிக்க முடியவில்லை. அரக்கன் வாங்கிய வரம் அப்படி. விஷ்ணு பெருமான் ஓய்வு எடுப்பதற்காக ஒரு மலையின் அடிவாரத்தில் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். ஒருநாள் அரக்கன் விஷ்ணு பெருமான் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்து விட்டான். விஷ்ணு பெருமான் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார் என்பதையும் அறிந்து கொண்ட அரக்கன் தன் ஆயுதத்தை எடுத்து விஷ்ணு பெருமானை தாக்கச் சென்றான்.

அந்த சமயத்தில் எதிர்பாராத ஒரு சக்தி விஷ்ணு பெருமானிடம் இருந்து பெண்ணுருவில் தோன்றி அந்த அரக்கனை அழித்து விட்டது. பெண்ணுருவில் தோன்றிய அந்த சக்தி தேவி கண்களை விழித்துக்கொண்டு, தூங்காமல் விஷ்ணுபகவான் தூக்கத்திலிருந்து விழித்து எழும் வரை பாதுகாத்தாள்.

தன் தூக்கத்திலிருந்து விழித்த விஷ்ணு, பெண் உருவில் இருந்த சக்தி தனக்கு பாதுகாப்பாக இருந்ததை கண்டார். தேவிக்கு ஏகாதசி என்ற பெயரை சூட்டினார். அன்று அந்த தேவி விஷ்ணுவிடம் ஒரு வரத்தை பெறுகின்றாள். ‘இந்த ஏகாதசி திதி அன்று தூங்காமல் கண் விழித்து பெருமாளை வணங்கும் பக்தர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு வாழ்க்கையில் மோட்சம் கிடைக்க வேண்டும் என்றும், மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றும், தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்றும்’ வரத்தினை பெருமாளிடம் பெற்றுக்கொண்டாள். அன்றிலிருந்து நம் முன்னோர்களால் ஏகாதசி விரதமானது கடைபிடிக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று இரவு கண் விழிக்கும் நேரத்தில் அந்த பெருமாளின் பெருமையை கூறக்கூடிய பாடல்களையும், புராணக் கதைகளையும் மட்டுமே கேட்க வேண்டுமே தவிர, பொழுதுபோக்கு பாடல்களையும், திரைப்படங்களையும் பார்த்து கண் விழித்தால் பலன் கிடைக்காது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!